சிங்கப்பூர், தென்கிழக்காசியாவைச்,சேர்ந்த எழுத்தாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ஆர்ட்ஸ் ஹவுஸ் குழுமம், ஆர்ட்ஸ் ஹவுஸ் இலக்கிய ஆதரவுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழா ஆகியவற்றின் ஏற்பாட்டாளரான ஆர்ட்ஸ் ஹவுஸ் குழுமம், அடுத்த தலைமுறை இலக்கியத் திறனாளிகளை வளர்ப்பதுடன் தென்கிழக்காசியா முழுவதும் உள்ள பல பண்பாட்டு உறவுகளை வலுப்படுத்துவதை இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தங்குவதற்கு இடமும், தனிப்பட்ட வழிகாட்டுதல், நிதி உதவி, தென்கிழக்காசியாவின் பரந்த இலக்கியச் சமூகத்துடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும்.
முழுமையான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல நன்மைகளைப் பெறுவர்.
இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் சிங்கப்பூர் எழுத்தாளர் மைல் யான் டேவும் ஒருவர். அவர் நாடக ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இவரது படைப்புகள், புனைக்கதை, நாடகம், சித்திரக்கதைகள், விமர்சனம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
தனது பரந்த நடைமுறைகள் மூலம், உரையாடல்களைத் தூண்டவும் சமூகங்களை உருவாக்கவும் முற்பட்டு வருகிறார் திரு மைல் யான் டே. எழுத்தாளர்கள் இலக்கியத் தரம், தனித்துவம், ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டனர்.
தகுதிவாய்ந்த எழுத்தாளர்கள், இலக்கியச் சமூகத்தின் உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் இறுதிவரை திரு மைல் அத்திட்டத்தில் ஈடுபடுவார்.
“இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். திறம்பட எழுதுவதை எனக்குக் கிடைத்த பரிசாகப் பார்க்கிறேன்,” என்றார் திரு மைல்.
தொடர்புடைய செய்திகள்
கொடையாளர்களின் உதவியால் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிந்ததாக நம்பப்படுகிறது. கொடையாளர்களில் இருவரான ஏவா பட்டேலும் நிலே பட்டேலும் கலைகளை ஆதரிக்கும் நீண்ட நாள் புரவலர்கள் ஆவர்.