கலையைக் காப்பாற்றுவோர் கலையால் காப்பாற்றப்படுவர் என்பதற்கு உதாரணம் இவர்.

மாணவரின்றித் தவித்தவர் இன்று மாண்புமிகு ஆசிரியர்

2 mins read
30b7947c-ee2a-4a7f-a220-356182060e29
குச்சிப்புடி நடன ஆசிரியர் நிஷிதா யாபாஜி. - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

தங்கள் கலை வாழவேண்டும், பரவவேண்டும் என்ற நோக்கத்துடன் சில ஆசிரியர்களே மக்களை அணுகி மாணவர்களாகச் சேரும்படி கேட்டதையும் அதில் சிரமங்களைச் சந்தித்ததையும் சாக்ரட்டிஸ் உள்ளிட்டோரின் வரலாறு கூற நாம் படித்திருப்போம்.

குச்சிப்புடி ஆசிரியர் நிஷிதா யாபாஜியின் நிலையும் ஐந்து ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூரில் அப்படித்தான் இருந்தது.

ஆந்திர பிரதேசத்தின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான குச்சிப்புடியை, மேலோட்டமாகக் காண்பவர்களுக்கு அது பரதநாட்டியம் போல தோன்றினாலும் பின்புலத்திலும் உள்ளுணர்விலும் அந்நடனம், தற்காலத்தில் ஆடப்படும் பரதநாட்டியத்தைக் காட்டிலும் மாறுபட்டது.

நளினத்துடன் நெளிந்து வளைந்து சுழன்று ஆடப்படும் ஆந்திர நடனம் பற்றிய குறிப்புகள் புராதன நாட்டிய சாஸ்திர நூலில் இருந்தபோதும் அதன் தற்கால வடிவத்தை வைணவத் துறவி நரஹரி தீர்த்தர் தோற்றுவித்ததாகக் கருதப்படுகிறது. சித்தேந்திர யோகி போன்ற கலைச்சிந்தனைமிக்க துறவிகளாலும் குச்சிப்புடி கூடுதல் பரிணாமங்களை எட்டின.

“குச்சிப்புடி என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அந்த நடனத்தைப் பற்றிய அறிமுகத்தை நானே விளக்க வேண்டி இருந்தது,” என்று கூறினார் திருவாட்டி நிஷிதா.

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது திருவாட்டி நிஷிதா, 2019ல் கணினித்துறையில் பணியாற்றிய தம் கணவருடன் சிங்கப்பூருக்கு வந்தபோது அவருக்கு யாரையும் தெரியாது.

பூங்காக்களுக்கும் கோயில்களுக்கும் சென்று, தாம் குச்சுப்புடி வகுப்புகளை நடத்துவதாகக் குறிப்பிடும் துண்டுச்சீட்டுகளைத் தரும்போது பலர் அவரைக் கண்டுகொள்ளாமல் நடந்து சென்றதை நினைவுகூர்ந்தார்.

ஐந்து வயது முதல் குச்சிப்புடி நடனத்தைப் பயின்று, ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காகப் பயிற்சி செய்து, சிறந்த குருமார்களால் செதுக்கப்பட்ட நிஷிதா யாபாஜிக்கு இந்த நிலை துன்பகரமாக இருந்தது.

இருந்தபோதும், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருவாட்டி நிஷிதாவுக்கு இரண்டு மாணவர்கள் சேர்ந்தனர்.

“இரண்டு மாதங்களுக்குப்பின் ஐந்து மாணவர்கள் கிடைத்தனர். பின்னர், நான் 10 மாணவர்களுடன் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

உணர்வுகளால் பிணைப்பு

தற்போது திருவாட்டி நிஷிதா, ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

கணவரைத் தவிர தொடக்கத்தில் யாரையும் தெரியாத இவருக்கு, இப்போது பல ஆயிரம் பேரின் தொடர்பு கிட்டியுள்ளது.

நடனச் சீடர்கள் சூழ அமர்ந்துள்ளார் குச்சிப்புடி ஆசிரியர் நிஷிதா யாபாஜி.
நடனச் சீடர்கள் சூழ அமர்ந்துள்ளார் குச்சிப்புடி ஆசிரியர் நிஷிதா யாபாஜி. - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

மொழி, கலாசார வரம்புகளைக் கடந்து இந்தியர், சீனர் எனப் பலருக்கும் வழிந்தோடுகிறது அவர் கற்பிக்கும் நடனம்.

குரு என்பவர் தாயைப் போன்றவர். கலை கற்கும் சீடர்கள் பிள்ளைகள் ஆவர். இந்த பந்தம் ஆழமானது என்பதால் சாதாரணமாகக் கலைஞர்கள் தங்கள் ஆசிரியர்களை மாற்றிக்கொள்ளமாட்டார்கள் என்றார் அவர்.

தம்மைத் தவிர பிற குருமார்களையும் இந்தியாவிலிருந்து வரவழைத்து வகுப்புகளைக் கற்பிக்க வைக்கிறார் இவர்.

நவரசங்களில் சிருங்கார ரசம், அதுவும் கண்ணபிரானில் முழுமையாகக் கலந்துவிட்ட காதல் உணர்வே இருக்கவேண்டிய மற்ற எல்லா உணர்வுகளின் மூலாதாரம் என்ற கொள்கையுடன் ஆடப்படுகிறது இந்த நடனம்.

“இந்த நடனத்தைப் பயில்பவர்கள், நம்பிக்கையையும் நிம்மதியையும் பெறுகின்றனர். உணர்வுகளை இலாவகமாக வெளிப்படுத்துகின்றனர். நல்ல உடற்பயிற்சியும்கூட,” என்றார் திருவாட்டி நிஷிதா.

குறிப்புச் சொற்கள்