அன்று கட்டுமான ஒப்பந்ததாரர், இன்று தேநீர்க்கடை உரிமையாளர்

2 mins read
ஏழ்மையில் பிறந்தாலும் உழைப்பால் உயரலாம். சூழ்நிலை நம்மை முட்டித் தள்ளினாலும் மீண்டெழலாம்.
32ba886b-8f20-4aa0-ad90-001ace63240d
சுடச்சுட தேநீர் ஆற்றும் ஜெஃப்ரி.  - படம்: ஜெஃப்ரி ஃபெர்னாண்டஸ்
multi-img1 of 2

மலேசியாவின் சிலாங்கூரைச் சேர்ந்த ஜெஃப்ரி ஃபெர்னாண்டஸ், 26 வயது இளையரே ஆனாலும் அதற்குள்ளாக வாழ்க்கையில் பல மேடுபள்ளங்களைக் கண்டவர்.

சிலாங்கூரின் ராவாங் லிட்டில் இந்தியா பகுதியில் டிஎஸ் காப்பிக்கடையை நடத்திவரும் ஜெஃப்ரி, மலையாளியான தம் தாயாரின் தேநீர் செய்முறைகள் சிலவற்றை நன்கு கற்று, அதனைத் தம் தொழிலிலும் பயன்படுத்தி வருகிறார்.

ஏழு, எட்டு வயது வயதுவரை பெற்றோர் இருவரும் பல வேதனைகளை அனுபவித்ததை நேரில் கண்ட ஜெஃப்ரி, இனியும் வறுமையை அனுபவிக்கக்கூடாது என மனவுறுதிகொண்டார். 

“நான் பிறந்தபோது என் தாயாருக்கு 19 வயதுதான். என் அப்பா சீக்கியர், என் அம்மா கிறிஸ்துவர். குடும்ப எதிர்ப்புகளைக் கடந்து திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு உறவுகள் கைகொடுக்கவில்லை. இளம் இணையராக அவர்கள் பல நேரங்களில் உணவுக்குச் சிரமப்பட்டதையும் நேரில் பார்த்தேன்,” என்று அவர் கூறினார்.

மூன்று பிள்ளைகளுடன் இவருடைய பெற்றோர் பாடுபட்டு கட்டுமானத் தொழிலைத் தொடங்கினர். அதனையடுத்து, மெல்ல மெல்ல அக்குடும்பம் ஏழ்மையின் பிடியிலிருந்து மீண்டுவந்தது. 

ஜெஃப்ரி ஃபெர்னாண்டஸ் கட்டுமானத் தள நிர்வாகியாக இருந்தபோது எடுக்கப்பட்ட படம்.
ஜெஃப்ரி ஃபெர்னாண்டஸ் கட்டுமானத் தள நிர்வாகியாக இருந்தபோது எடுக்கப்பட்ட படம். - படம்: ஜெஃப்ரி ஃபெர்னாண்டஸ்

வயதிற்கு மீறிய தன்னம்பிக்கையையும் தலைமைத்துவப் பண்பையும் தம் தோற்றத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்த வேண்டியிருந்த ஜெஃப்ரி, குறுகிய காலத்தில் அவற்றை நன்கு கற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடியான சூழல்.

“தவறுகளுக்கு இடமே இல்லை. ஏனெனில், ஒவ்வொரு தவறும் பண வரவைப் பாதிக்கும்,” என்றார் ஜெஃப்ரி. 

நன்கு வளர்ந்த அந்தத் தொழிலை கொவிட்-19 கிருமிப்பரவல் முடக்கியது. கட்டுமானத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களது குடும்ப நிறுவனமும் நலிவடைந்தது.

அதனால், மற்றொரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டிய சூழலுக்கு இவர் தள்ளப்பட்டார். 

“பிறர்க்கு மட்டுமின்றி என் கனவும் நனவாக வேண்டும் என விரும்பினேன். எப்படியேனும் சொந்த நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது,” என்றார் ஜெஃப்ரி.

தேநீர்க்கடை ஒன்றைத் திறக்க தந்தை முன்வைத்த யோசனையை முதலில் ஏற்கத் தயங்கினார் இவர். 

“வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற வேண்டுமே என்பதை நினைத்தபோது முதலில் என் மனம் ஒப்பவில்லை. ஆனால், பின்னர் அத்தொழில் மீதான ஆர்வம் வளர வளர, அதன் மேன்மையை உணர்ந்தேன்,” என்றார் ஜெஃப்ரி. 

தொழிலில் தமக்கு உதவிவரும் காதலியை அடுத்த ஆண்டு திருமணம் செய்யப்போவதாகக் கூறிய ஜெஃப்ரி, தமது கடையை உணவகமாக உயர்த்த ஆசைப்படுகிறார். 

குறிப்புச் சொற்கள்