சிங்கப்பூரில் தூக்கமின்மைப் பிரச்சினைக்காக மருத்துவ உதவியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிங்கப்பூர் மனநல ஆய்வு, அதில் பங்கெடுத்தோரில் நான்கில் ஒருவருக்கும் மேல் அல்லது கிட்டத்தட்ட 27.6 விழுக்காட்டினருக்கு ஒழுங்கான தூக்கமில்லை என்று குறிப்பிட்டது.
தூக்கமின்மை என்பது போதுமான அளவு அல்லது தரமான தூக்கம் கிடைக்காத நிலை. படுக்கையில் நீண்ட நேரம் விழித்திருப்பது, நள்ளிரவில் அடிக்கடி விழிப்பது அல்லது அதிகாலையிலேயே தூக்கம் கலைந்துவிடுவது அதன் அறிகுறிகளாகும்.
தொடர்ச்சியான தூக்கமின்மையால் உடலில் மோசமான விளைவுகள் உண்டாகக்கூடும். இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன் போன்ற பாதிப்புகள் வரக்கூடும். மேலும் கவனச்சிதறலும் மனச்சோர்வும்கூட ஏற்படக்கூடும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதற்கும் அது வழிவவிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், தூக்கமின்மை தொடர்பான பரிந்துரைகள் கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாகச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் மனநலப் பிரிவு ஆலோசகர் டாக்டர் லியோனார்ட் எங் கூறுகிறார். தூக்கமின்மைக்காகச் சிகிச்சை பெறுவோரில் பெரும்பான்மையினர், 50க்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
‘ஏஷியாஸ்லீப்’ நிலையத்தைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டைநல நிபுணர் டாக்டர் கென்னி பாங், அண்மை ஆண்டுகளில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 10 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறினார். தம்மைப் பார்க்கவரும் நோயாளிகளில் பத்தில் இரண்டு பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக டாக்டர் பாங் சொன்னார். தூக்கத்தில், மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய நோயாளிகள் அதிகமானோர் வருவதாக அவர் சொன்னார்.
ஒவ்வொரு வயதினருக்கும் தேவையான தூக்கத்தின் அளவு மாறுபடும். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அன்றாடம் 11 முதல் 14 மணிநேரத் தூக்கம் அவசியமாகும். 6 முதல் 13 வயது வரையிலான மாணவர்களுக்கு 9 முதல் 11 மணிநேரமும் 14 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயதினருக்கு 8 முதல் 10 மணிநேரமும் உறக்கம் தேவை என்று சொல்லப்படுகிறது. 18 முதல் 64 வயது வரையிலான பெரியவர்கள், 7 முதல் 9 மணிநேரம் வரை உறங்குவது அவர்களின் உடலுக்கும் மன நலத்திற்கும் உகந்தது என்று கூறப்படுகிறது. 65 வயதை எட்டியவர்கள் ஆரோக்கியத்தைப் பேண 7 முதல் 8 மணிநேரம் வரை உறங்குவது அவசியமெனக் கருதப்படுகிறது.
முறையான உடற்பயிற்சி செய்வது, படுக்கையறையில் அமைதியான சூழலை உருவாக்குவது, உறங்குவதற்கு முன்பு மின்சாதனங்களைத் தவிர்ப்பது முதலிய பழக்கவழக்கங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று டாக்டர் பாங் கூறினார். ஆரோக்கியமான வாழ்விற்கு ஆழ்ந்த உறக்கம் இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

