பணியிடத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது

பணியிடத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது

3 mins read
07380e2e-f896-46b1-bd0b-3b993293f043
விபத்து நிகழாமல் கவனமுடன் பணியாற்றி, ஏறத்தாழ 10 மில்லியன் பாதுகாப்பான வேலைநேரச் சாதனையை நிகழ்த்தி, வேலையிடத்தை பாதுகாப்பாகப் பேணிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. - படம்: ராமலிங்கம் வடிவேல்

விபத்து நிகழாமல் கவனமுடன் பணியாற்றி, வேலையிடத்தைப் பாதுகாப்பானதாகத் திகழச் செய்த வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

கட்டுமானம் உள்ளிட்ட தொழில்துறைகளில் விபத்து நிகழாமல் பணியாற்றும் நேரம் ‘பாதுகாப்பான வேலை நேரம்’ (சேஃப் மேன்ஹவர்ஸ்) என குறிப்பிடப்படுகிறது. 

அவ்வகையில், எவரும் காயமுறாத வகையில் வேலையிடத்தைப் பாதுகாப்பாக வைத்து, ஏறத்தாழ 10 மில்லியன் ‘சேஃப் மேன்ஹவர்ஸ்’ மணி நேரத்தை எட்டிய சாதனையைக் கொண்டாடியது ‘ஆக்டிவ் ஃபயர்’ என்ற பாதுகாப்பு அமைப்புகள் தனியார் நிறுவனம்.

ஊழியர்கள், நிர்வாகத்தினர், இதரப் பங்காளிகள் என பலர் இணைந்து சாத்தியப்படுத்திய இந்த நிகழ்வை அங்கீகரித்தது ‘தி கிரேட் ராப்: 10 மில்லியன் எடிஷன்’ எனும் அந்நிகழ்ச்சி.

எவரும் காயமுறாத வகையில், ஏறத்தாழ 10 மில்லியன் பாதுகாப்பான வேலை நேரத்தை எட்டிய சாதனையைக் கொண்டாடியது ‘ஆக்டிவ் ஃபயர்’ பாதுகாப்பு அமைப்புகள் தனியார் நிறுவனம்.
எவரும் காயமுறாத வகையில், ஏறத்தாழ 10 மில்லியன் பாதுகாப்பான வேலை நேரத்தை எட்டிய சாதனையைக் கொண்டாடியது ‘ஆக்டிவ் ஃபயர்’ பாதுகாப்பு அமைப்புகள் தனியார் நிறுவனம். - படம்: ராமலிங்கம் வடிவேல்

கடந்த ஆண்டிறுதியில் ‘அனைத்துலகக் குடியேறிகள்’ தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டாலும், இந்த மைல்கல்லை எட்டுவதற்கான முயற்சி என்றென்றும் தொடரும் என்று ‘ஆக்டிவ் ஃபயர்’ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

தொழிற்பேட்டைகள், பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்புக் கருவிகள் தீச்சம்பவம் குறித்த எச்சரிக்கை அளிக்கும்  சாதனங்களைப் பொறுத்தும் பணியை அந்நிறுவனம் மேற்கொள்கிறது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளாகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி வந்த அந்நிறுவனம், கடந்த நான்கு ஆண்டுகளாக ‘அனைத்துலகக் குடியேறிகள்’ தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டார் ஆக்டிவ் ஃபயர் பாதுகாப்பு அமைப்புகள் தனியார் நிறுவன இயக்குநர் திரு ராமலிங்கம் வடிவேல், 48.

ஊழியர்கள் இங்கு எப்படிப் பாதுகாப்பாக வந்தார்களோ, அப்படியே பாதுகாப்பாக தங்கள் தாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதனை ஒவ்வொரு நாளும்  நினைவூட்டி வருகிறோம்; அதற்கு சான்றுதான் விபத்துகள் இல்லாத இந்த வேலை நேரம் என்று அவர் கூறினார்.

இந்தச் சாதனையை எட்ட பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு, திட்டத்துறை, சேவைப் பராமரிப்பு, பயிற்சி எனப் பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றியதை திரு வடிவேல் நினைவுகூர்ந்தார்.

‘‘உழைப்பவர்களைக் கொண்டாடுகிறது இந்த நாள். அவர்களின் உழைப்பைக் கொண்டாட முடிவெடுத்ததன் நோக்கமே இந்த அங்கீகாரம், விருது,’’ என்றார் அவர்.

நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகக் கடந்த ஆண்டில்  சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

அவ்வகையில், பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான விருதைப் பெற்றார் ‘எஃபிஷியன்ட் எலக்ட்ரிக்கல்’ தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சின்னத்தம்பி  ராஜேஷ் 48. 

அவ்விருது தம் குழுவினருக்கான விருது என்ற திரு ராஜேஷ். ‘‘நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறர் பாதுகாப்பை தங்கள் பாதுகாப்பாகக் கருதி ஒருசேர முயன்றதன் விளைவு இந்தப் பாராட்டு,’’ என்றார்.

விழா அரங்கில் பலரது பாராட்டையும் ஒருசேரப் பெற்றது ‘ஹீரோ அவார்ட்’ . 

தன்னையும் பாதுகாத்துப் பிறரையும் பாதுகாப்பவர்களுக்கு நிறுவன அளவில் தரப்படும் அவ்விருதைத் திட்ட உதவி மேலாளர் திரு பிச்சையப்பன சதீஷ் குமார், 36, வென்றார்.

தம்மோடு பிறரையும் பாதுகாப்பவர்களுக்கு நிறுவன அளவில் தரப்பட்ட ‘நாயகர்’ விருதை (ஹீரோ அவார்ட்) வென்றார் திரு பிச்சையப்பன சதீஷ் குமார்(இடது).
தம்மோடு பிறரையும் பாதுகாப்பவர்களுக்கு நிறுவன அளவில் தரப்பட்ட ‘நாயகர்’ விருதை (ஹீரோ அவார்ட்) வென்றார் திரு பிச்சையப்பன சதீஷ் குமார்(இடது). - படம்: நிக்கோல் ஆஷ்லி

எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றிய அனுபவமிக்கவர் இவர்.

மின்னியல், இயந்திரவியல் பல்வேறு துறைகளை சார்ந்த ஏறத்தாழ 35 பேர் திரு சதீஷின் குழுவில் பணியாற்றுகிறார்கள்.

‘‘எப்படி வேலை பார்க்க வேண்டும், எவ்வாறு வேலை பார்க்கக்கூடாது, வேலைக்கான சூழல் பாதுகாப்பானதாக இருக்கிறதா, ஊழியர்கள் வேலையிடத்திற்கு ஏற்ற பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிசெய்வது என ஒவ்வொரு நாளும் பணியிடத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பை முழுவதுமாக உறுதிசெய்வது அவசியம்,’’ என்று அவர் கூறினார்.

விருது பெற்றது இன்னும் சிறப்பாகப் பணியாற்ற ஊக்கமளிக்கும் என்று கூறிய திரு சதீஷ்,  குழுவை வழிநடத்தும்போது, தமது பாணியில் சில வேளைகளில், ஊழியர்களிடம் அவர்களது குடும்பத்தினரை நினைவூட்டுவது தமது வழக்கம் என்றார்.

தாம் பின்பற்றிவந்த வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளை சக ஊழியர்களும் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யத் தவறக்கூடாது என்பதே தம் கடப்பாடு என்று திரு சதீஷ் குறிப்பிட்டார்.

ஊழியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பங்குதாரர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, பாதுகாப்பு இலக்குகளை அடைவதில் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. 

குறிப்புச் சொற்கள்