சிங்கப்பூரில் மார்பகப் பரிசோதனைகளை விரைவுபடுத்தவும் சீராக்கவும் செயற்கை நுண்ணறிவு கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ‘சாட்டா காம்ஹெல்த்’ எனப்படும் அறநிறுவன மருத்துவ அமைப்பு, ‘லூனிட்’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை, மார்பகப் பரிசோதனைகளில் வெற்றிகரமாக உட்புகுத்தியுள்ளதாக இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவித்துள்ளது.
இது குறித்த தம் அனுபவத்தைப் பற்றிப் பேசினார் ‘சாட்டா காம்ஹெல்த்’தில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் மூத்த பிரதான கதிர்ப்படப்பதிவாளர் (Senior Principal Radiographer) மற்றும் படிமவியல் துணை இயக்குநர் (Asst Director Diagnostic Imaging) பெட்டி மாத்தியூ.
“நாங்கள் ஓராண்டுக்கு இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்த பிறகு, இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
“இந்தத் தொழில்நுட்பம் ஒரு கதிரியலர் (radiologist) போலவே கதிர்ப்படங்களை (X-Ray images) சில வினாடிகளிலேயே ஆராய்ந்து நோய்களைக் கண்டறியும். இதனால், தம் பரிசோதனையின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள மக்கள் காத்திருக்கவேண்டிய நேரமும் அதனால் ஏற்படும் மன உளைச்சலும் குறைகிறது. ஒரு மணி நேரத்தில்கூட கைக்கு முடிவுகள் வந்துவிடும்,” என்றார் பெட்டி.
செயற்கை நுண்ணறிவினால் பரிசோதனைக்காக நேரம் குறைவதோடு, கதிர்ப்படத்தை ஆராயத் தேவைப்படும் கதிரியலர்களின் எண்ணிக்கையும் குறைகிறது எனக் கூறினார் பெட்டி.
“இதற்குமுன் ‘Blind Reporting’ எனும் முறையில் ஒரு கதிர்ப்படத்தை ஆராய இரு கதிரியலர்கள் தேவைப்பட்டனர். ஆனால் செயற்கை நுண்ணறிவு வந்தபிறகு, அதுவே ஒரு கதிரியலரைப் போன்று ஆராய்வதால், அதோடு ஒரு கதிரியலர் ஆராய்ந்தால் போதும்,” என்றார் பெட்டி.
வளர்ந்துவரும் சிங்கப்பூரின் மருத்துவத் தேவைகளோடு ஒப்பிடுகையில் நிலவும் கதிரியலர் பற்றாக்குறையைச் சமாளிக்க இது நல்ல உத்தி என அவர் கருதுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
‘செயற்கை நுண்ணறிவினால் வேலை பறிபோகாது’
செயற்கை நுண்ணறிவினால் கதிரியலர் என்ற வேலை இல்லாமல் போகாது; அதனால் மருத்துவத் துறையினர் அஞ்சாமல் செயற்கை நுண்ணறிவோடு இயைந்து பணியாற்றக் கற்றுக்கொள்ளவேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
‘லூனிட்’ மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளான மைக்ரோகேல்சிஃபிகேஷன்ஸை (microcalcification) 96 விழுக்காடு சரியாகக் கண்டறிய முடிவதாகவும் கூறிய அவர், இதனால் மார்பகப் புற்றுநோயைத் தொடக்கக் கட்டத்திலேயே மேலும் எளிதாக கண்டறிய முடியும் என்றார்.
எதிர்காலத்தில் மார்பகச் சோதனை மட்டுமன்றி, அல்ட்ராசோனோகிராபி (Ultrasonography), நெஞ்சக ஊடுகதிர் (Chest X-Ray) போன்றவற்றுக்கும் செயற்கை நுண்ணறிவு முறைகளை ‘சாட்டா காம்ஹெல்த்’துக்குக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார் பெட்டி.

