‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’: கழிவுகளைக் குறைப்போம்; பணத்தை மிச்சப்படுத்துவோம்

‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’: கழிவுகளைக் குறைப்போம்; பணத்தை மிச்சப்படுத்துவோம்

7 mins read
122181a8-e77d-45d8-9e2c-25cfa7711a5c
அளவுக்கு அதிகமான உணவுப் பொருள்களை வாங்குவதால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு; பணமும் விரயமாகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்யவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் குறைவான கழிவுகளை உருவாக்கும் எளிமையான வாழ்வியல் முறைதான் முதல் படி என கருதுகின்றனர் இளையர்கள் மித்ரா, ஸ்ரீவர்ஷினி இருவரும்.

2022ஆம் ஆண்டில் மட்டும் வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பைகள், உணவுக் கலன்கள், கரண்டுகள் உட்பட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருட்களின் எடை 265,000 டன். ஒரு மணி நேரத்துக்கு 30,000 கிலோகிராம், ஒரு நிமிடத்தில் 500 கிலோகிராம், ஒவ்வொரு நொடியும் 8 கிலோகிராம் என்ற கணக்கில் இந்தக் கழிவுகள் சேர்ந்துள்ளன. கரியமில வெளியேற்றத்துக்கும் எரியூட்டப்பட்ட குப்பைகளை சேகரிக்கும் நிலமான செமாகாவ் நிலப்பரப்பின் கொள்ளளவு 2035ஆம் ஆண்டுக்குள் நிரம்புவதற்கும் குப்பைகளின் அளவு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் உணவுப் பொட்டலக் கலன்களின் செலவு $2,200ஆக கணிக்கப்படுகிறது.

“எடுப்பது, பயன்படுத்துவது, குப்பைகளில் வீசுவது” என்ற வகையிலான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பொருள்களின் பயன்பாடு நீடித்த நிலைத்தன்மையற்றது.

அதே 2022ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட உணவுக் கழிவுகளின் எடை 813,000 டன். மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட உணவுக் கழிவுகளை ஒதுக்கியபின்னர், அந்த அளவு ஒரு நாளுக்கு ஒரு நபரின் 2 கோப்பை சோற்றுக்கு நிகர் என்றும் 46,000 ஈரடுக்குப் பேருந்துகளின் எடை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளைக் குறைக்க, நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்ய வீண் விரயத்தைத் தவிர்க்கவும், தவிர்க்கச் சொல்லி பிறரை ஊக்குவிக்கவும் தங்களால் இயன்ற வகையில் முயல்கின்றனர் மித்ராவும் ஸ்ரீவர்ஷினியும்.

தொழில்நுட்பம் மூலம் நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும் மித்ரா

தனது தாயார் சிறு வயது முதலே நல்ல பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை தமக்கு போதித்தாகச் சொல்கிறார் நன்யாங் பல்கலைக்கழக மாணவர் மித்ரா ரென் சச்சிதானதன்.

நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும் நன்யாங் பல்கலைக்கழக மாணவர் மித்ரா ரென் சச்சிதானதன். 
நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும் நன்யாங் பல்கலைக்கழக மாணவர் மித்ரா ரென் சச்சிதானதன்.  - படம்: மித்ரா

உணவு வீணடிப்பது இவர் வீட்டில் பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது.

இதனால், பொறியியல் படிப்பில் சேர்ந்தபின், உணவகங்களில் உணவு வீணாவதைத் தவிர்க்க தனது தொழில்நுட்பக் கல்வி எந்த வகையில் உதவும் என சிந்திக்கத் தொடங்கினார்.

இதன் விளைவாக, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் முறைகளைப் பயன்படுத்தி உணவு வீணாவதைத் தவிர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இவர் உணவகங்களின் கடந்த காலத் தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணிக்கும் அமைப்பை உருவாக்கி வருகிறார். 

அதன் அடிப்படையில் எவ்வளவு மூலப் பொருள்கள் வாங்க வேண்டும், எவ்வளவு சமைக்க வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அதிகளவு உணவு சமைக்கப்பட்டு வீணாவது, கையிருப்புச் சமையல் பொருள்கள் பயனற்று வீணாவது ஆகியவை தவிர்க்கப்படும் என்கிறார் மித்ரா.

இந்த நேரடி பயன்கள் மட்டுமின்றி, மிகையான உணவு சமைக்கப் பயன்படும் தண்ணீர், எரிபொருள் என பலவற்றை வீணாக்காமல் காக்கலாம் என்றும் சொல்கிறார்.

வரும் ஆண்டு இறுதிக்குள் இந்த அமைப்பை நிகழ் நேர சோதனைக்கு தயார் செய்யும் நோக்கில் பயணித்து வரும் இவர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யும் உறுதியுடன் இருப்பதாகச் சொல்கிறார். 

தனிநபராக ஒவ்வொருவரும் உணவு விரயத்தைக் குறைக்கவும் வழிகள் பல உண்டு.

  1. கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கும் முன்னரே என்னென்ன வாங்கவேண்டும் என்று பட்டியலிட்டு அதன்படியே பொருள்களை வாங்கிவருவது
  2. குறுகிய காலகட்டத்தில் காலாவதியாகக்கூடிய உணவுப் பொருள்களைக் கண்ணுக்கு எட்டும் வகையில் வைத்திருப்பது
  3. அளவுக்கு அதிகமான உணவுகளை வீண்போகாமல் இருக்க சரிவர பொட்டலமிட்டு வைப்பது
  4. சாப்பிட்டு முடிக்கமுடியாது என்றால் குறைந்த அளவு சோறு அல்லது நூடுல்ஸ் கேட்பது
  5. சாப்பிடாத துணை உணவுப் பொருள்களை வேண்டாம் என்று முன்கூட்டியே கூறுவது

உணவு விரயத்தைக் குறைக்க மேலும் வழிகள் பற்றி அறிய, go.gov.sg/sytwltips இணையப்பக்கத்தை நாடுங்கள். 

சிறுவர்களிடம் நீடித்த நிலைத்தன்மையை கொண்டு சேர்க்கும் சங்கீதா நாயர்

நீடித்த நிலைத்தன்மைக்கான முனைப்பு தம்முடன் நிறைவடையாமல், அடுத்த தலைமுறைக்கு அந்த எண்ணத்தை விதைக்கும் நோக்கில் விளையாட்டுகளை வடிவமைத்துள்ளார் சங்கீதா நாயர்.

நீடித்த நிலைத்தன்மை குறித்த விளையாட்டுகளை வடிவமைத்துள்ளார் சங்கீதா நாயர்.
நீடித்த நிலைத்தன்மை குறித்த விளையாட்டுகளை வடிவமைத்துள்ளார் சங்கீதா நாயர். - படம்: சங்கீதா

நீடித்த நிலைத்தன்மை மற்றும் நிலையான வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ள இவர் தனக்குத் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்காக ஏதேனும் செய்ய வேண்டுமென்கிற ஆர்வம் இருந்து வந்ததாகச் சொல்கிறார்.

பிஞ்சு உள்ளங்களில் இந்த உணர்வைப் பதிய வைப்பது அவசியம் என்கிறார் சங்கீதா. இதனைச் சிறுவர்களுக்கு வலியுறுத்தும் வழி குறித்த சிந்தனையில் தொடர்ந்து மூழ்கினார்.

விளையாட்டு மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிறந்த வழி எனும் முடிவுக்கு வந்தார் சங்கீதா.

தொடர்ந்து, ‘தி ஈக்கோ ஸ்டேட்மெண்ட்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி   ‘காராங்குணி டிரையல்’ எனும் கழிவு, மறுசுழற்சி குறித்த தகவல்களைக் கற்றுத்தரும் பகடை விளையாட்டு, சரியான முறையில் குப்பைகளை பிரிப்பது, உணவின் முக்கியத்துவம், வீணடிக்காமல் இருப்பதன் அவசியம் ஆகியவற்றை உணர்த்தும் அட்டைகள் கொண்ட விளையாட்டு ஆகியவற்றை மூன்று வயதுக்கும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைத்தார்.

இதன் மூலம் சிறுவர்களிடம் இந்த விழிப்புணர்வை கொண்டு செல்லும் தன் கனவை சாத்தியப்படுத்தியுள்ளார் சங்கீதா.

எதிர்காலத்தில் இதனைப் பல பள்ளி மாணவர்களை விளையாடச் செய்வதன் மூலம், அவர்களிடம் நீடித்த நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்த்த நோக்கம் கொண்டுள்ளார் சங்கீதா.

சுற்றுச்சூழல் மீதான அக்கறையின் பிரதிபலிப்பாக பலதுறைத் தொழிற் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்குகள் நடத்துவது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருள்களைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது என களத்தில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகிறார் சங்கீதா.

ஒவ்வொருவரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். அதற்கான வழிகளும் பல உண்டு.

  1. கைகளிலோ, சட்டைப்பைகளிலோ, பைகளிலோ வைத்துக்கொள்ளக்கூடிய பொருள்களை வாங்கும்போது நெகிழிப் பைகள் வேண்டாம் எனக்கூறுவது
  2. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை வீட்டு வாசல் அருகே அல்லது உங்கள் பைகளில் வைத்துக்கொள்வது
  3. மீண்டும் பயன்படுத்தக்கூடிய உணவுக் கலன்களையும் கரண்டிகளையும் கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுவதற்காக அலுவலகங்களில் வைத்திருப்பது
  4. எங்கெங்கெல்லாம் முடியுமோ அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பொருள்களை வேண்டாம் என்று கூறுவது (உதாரணத்திற்கு இணையம் மூலம் பொருள் வாங்கும்போது கடைகளில் உணவுவாங்கி வரும்போது குவளைகளைப் பிடிக்கக்கூடிய வைப்பான், கரண்டிகள், உருஞ்சிகளைத் தவிர்ப்பது)
  5. மீண்டும் பயன்படுத்தக்கூடிய கரண்டிகளைப் பயன்படுத்துவது
  6. குப்பைப் போடும் பைகளுக்கு பதிலாக ரொட்டித் துண்டு பைகள் அல்லது கழிவறை டிஷு பைகளைக் கொண்டு குப்பைப் போடலாம்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பைகளால் உங்களுக்கு ஆண்டுக்கு $30 செலவாகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கலன்களால் ஓராண்டுக்கு $550 செலவாகிறது. பயனீட்டு பழக்கங்களில் சிறிய மாற்றங்கள் செய்வதால் பணத்தையும் மிச்சப்படுத்தலாம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். பண சேமிப்புப் பற்றி மேலும் அறிய go.gov.sg/sytwl இணையப்பக்கத்தை நாடுங்கள்.

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாநாட்டின் இளையர் பிரதிநிதி ஸ்ரீவர்ஷினி

நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரி முழுதும் தன்னால் இயன்ற அளவு நீடித்த நிலைத்தன்மை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஶ்ரீவர்ஷ்னி காசிராஜன்.

நீடித்த நிலைத்தன்மை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஸ்ரீவர்ஷ்னி காசிராஜன்.
நீடித்த நிலைத்தன்மை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஸ்ரீவர்ஷ்னி காசிராஜன். - படம்: ஸ்ரீவர்ஷ்னி

தொடக்கல்லூரிக் காலத்திலிருந்தே இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஈடுபாடு கொண்ட இவர், ‘Youth Action Challenge’ இல் கலந்து கொண்டு வென்றார். ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாநாட்டின் இளையர் பிரதிநிதியாக துபாய் சென்றுவந்தார்.

இதனைத் தொடர்ந்து, கழிவுகளிலிருந்து காகிதப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.

‘கிளைமேட் எஸ்ஜி’ உள்ளிட்ட அமைப்புகளின் சமூக ஊடகங்களின் காணொளிகளின் மூலமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தனது சொந்த சமூக ஊடகங்களிலும் விழிப்புணர்வு செய்திகளை பதிவிடுகிறார்.

ஒரு வாரத்துக்கான உணவு திட்டத்தை வகுத்து அதற்கேற்றபடி பொருள்கள் வாங்குவது, சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காத பொருள்கள் வாங்கிப் பயன்படுத்துவது என சொந்த வாழ்விலும் பலவற்றைக் கடைபிடிக்கிறார்.

இதனால் குறையும் செலவு குறித்துப் பேசி நண்பர்களையும் இவற்றை பின்பற்ற ஊக்குவிக்கிறார் ஸ்ரீவர்ஷினி.

உணவு விரயத்தைக் குறைப்பதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பதும் செலவைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்தும் என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும்.

சிறு துளி பெரு வெள்ளம் எனும் கூற்றுக்கேற்ப சிறு தொகையாக நாம் நினைக்கும் செலவுகளைத் தொடர்ந்து நாம் செய்துவந்தால் அது கூடுதல் தொகைக்கு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளும்போது அந்தச் செலவே நமக்கு சேமிப்பாக மாறிவிடும்.

தேவைக்கு அதிகமாக உணவுகளை வாங்கி வீணாக்குவதாலும் காலாவதியாவதாலும் ஓராண்டில் ஒரு நபருக்கு $1,400க்கு மேல் செலவாகிறது. அதனால் நீங்கள் சாப்பிடாத துணை உணவுப் பொருள்களைத் தவிர்ப்பதும் காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும் முன்னர் குளிர்பதனப் பெட்டியைப் பார்த்துவிட்டு செல்வதும் ஊக்குவிக்கப்படுகிறது.   

‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ இயக்கம்

சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பங்காளிகள் தேசியச் சுற்றுப்புற அமைப்பு மே 14ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் ‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ (Say YES to Waste Less campaign (SYTWL)) திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை நல்கியுள்ளன.

தேவைக்கு அதிகமாக உணவுகளை வாங்கி வீணாக்குவதாலும் காலாவதியாவதாலும் ஓராண்டில் ஒரு நபருக்கு $1,400க்கு மேல் செலவாகிறது.
தேவைக்கு அதிகமாக உணவுகளை வாங்கி வீணாக்குவதாலும் காலாவதியாவதாலும் ஓராண்டில் ஒரு நபருக்கு $1,400க்கு மேல் செலவாகிறது. - படம்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

வெளியே செல்லும்போது பைகள், புட்டில்கள், கலன்களை எடுத்துச்செல்வது, தேவையான அளவு மட்டும் உணவு வாங்குவது போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தெரிவுகளைத் தங்களது தினசரி வாழ்வில் அரவணைக்கும் விதமாக அனைவரையும் ஊக்குவிக்க தேசியச் சுற்றுப்புற அமைப்பும் அதன் பங்காளிகளும் முனைகின்றன.  

வாடிக்கையாளர்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் சலுகைகள், பணியிடத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, உணவுக் கழிவுகளை அடையாளம் கண்டு அதற்கான மறுசுழற்சி முறைகளைச் செயல்படுத்துவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட இணையக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வது உட்பட பல்வேறு வழிகளில் அவர்கள் தங்களின் பங்கை ஆற்றுகின்றன. 

அப்படிப்பட்ட ஓர் அமைப்புதான் உலக வனவுயிர் நிதி - சிங்கப்பூர். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேசியச் சுற்றுப்புற அமைப்பின் ‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ திட்டத்தில் இணைந்துள்ள உலக வனவுயிர் நிதி அமைப்பு, ‘பிளாஸ்டிக் ஆக்‌ஷன்’ (பேக்ட்) எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நெகிழி மூலம் சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் களையவும் நெகிழிப் பயன்பாட்டை சுழற்சி பொருளியலை நோக்கி செலுத்தவும் அத்திட்டம் முனைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு தியோங் பாரு சந்தையுடன் இணைந்து நெகிழி போத்தல்களை மறுசுழற்சிக்காக தந்தால் உணவுப் பற்றுச்சீட்டை வழங்கியது உலக வனவுயிர் நிதி அமைப்பு.
2019ஆம் ஆண்டு தியோங் பாரு சந்தையுடன் இணைந்து நெகிழி போத்தல்களை மறுசுழற்சிக்காக தந்தால் உணவுப் பற்றுச்சீட்டை வழங்கியது உலக வனவுயிர் நிதி அமைப்பு. - படம்: எஸ்பிஎச் மீடியா

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் ‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ திட்டத்தில் தமது பங்காளிகள் இணைந்து சேவையாற்ற ஊக்குவித்துவருவதாகவும் தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்கிவருவதாகவும் சிங்கப்பூர் உலக வனவுயிர் நிதி அமைப்பின் சந்தை உருமாற்றப் பிரிவின் தலைவர் ஸ்டெஃபனி லிம் கூறினார்.

சுழற்சிப் பொருளியல் இலக்குகளை நிறுவனங்கள் அடைய உதவுவது, ஆய்வுகள், முன்னோட்டத் திட்டங்களில் சில துறைகளுடன் இணைந்து செயல்படுவது, திறன் வளர்ச்சி, வளங்கள் வழங்குவது என வர்த்தகங்கள் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க ஊக்குவிக்க ஆலோசனைகளையும் வளங்களையும் ‘பேக்ட்’ மூலம் உலக வனவுயிர் நிதி அமைப்பு வழங்குகிறது.

துறைசார் பங்காளித்துவம் மூலம் கழிவுகளைக் குறைக்க இலக்கு கொண்டும் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு உதவ முனைந்துள்ளது அமைப்பு.

அண்மையில் சிங்போஸ்ட், யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, ‘பெட்டர் பேக்கேஜிங்’ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து மறுபயனீடு செய்யும் பொட்டலத் திட்டத்தை மின்வர்த்தகத் துறையில் செயல்படுத்தியுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஆறு மாதங்களில் அந்நிறுவனங்களின் பயனீட்டாளர்கள் 15,000 பேரில் மூன்றில் ஒருவர் மறுபயனீடு செய்யப்பட்ட உறைகளைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கும் மேற்பட்டோர் தாமாகவே முன்வந்து பொட்டலம் இடும் பொருட்களை மீண்டும் திருப்பி தந்துள்ளனர். முன்னோட்டத் திட்டத்திற்குப் பிந்திய கருத்துக்கணிப்பில் மேலும் அதிக பயனீட்டாளர் கல்வி மூலமும் வசதி மூலமும் அந்த விகிதத்தை 75க்கும் மேல் கொண்டுசெல்லமுடியும் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் நீடித்த நிலைத்தன்மையுடனான மின்வர்த்தகச் சூழலைப் பேண அது வழிவகுக்கும் என்று அமைப்பு நம்புகிறது.

மறுபயனீடு செய்யும் பொட்டலத் திட்டத்தை மின்வர்த்தகத் துறையில் செயல்படுத்தியுள்ளன சிங்போஸ்ட், யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, ‘பெட்டர் பேக்கேஜிங்’.
மறுபயனீடு செய்யும் பொட்டலத் திட்டத்தை மின்வர்த்தகத் துறையில் செயல்படுத்தியுள்ளன சிங்போஸ்ட், யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, ‘பெட்டர் பேக்கேஜிங்’. - படம்: எஸ்பிஎச் மீடியா

உலக வனவுயிர் நிதி - சிங்கப்பூர் அமைப்பு இதர நிறுவனங்களுடனும் வர்த்தகப் பங்காளிகளுடனும் கழிவுகளைக் குறைக்கும் கடப்பாட்டில் இணைந்து செயல்படுகிறது. இந்த ‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மேலும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் தங்கள் வாடிக்கையாளர்களைக் கழிவுகளைக் குறைக்கும் பாதையில் அரவணைத்து வருகின்றன. உதாரணத்திற்கு,

  1. ஹார்வி நோர்மன் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள் மின்னியல் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முனைந்தால் $10 பற்றுச்சீட்டு வழங்குகிறது. 
  2. ஹாலிடே இன் சிங்கப்பூர் ஏட்ரியம் தங்குவிடுதியில் தங்கும் வாடிக்கையாளர்கள் இரு இரவுகள் அல்லது அதற்கு மேல் தங்கும்போது அறையை சுத்தம் செய்யும் சேவையை நாடாமல் இருந்தால் கூடுதல் 1 ஐஎச்ஜி புள்ளிகள் பெறுவர். 
  3. சொந்த குவளைகளைக் கொண்டுசென்று ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் பானங்கள் வாங்கினால் 50 காசு கழிவு கிடைக்கும். 
  4. சொந்த குவளைகளில் டோஸ்ட் பாக்ஸ் நிறுவனத்தில் பானம் வாங்கிச் செல்வோருக்கு 10 காசு கழிவு. 
  5. அவரவர் கலன்களைக் கொண்டு வந்து கிரீன்டாட் நிறுவனத்தில் உணவு வாங்கிச் செல்வோருக்கு 20 காசு கழிவு.

பங்காளித்துவ அமைப்புகள் வழங்கும் சலுகைகள் பற்றி மேலும் அறிய go.gov.sg/sytwli இணையப்பக்கத்தை நாடலாம்.

-
குறிப்புச் சொற்கள்