தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் கைகொடுத்த தமிழர் பேரவை

2 mins read
0ca71c0f-80ca-4f2f-b3af-6bad65a26b66
கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களுடன் மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை. - படம்: தமிழர் பேரவை

தொடக்கப் பள்ளி மாணவர்கள் 158 பேருக்கு $300 முதல் $500 வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கித் தமிழர் பேரவை கைகொடுத்துள்ளது.

ஹோம்டீம் என்எஸ்@காத்திப் வளாகத்தில் சனிக்கிழமை (ஜனவரி 10) சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையிடமிருந்து கல்வி உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். 

கல்வி, இளையர் மேம்பாடு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் சமூகத்தின் பங்களிப்பை எடுத்துரைக்க இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. 

நிதிச் சவால்கள் இருந்தபோதிலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சமுதாயம் துணைநிற்கும் என்ற முக்கியச் செய்தியை இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உணர்த்தியது.

“கடந்த 25 ஆண்டுகளாக, 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் கனவுகளை நனவாக்க, ஏறக்குறைய $500,000 கல்வி உதவித்தொகையை வழங்கி ஆதரவளித்துள்ளோம்,” என்று தமிழர் பேரவைத் தலைவர் பாண்டியன் பெருமையுடன் கூறினார். 

இந்த நிகழ்ச்சி, அடுத்த தலைமுறைக்கு நிதி மற்றும் தனிப்பட்ட ஆதரவை வழங்குவதற்காகச் சமூக உறுப்பினர்களும் வணிக நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படும் கம்பத்து உணர்வைப் பறைசாற்றுகிறது.

“தனது 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழர் பேரவை, நமது இந்தியச் சமூகத்திற்கு, குறிப்பாகத் தமிழ் மொழி தழைத்தோங்க மிகச் சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது,” என்று திரு முரளி பிள்ளை குறிப்பிட்டார்.

“மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கையிலும் பணியிலும் உயர்வடையும்போது, இந்த அமைப்பு அவர்களுக்கு வழங்கிய இந்த ஊக்கத்தை நினைவில்கொண்டு, சமூகத்திற்கு அவர்களால் முடிந்த உதவியைச் செய்து மற்றவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார். 

கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களுடன் மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை உள்ளிட்டோர். 
கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களுடன் மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை உள்ளிட்டோர்.  - படம்: தமிழர் பேரவை
மைமுன், இர்ஃபான், ஆரியா ஆகியோரின் குடும்பத்தினர்.
மைமுன், இர்ஃபான், ஆரியா ஆகியோரின் குடும்பத்தினர். - படம்: காமினி ஹாஷ்வின்

ஃபேரர் பார்க் தொடக்கப்பள்ளியில் பயிலும் மைமுன், 10, இர்ஃபான், 9, ஆரியா, 7, ஆகிய மூன்று சகோதரர்களின் பாட்டி நூர்ஜஹான் சின்னதம்பி, 61, “நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு இதுபோன்ற உதவித்தொகைகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன,” என்றார்.

“பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்கள் போன்றவற்றை வாங்குவதோடு எஞ்சியுள்ள பணத்தை அவர்களின் வங்கியில் நான் போட்டுவைப்பேன். இது அவர்களின் எதிர்காலச் செலவுகளுக்கு உதவும்,” என்றும் அவர் சொன்னார். 

அக்‌ஷரா குடும்பத்தினர்.
அக்‌ஷரா குடும்பத்தினர். - படம்: விக்னேஷ்வரி கடிவீரன்

பிரின்சஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை 2ல் பயிலும் எட்டு வயது அக்‌ஷராவின் தாயார் விக்னேஷ்வரி கடிவீரன், 42, “என் மகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. பெற்றோர்முன் அமைச்சரிடம் உதவித்தொகையைப் பெற்றதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி,” என்று கூறினார். 

அட்மிரல்ட்டி தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை 2ல் படிக்கும் எட்டு வயது கேஷ்வின் பிரகாஷின் தந்தை பிரகாஷ் ஆறுமுகம், 43, “இந்த உதவித்தொகை என் மகனின் பள்ளிக்குத் தேவையான பொருள்கள், போக்குவரத்துச் செலவு, பள்ளிக் கட்டணம் ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்