சமூக ஊடக அடிமைத்தனத்தின் பின்னுள்ள அறிவியல்

2 mins read
c4331b0d-7892-4fa6-bc61-0d3727cbfcc8
சமூக ஊடக அடிமைத்தனத்திற்கு இளையர்கள் ஆளாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. - படம்: ஊடகம்

முன்னர் மக்களை ஒன்றிணைக்க உதவுவதாகக் கூறப்பட்ட சமூக ஊடகம், இன்று பலரின் தனிமைக்குக் காரணமாக விளங்குகிறது.

சமூக ஊடகக் கட்டமைப்புகள் நெடுநேரம் மக்களைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு அதன்மீது சார்புநிலை ஏற்படுவதோடு அதற்கு அடிமையும் ஆகிறார்கள்.

இப்போக்கு குறித்த அறிவியல் பின்னணியைக் கண்டறிய, பிராமிஸ்சஸ் ஹல்த்கேர் மருந்தகத்தின் (Promises Healthcare) சமூக ஊடக அடிமைத்தன சிகிச்சை, பொது மனநல சிகிச்சை வல்லுநரான டாக்டர் சரத் ஹரிதாஸுடன் தமிழ் முரசு உரையாடியது.

“சமூக ஊடகமும் போதைப்பொருள்களும் மூளையில் டோப்பமைன் வெளிப்பாட்டை அதிகரிப்பதால் உடனடி இன்ப உணர்வு ஒன்று ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியை மீண்டும் மீண்டும் உணர மனம் ஏங்கும். இதனாலேயே, மக்கள் அவற்றுக்கு அடிமையாகின்றனர்,” என அவர் கூறினார்.

இருவித அடிமைத்தனங்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, போதைப்பொருள் அதிக உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும், சமூக ஊடகம் அதிக மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று டாக்டர் குறிப்பிட்டார்.

ஆனால், இரண்டிலிருந்தும் மீண்டுவர மருத்துவ உதவி அவசியமென்றும் அவர் குறிப்பிட்டார்.

“எனது அனுபவத்தில், இன்றைய இளையர்கள் பலர் பதற்றம், உறக்கம் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்நோக்குகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், கொவிட்-19 கிருமித்தொற்றுக் காலத்தின்போது பலரும் சமூக உறவுகளுக்காகவும் தனிமை உணர்வைத் தவிர்க்கவும் சமூக ஊடகத்தைச் சார்ந்திருந்ததே ஆகும். இச்சார்புநிலை இன்றும் தொடர்கிறது.

“சமூக ஊடக அடிமைத்தனத்திற்கு ஆளாகும் அபாயம் 18 வயது முதல் 23 வயதுவரை உள்ளோருக்கு அதிகம் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“பிள்ளைகள் முன்பு ஆர்வத்துடன் செய்துவந்த நடவடிக்கைகளின்மீது அவர்களுக்கு ஆர்வம் குறைந்தாலோ, சமூக நடவடிக்கைகளுக்கு மாறாக சமூக ஊடகத்தில் நேரம் செலவிடுவதை விரும்பினாலோ அல்லது கல்வியில் பின்தங்கினாலோ அவர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வரலாம்,” என்று டாக்டர் சரத் விளக்கினார்.

இப்பிரச்சினையைக் கையாள டோப்பமைன் நோன்பு புகழடைந்து வரும் ஒரு தீர்வாகும். குறிப்பிட்ட காலத்திற்கு டோப்பமைன் சுரக்கும் எவ்விதச் செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பதே அந்நோன்பு.

“இதன்மூலம் சிறந்த பயன்களைப் பெற குறைந்தது இரண்டு வாரங்கள் இதைச் செய்ய வேண்டும். ஆனால், படிப்படியாகக் கால அவகாசத்தை அதிகரிப்பதே நல்லது. முதல்முறையே அதிக நேரம் செய்வது பரிந்துரைக்கப்படாது,” என்று டாக்டர் சரத் கூறினார்.

“இப்பிரச்சினையைக் கையாள வேறு சில வழிமுறைகளும் உண்டு. இளையர்களுக்குச் சமூக ஊடகங்களின் பின்னுள்ள அறிவியல், உளவியல் உண்மைகளைக் கற்பிப்பது, அளவான பயன்பாட்டின் நன்மைகளைத் தொடர்ந்து எடுத்துரைப்பது, மின்னிலக்கக் கருவிகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவும் அம்சங்களைப் பற்றி தெரிவிப்பது போன்றவை பெரிதும் துணைபுரியும்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்