தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலின சமத்துவமும் வஞ்சக சிந்தனைப்போக்கும்

2 mins read
91db09d2-4e0a-46e0-95a4-cadf24521438
பெண்கள் சூழ்ச்சிக்காரர்களாகச் சில இலக்கியங்களிலும் பழமொழிகளிலும் சித்திரிக்கப்பட்டாலும் சூழ்ச்சித்திறம் பொதுவாக ஆண்களுக்கு அதிகமாக இருப்பதாகப் புதிய ஆய்வின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. - படம்: பிக்சாபே

பெண்களை நம்பக்கூடாது; பெண்கள் நயவஞ்சகம் மிக்கவர்கள் போன்ற சிந்தனைகள் ஆண்களிடையே நிலவிய காலம் உண்டு.

தற்போது பல நாடுகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து புதிய வாய்ப்புகளைப் பெற்று வந்தாலும் சில நாடுகளில் பாலின சமத்துவமின்மை தொடர்கிறது.

சமத்துவமின்மை எங்கு மேலோங்கி உள்ளதோ, அங்கு சூழ்ச்சித்திறமும் வஞ்சகமும் அதிகம் இருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

‘குணநலன் சார்ந்த மனோவியலுக்கான அனைத்துலக ஆய்வு’ டிசம்பர் 2024ல் வெளிவந்துள்ளது.

பெண்கள் சூழ்ச்சிக்காரர்களாக இலக்கியங்களிலும் பழமொழிகளிலும் சித்திரிக்கப்பட்டாலும் சூழ்ச்சித்தன்மை பொதுவாக ஆண்களுக்கு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

எந்தச் சமூகத்திலும் ஆண்களுக்கு இந்தத் தன்மை, பெண்களைக் காட்டிலும் அதிகம் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன. இருந்தபோதும், இரு பாலாருக்கும் இடையிலான இந்த இடைவெளிக்கான காரணம் தெளிவாகக் கூறப்படவில்லை.

48 நாடுகளைச் சேர்ந்த 56,936 பெரியவர்கள், சூழ்ச்சித்தன்மையை அளவிடும் ‘MACH-IV’ என்ற சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் பொதுவாக அதிக சூழ்ச்சித்திறம் வாய்ந்தவர்கள் என்று சோதனையின்வழி கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்படும் சமூகங்களில் பெண்களின் சூழ்ச்சித்தன்மை குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெண்களுக்குச் சமமாகத் தரப்படும் வாய்ப்புகளால் சூழ்ச்சிக்கான தேவை குறைவாக இருப்பதாகப் பெண்ணுரிமை ஆர்வலர் அஷாந்தி தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

இருந்தபோதும், வளர்ச்சியடைந்த நாடுகளில் வளரும் பெண்கள், குறிப்பாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சூழ்ச்சிக்கான அவசியத்தைக் கற்கின்றனர்.

“வேலையிடங்களிலும் சமுதாயத்திலும் கலாசாரம் மாறினாலும் வீட்டில் சமத்துவமின்மை சார்ந்த கலாசாரம் சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நிலவுவதால் அவர்களுமே பாதிக்கப்படுகின்றனர்,” என்றார் அஷாந்தி.

சமூகத்தின் பல்வேறு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் இளம் பெண்களுக்குத் துணிச்சல் தரும் வகையில் ஒட்டுமொத்த சமூகமே செயல்பட வேண்டும்.

பிறரை, குறிப்பாக பெண்களைத் துன்பப்படுத்தியோ வீழ்த்தியோ ஒருவர் வாழவேண்டும் என்பதற்கான அவசியம் இல்லை என்ற அடிப்படையான உண்மையை நம் மனம் உணரவேண்டும். அப்படி உணரும்போது, நல்ல தீர்வுகளை உருவாக்குவதற்கான புத்தாக்க முயற்சிகள் கூடும்.

இளம் ஆண்கள் இதற்குச் சிறந்த முறையில் பங்காற்றலாம். இளம் பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு ஊக்கம் தருவதை அவர்கள் தங்களது கடமையாகக் கருதலாம்.

குறிப்புச் சொற்கள்