புத்தாக்கச் சிந்தனைகள், அட்டகாசமான செயல்பாடுகள். இவ்வாறாக, இளையர்கள் சிலர், திரையுலக ஆர்வத்தைப் பயன்படுத்தி இணையவாசிகளை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றனர்.
‘வின்செனட்டி’ என்ற பெயர், பத்தாண்டுகளுக்கு முன், அரவிந்த் குமாரின் நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கப்பட்ட வெறும் வார்த்தையாக இருந்தது.
இப்போது அந்தப் பெயரைத் தாங்கியுள்ள இன்ஸ்டகிராம், டிக்டாக் பக்கங்களை 100,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
வின்செனட்டியின் உருவாக்கம், பண வளத்தாலன்று. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் படித்திருந்தபோதும் அரவிந்தின் மனது, காணொளிப் பதிவு செய்வதில் ஈடுபாடு கொண்டிருந்தது.
“என் கனவைக் கேள்வியுற்ற சிலர், உனக்கு கேமரா பயன்படுத்தத் தெரியாதே,” என்று கூறினார்.
அவர்கள் கூறுவதிலும் தவறில்லை. ஆனால், என்னால் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்றார் அரவிந்த்.
திரைத்துறையுடன் அவரது முதல் தொடர்பும் எதிர்பாராவிதமாக நடந்தது. சிறுவனாக இருந்தபோது திரைப்பட விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் தம்மை நடிகர் கமல்ஹாசன் பார்த்து அன்புடன் ‘ஹாய்’ என்று சொல்லித் தலைமுடியைச் செல்லமாகத் தடவிவிட்டுச் சென்றதாக அரவிந்த் முகமலர நினைவுகூர்ந்தார்.
“ஈராண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனை சிங்கப்பூரில் நடந்த ‘இந்தியன் 2’ செய்தியாளர் கூட்ட நிகழ்ச்சியில் திரும்பச் சந்திக்க நேரிட்டது. அந்த நிகழ்ச்சியில் இம்முறை அவருடன் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை. இருந்தபோதும் அவருடன் ஒரே அறையில் இருந்த அனுபவம் என்னைப் பூரிப்படைய வைத்தது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திரைத்துறை மீதான இந்த ஆர்வம் வின்செனட்டியின் அடையாளத்துடனும் வர்த்தகப் பண்புகளுடனும் கலந்துள்ளது. எங்களை ஒருவித கிறுக்குத்தனம் முன்னெடுத்துச் செல்கிறது. சிறிய இடத்தில் இருந்துகொண்டும் எல்லாரும் திரும்பிப் பார்க்கும் விதமான படைப்புகளை எங்களால் உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
பல மாதங்களாக வருவாய் இல்லாத நிலை, கூட்டுச் சேர்வோர் திடீரென மாயமாவது, வேலை செய்தும் அதற்கான கட்டணம் தராமல் நழுவிச் செல்பவர்கள் எனப் பல்வேறு சோதனைகளை இந்த இளம் கலைஞர் சந்திக்க நேரிட்டது.
தற்போது இந்தக் குழுவில் ஆறு பேர் செயல்படுகின்றனர்.
விளம்பரங்களை வெளியிட முற்படும் நிறுவனங்கள் இப்போது அவர்களது தளங்களை நாடி வருகின்றனர். 12 கப்கேக்ஸ், ஈரோடு அம்மன் மெஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வின்செனட்டி சேவையாற்றுவதுடன் வசந்தம், ஒலி 968 உள்ளிட்ட மீடியாகார்ப் தளங்களுடன் கூட்டுச் சேர்ந்து இளம் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
ஊடகத் துறையில் சிங்கப்பூர் இந்தியர்கள் கூடுதலானோர் சேரவேண்டும் என்பது அரவிந்தின் விருப்பம்.

