ரமலான் மாதத்தின்போது நோன்பு துறப்பதற்காகப் பள்ளிவாசலை நாடும் இறையன்பர்கள், அம்மாதத்தின் கடைசி பத்து நாள்களைக் கூடுதல் சிறப்புடன் போற்றுகின்றனர்.
முஸ்லிம்கள் நோன்பிருக்கும் ரமலான் மாதத்தின் கடைசி பத்து அல்லது ஒன்பது இரவுகளுக்குள் இடம்பெறும் ‘லைலத்துல் கதர்’, மிகப் புனிதமான, சிறப்புமிக்க இரவாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
‘ரஹமத்துடைய பத்து’, ‘பரக்கத்துடைய பத்து’, ‘தவ்பாவுடைய பத்து’ என ரமலான் மாதத்தின் நாள்கள் முறையே வகுக்கப்பட்டுள்ளன. பாவ மன்னிப்பைத் தேடுவதற்கான ரமலானின் கடைசி 10 நாள்களான இந்த ‘தவ்பாவுடைய பத்து’ காலகட்டத்தில் ஒற்றைப் படை இரவுகள் ஆக அதிகச் சிறப்புடையதாகும். ஒற்றைப்படை இரவுகளில் மார்ச் 27ஆம் தேதி வந்த இரவுக்குத் தலையாய சிறப்பு இருக்கக்கூடும் என்பது அவர்கள் கருதினர்.
அதனையடுத்து, மலபார் பள்ளிவாசலுக்கு வியாழக்கிழமை இரவு வருகை மேற்கொண்ட பாலர் பள்ளி ஆசிரியர் சனா ஃபாத்திமா, 40, கூட்டுத் தொழுகைக்காக கிடைத்துள்ள வாய்ப்பால் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். பெங்களூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துள்ள திருவாட்டி சனா, இரண்டாவது முறையாக ரமலான் மாதத்தை இங்கு கழிக்கிறார்.
கம்போங் கிளாம் வட்டாரத்தில் விக்டோரியா ஸ்திரீட்டுக்கும் ஜாலான் சுல்தானுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் அமைந்துள்ள மலபார் பள்ளிவாசலில் இந்தப் பள்ளிவாசல் மலையாளிச் சமூக முஸ்லிம்களால் கட்டப்பட்டது.
கேரளத்தின் மலபார் கடற்கரையைச் சேர்ந்த இந்தச் சமூகம், இந்தியாவில் இஸ்லாத்தை முதன்முதலாகத் தழுவிய சமூகங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.
இந்த அறுபது ஆண்டு பழைமைமிக்க பள்ளிவாசல், 1963ல் சிங்கப்பூரின் அப்போதைய தலைவர் யூசுஃப் இஷாக்கால் திறக்கப்பட்டது. பின்னர் 1995ல் நீல-வெள்ளைத் தரையோடுகளால் (lapis lazuli tiles) புதுப்பிக்கப்பட்டது
இந்தியாவில் இருந்தபோது சக பெண்களுடன் சமயம் சார்ந்த சிறப்பு வழிபாடுகளை வீட்டிலேயே மேற்கொண்டதாகக் கூறிய அவர், சிங்கப்பூரில் பள்ளிவாசல் செல்லும் வழக்கம் வலுவாக இருப்பதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறினார், இரு மகன்களுக்குத் தாயான திருவாட்டி சனா.
தொடர்புடைய செய்திகள்
அவரைப் போல, நாள்தோறும் கிட்டத்தட்ட 1,000 பேர் ரமலான் மாதத்தின்போது வருவதாக பள்ளிவாசலின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜாஃபர் சாதிக் தெரிவித்தார். வருகையாளர்களில் 70 முதல் 80 விழுக்காடு வரையிலானோர் வெளிநாட்டினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நான்கு அசார் வழிபாடுகளுடன் தொடங்கி, முதலில் நோன்புக் கஞ்சி விநியோகம் தொடங்கும். இதற்காக 13 பங்களாதேஷிய தொண்டூழியர்கள் எங்களுக்கு உதவுகின்றனர்,” என்றார்.
சூரிய மறைவுக்குப் பிந்திய நோன்புத்துறப்புக்குப் பிறகு மக்ரிப் தொழுகை, இஷா தொழுகை, தராவீஹ் தொழுகை ஆகியவை முறையே நடைபெறுகின்றன.
இஸ்லாத் கோட்பாடுகளின்படி, 1,000 மாதங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த ‘லைலத்துல் கதர்’ இரவின்போது முஸ்லிம்கள் பலர் மனமுவந்து அறச்செயல்களைச் செய்துவருவதாக பள்ளிவாசலின் முன்னாள் இமாம் முகம்மது ஷஃபீக் தெரிவித்தார்.
“இறைத்தூதர்கள் இப்ராகிம், நோவா போன்றோர்க்கு மிக நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தனர். தற்கால மனிதர்களில் பலருக்கோ ஆயுள் கிட்டத்தட்ட 60, 70 வயதில் முடிந்துவிடுகிறது. இவர்கள் செய்யும் அறத்தைப் பல மடங்காக்குகிறது இந்தச் சிறப்புமிக்க ‘லைலத்துல் கதர்’ இரவு. இந்தப் பத்து நாள்களை நோன்பிலும் தொழுகையிலும் கழிக்கும் மாந்தர்கள், மனத்தில் இன்னும் எளிமையானவர்களாகவும் நற்சொற்களைக் கேட்டு நடப்பவர்களாகவும் மாறிவிடுவார்கள்,” என்று போதகர் ஷஃபீக் கூறினார்.

