மீடியாகார்ப் வசந்தம் தொலைக்காட்சியின் தொடரான ‘அச்சமில்லை மனமே’ நாடகத்தொடர் தற்போது அதன் இரண்டாவது பருவத்தை எட்டியுள்ளது.
திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம், ‘மீவாட்ச்’ மற்றும் யூடியூப் தளங்களில் ஒளிபரப்பாகும் இத்தொடர், முந்தைய பருவத்தைவிடச் செரிவான கதையமைப்பைக் கொண்டுள்ளது.
இந்தத் தொடர் குறித்து கருத்துரைத்த அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் குமரன் சுந்தரம், 40, “முதல் பருவத்தில் இருந்த வலுவான கதாபாத்திரங்களே இந்தக் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தூண்டின,” என்றார்.
இந்தத் தொடரில் ‘டாய்ச்சி’ (Dai Chi) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் தேவகுரு சுப்பையா, 36, “இந்த மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு புதுமையான திரை அனுபவம். சிங்கப்பூரின் பணிச் சூழல், தொழில்முறை நேர்த்தி ஆகியவை எனக்குப் புதிய ஊக்கத்தை அளித்தது. இன்னும் பல கலைஞர்கள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கலைகளில் ஈடுபட்டு நல்ல அனுபவம் பெறுவதை நான் ஊக்குவிக்கிறேன்,” என்று சொன்னார்.
தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற இந்திய நடிகர்களும் ஜாக்கி சானுடன் பணியாற்றிய இந்தோனீசிய சண்டைக் கலைஞர்களும் இந்நாடகத்தின் சண்டைக் காட்சிகளில் பங்களித்துள்ளனர்.
இந்தத் தொடரில் ‘சரிகா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை துர்கா தேவி நிஷா, 31.
“வசந்தம் பார்த்து வளர்ந்த எனக்கு அதே திரையில் சக கலைஞர்களுடன் நடிப்பது ஒரு கனவு நனவான தருணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தோனீசியா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்ட இத்தொடர், சண்டைக்காட்சிகள் மட்டுமின்றி, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான முடிவுகளையும் பதிவுசெய்ய முயன்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தத் தொடர் காதல், அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்தது. இதில் நடித்துள்ள நடிகர்களின் வளர்ச்சியையும் அர்ப்பணிப்பையும் பார்வையாளர்கள் திரையில் காண முடியும்,” என்று தயாரிப்பாளர் குமரன் உறுதியுடன் கூறினார்.
இந்திய, மலேசியத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இத்தொடர், உள்ளூர்த் தமிழ் நாடகத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
விறுவிறுப்பான கதையம்சத்தை விரும்புவோர்க்கு இந்தத் தொடர் ஒரு மாறுபட்ட அனுபவத்தை வழங்கலாம்.

