அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் சூழலில், மாணவர்களை அதற்குத் தயார்ப்படுத்தும் நோக்கில் ‘செந்தமிழ் உலகில் செயற்கை நுண்ணறிவு’ பயிலரங்கு இடம்பெற்றது.
தமிழ் இளையர் விழா 2025ன் பகுதியாகப் புத்தாக்க இந்தியக் கலையகம் நடத்திய இப்பயிலரங்கு நவீன செயற்கை நுண்ணறிவுசார் மேம்பாடுகளைத் தமிழ் மொழியில் செயல்படுத்தும் நோக்கில் அமைந்தது.
மாணவர்களுக்குக் கலை, ஒலி, ஒளி உருவாக்கம் ஆகியவற்றில் உதவும் பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், தளங்கள் குறித்த அப்பயிலரங்கு கடந்த ஆகஸ்ட் 30, 31ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற ஏறத்தாழ 30 மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு திட்டங்கள் அவற்றின் அடிப்படைகளை விளக்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 6ஆம் தேதி ரோசெஸ்டர் காமன்சில் நடைபெற்றது.
மாணவர்கள் சேட்ஜிபிடி (ChatGPT), ஜெமினை (Gemini), மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Microsoft Copilot), அடோபி ஃபையர்ஃபிளை (Adobe Firefly), ஸ்கெட்ச்ஃபேப் (Sketchfab), வோர்ல்டுகாஸ்ட் (WorldCAST) உட்படப் பல செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் கையாளக் கற்றுக்கொண்டனர்.
அவற்றைப் பயன்படுத்தி, சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க வரும் வேற்றுக்கோள் இயந்திர மனிதர்கள், இயந்திரங்களுக்கு உணர்வுகள் வருமா உட்பட சுவாரசியமான தலைப்புகளில் அமைந்த காணொளிகள், விளக்கக்காட்சிகளை மாணவர்கள் படைத்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயணா மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. தற்போது அதனைப் பயிலும் மாணவர்கள் நாளை அத்துறைகளில் நிபுணர்களாக வருவார்கள் என நம்புகிறேன்,” என்றார் அவர்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை மேம்படுத்தவும், முழு வடிவம் பெறவும் தேவையான ஆதரவுகளையும் வழங்கும் எண்ணம் உள்ளது.
“எல்லாத் தொழில்நுட்பங்களிலும் தமிழைப் புகுத்தவும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்,” என்று புத்தாக்க இந்தியக் கலையக இயக்குநர் சி குணசேகரன் தெரிவித்தார்.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் குறித்துப் படித்து, பயிற்சிபெற்று வருகிறேன். வரிவடிவம், படங்கள், காணொளி உட்பட அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்த ‘சேட்பாட்’ தளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்,” என்றார் மோன்ட்ஃபர்ட் உயர்நிலைப்பள்ளி மாணவர் கணேஷ் ஹரிஹரசுதன், 15.
“தமிழையும் பிழையின்றி அதில் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்,” என்றார் அவர்.
‘நோட்புக் எல்எம்’ உள்ளிட்ட புதிய செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் குறித்துக் கற்றுக்கொண்டதுடன், குழு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது மாறுபட்ட அனுபவமாக இருந்ததாகச் சீடார் தொடக்கப்பள்ளி மாணவி பவ்யா சீனிவாச கிருஷ்ணன் கூறினார்.

