செந்தோசாவுக்கு நீங்கள் அடுத்த முறை செல்லும்போது வெப்பம் குறைவாக இருக்கக்கூடும்.
செந்தோசாவின் முதல் ‘குளிர்ச்சி இடம்’ (Cool Node) எனும் முன்னோடித் திட்டம் தற்போது சிலோசோ கடற்கரையோரமாக, ரூமர்ஸ் பீச் கிளப்புக்கும் செண்டோப்பியாவுக்கும் இடையே உள்ளது.
இப்புத்தாக்க அமைப்பு, அறிவியலையும் கலையையும் இணைத்து மக்களின் செந்தோசா அனுபவத்தை மெருகேற்றுகிறது.
சிலோசோ கடற்கரையைச் சித்திரிக்கும் அழகிய ஓவியத்தை உள்ளூர் ஓவியர் வில்லியம் லீ சுவரில் வரைந்துள்ளார். ஆனால், இது வழக்கமான ஓவியமன்று. சூரியக் கதிர்வீச்சை எதிரொலிக்கும் சிறப்புவகையான சாயத்தால் இது பூசப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்பரப்பின் வெப்பம் 2 டிகிரி செல்சியசால் குறையும். நிப்போன் பெயிண்ட் நிறுவனத்தின் கூல்-டெக் சாயம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதே சாயம் தரையிலும் சில இடங்களில் பூசப்பட்டுள்ளது. இதனால், செருப்பு அணியாமல் கடற்கரையிலிருந்து நடந்து வருவோரின் கால்பாதத்தின் வெப்பமும் குறையும்.
அனைத்து வயதினருக்கும் பொருந்தும் அம்சங்கள் ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
நீர்த்துளிகளை வானில் தெளிக்கும் கருவிகளையும் பேனசோனிக் நிறுவனம் சுவரில் பொருத்தியுள்ளது. இந்த நீர்த்துளிகளின் அகலம் 6 மைக்ரோமீட்டர், அதாவது ஒரு தலைமுடியைவிட பத்து மடங்குச் சிறியது. இதனால், உங்களை நீரில் முழுமையாக நனைக்காமல், உடலிலிருந்து வெப்பத்தைக் குறைக்கும்.
சூரியக் கதிர்வீச்சைக் குறைக்கும் மரஞ்செடி கொடிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலை மாற்றத்தால் நகரங்களில் வெப்பம் அதிகரித்துவரும் வேளையில், மக்கள் தொடர்ந்து இயற்கையையும் வெளிப்புறத்தையும் ரசிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.