சுறுசுறுப்புடன் நடைபோடும் குறும்படக் கலைஞர்

சுறுசுறுப்புடன் நடைபோடும் குறும்படக் கலைஞர்

2 mins read
ff3b3ac5-425a-47fd-b641-434ba5db0c06
நிதி நெருக்கடியையும் தெரிந்தவர்களின் நிராகரிப்பையும் கடந்து கனவுகளைத் தொடர்ந்து நனவாக்கிவரும்  ஸ்ரீ சங்கீத் ஸ்ரீ குமார் (இடது). - படம்: ஸ்ரீ சங்கீத்

முழுநேர வேலைக்கும் கலை ஆர்வத்திற்கும் இடையே ஒரு பாலத்தை அமைத்து, திரைப்படத் துறையில் தனியிடத்தை உருவாக்க முனைகிறார் ஸ்ரீ சங்கீத்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் முழுநேரமாகப் பணிபுரியும் ஸ்ரீ, சமூகத்தின் கவனத்திற்கு அவ்வளவாக வராத கதைகளைத் திரையில் கொண்டுவர வேண்டும் என்ற இலக்கோடு இயங்கி வருகிறார்.

சுய அடையாளம், குடும்பம், சமூக விவகாரங்கள் சார்ந்த உண்மைக் கதைகளைத் திரைக்குக் கொண்டுவருவதில் ஸ்ரீ பேரார்வம் கொண்டவர்.

பிள்ளைப் பருவத்திலிருந்தே இயக்குநராக வேண்டும் என ஸ்ரீ கனவு கண்டார்.

“12 வயதிலிருந்தே திரைப்படங்களை உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக வர்த்தகத் தொழில்நுட்பத் துறையில் படிக்க வேண்டியதாயிற்று,” என்று கூறினார் ஸ்ரீ.

கல்லூரி நாள்களிலேயே குறும்படங்களை எடுப்பதிலும் புகைப்படக் கலை நுட்பங்களை வளர்ப்பதிலும் அவர் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

இதுவரை அவர் 10 நிமிடங்களுக்கு உட்பட்ட மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளார்.

“அவற்றில், ‘அன்சீன்’ என்ற 7 முதல் 8 நிமிடத் திகில் குறும்படம் எனக்குப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி திரைப்பட விழாவில் அக்குறும்படம் விருதையும் வென்றது,” என்று அவர் கூறினார்.

பொள்ளாச்சி திரை விழாவில் விருது பெற்ற ஸ்ரீ சங்கீத்.
பொள்ளாச்சி திரை விழாவில் விருது பெற்ற ஸ்ரீ சங்கீத். - படம்: ஸ்ரீ சங்கீத்.

தன்னிச்சையாகச் செயல்படும் இயக்குநர் என்ற முறையில் ஸ்ரீ தொடக்கத்தில் நிதி நெருக்கடியைச் சந்தித்தார். ஊடக நிறுவனங்களின் ஆதரவின்றி இவரே ஆதரவாளர்களைத் தேட வேண்டியிருந்தது.

அத்துடன், ஸ்ரீயின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளாமல் குடும்பத்தாரிடமிருந்தும் நண்பர்கள் வட்டத்திலிருந்தும் சிலர் வெளிப்படுத்திய அவநம்பிக்கையையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

“சிங்கப்பூரில் ஊடகத்துறைக்கு வளர்ச்சியோ பாதுகாப்போ இல்லை எனப் பலரும் நினைத்தனர்,” என்று அவர் கூறினார்.

“தரமான படங்களை எடுக்க நிதி தேவை. ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தாலும், பல வர்த்தக, திரைப்படத் திட்டங்களில் வேலை செய்து, திரைத்துறைமீது தீராத ஆர்வம் கொண்ட பலரை ஒன்றிணைத்துச் சிறந்த குழுவை உருவாக்கினேன்,” என்றார் அந்த இளையர்.

படப்பிடிப்பின்போது கலை வடிவமைப்புக்கும் விருப்பத்திற்கு ஏற்ப வேலைசெய்யும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஊதியத்திற்கும் அதிகச் செலவானதை அவர் குறிப்பிட்டார்.

உணவு, தளவாட ஆதரவாளர்கள் மூலம் கிடைத்த உதவி பக்கபலமாக அமைந்தது என நன்றியுணர்வுடன் கூறினார் ஸ்ரீ.

கதை சொல்லும் விதத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டஃபர் நோலனும் ஆழமாக, உண்மைத்தன்மையுடன் கருத்துகளைத் திரையில் கொண்டுவருவதில் கமல்ஹாசனும் தம் மனத்தைக் கவர்ந்த கலைஞர்கள் என ஸ்ரீ குறிப்பிடுகிறார்.

“வணிக ரீதியான திரைப்படங்களுக்கும் கலைநயப் படங்களுக்கும் இடைப்பட்ட சமநிலையான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். பிறரைக் கவரும் படங்களானாலும் உண்மைத்தன்மையை விட்டுக்கொடுக்காமல் உருவாக்குவேன்,” என்று நம்பிக்கையுடன் கூறினார் திரைப்படத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளையர் ஸ்ரீ.

குறிப்புச் சொற்கள்