‘மீதூண் விரும்பேல்’ என்பது ஆத்திசூடி.
ஆனாலும், ஒருவர் காலை உணவை ராஜாபோல சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். காலை உணவு மிக முக்கியம் என்று உணவு வல்லுநர்கள் பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பலர் இரவு நேரத்தில்தான் அதிக உணவு உண்பதாக தெரியவந்துள்ளது.
ஸ்பெயினில் இருக்கும் மர்சியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்த்தா, அமெரிக்காவில் இருந்தபோது அங்கிருக்கும் பலர் பரபரப்பான வாழ்க்கைச் சூழலால் இரவுவரை சரியான உணவை உண்ண முடிவதில்லை என்பதைக் கண்டார்.
ஆனால், ஸ்பெயினில் உள்ளவர்கள் நண்பகல் உணவில் பலவற்றைச் சேர்த்துக்கொள்வது வழக்கம் என்று பேராசிரியர் மார்த்தா குறிப்பிட்டார்.
எவ்வளவு உணவு உண்ணவேண்டும், எந்தெந்த நேரங்களில் உணவு உண்ணவேண்டும் போன்றவை ஒருவரின் உடல்நலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் அதிகம் உண்போருக்கு உடற்பருமன், இரண்டாம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை வருவதற்கான அபாயம் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
காலை நேரத்தில் ஒருவரின் உடல் அதிகமான உணவைச் செரிப்பதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
உடலை அந்த நாளுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு வழியமைக்கிறது.
ஆனால், நேரம் செல்ல செல்ல ஊட்டச்சத்துக்களைப் புரிந்துகொள்ள உதவும் உறுப்புகளான கல்லீரலும் கணையமும் மந்த நிலைக்குச் செல்கின்றன.
ஒருவர் காலையிலும் மாலையிலும் ஒரே மாதிரியான உணவை உட்கொண்டால் அவரின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். அது மாலை உணவுக்குப் பிறகும் நீண்ட நேரம் உயர்ந்தே இருக்கும்.
உறங்குவதற்கான நேரத்தை குறிக்கும் மெலடோனின் எனும் சுரப்புநீர் படுக்கைக்குச் செல்ல ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு உயரும்போது அது கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதைச் சிரமமாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதை கடினமாக்குகிறது.
இரவில் அதிக அளவு உணவை உட்கொள்வதால் உறங்கும்போது உடலில் கொழுப்பு சேர்கிறது.
காலையில் அதிகமாக உண்ணும்போது அந்த நாள் முழுவதும் அதிகப் பசி எடுக்காது என்று ஸ்காட்லாந்தில் இருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் குறைந்த அளவு உண்ணும் பழக்கத்தைப் பேண வேண்டும் என்பதைவிட நேரந்தவறாமல் குறைந்த அளவில் அவ்வப்போது உணவு உட்கொள்வது சிறப்பு.
ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுடன் காலை நேரத்தைத் தொடங்கலாம். முட்டை, தயிர், பீன்ஸ் வகைகள் போன்ற உணவுவகைகளை உண்பது நல்லது.
அதுபோல, நண்பகல் உணவிலும் பல்வேறு சத்துகள் நிறைந்த உணவுவகைகளைச் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

