மனித வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் முதல், நீண்டகால உறவு உடன்பிறப்புகளுடனான பிணைப்பு என்றால் மிகையாகாது.
பிறப்பு முதல் வளரும் வரை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும், உடன்பிறப்புகளிடையே நிலவும் அன்பு என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அவ்வகையில் இந்தச் சகோதரத்துவப் பிணைப்பு, வாழ்க்கையில் மற்றவர்களிடம் காட்டும் அன்பையும், பிற உறவுகளைக் கையாளும் முறையையும் அமைதியாகப் பக்குவப்படுத்துகிறது; அது மற்ற உறவுகளையும் நிலைக்க செய்யும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றது என்கின்றனர் நிபுணர்கள்.
சண்டைகள் அன்பின் முடிவல்ல
தொலைக்காட்சி இயக்கிக்காகவோ (remote), தின்பண்டங்களுக்காகவோ சகோதரச் சகோதரிகள் தினமும் சண்டையிட்டுக் கொள்ளலாம். ஆனால், சில நிமிடங்களிலேயே அதை மறந்து மீண்டும் ஒன்றாக விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.
உடன்பிறப்புகள் மத்தியில் அடிக்கடி உதிக்கும் இந்த போக்கு, கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் மட்டுமே ஒரு பாசப் பிணைப்பு முறிந்துவிடாது என்ற அடிப்படைப் பாடத்தை கற்பிக்கிறது.
விட்டுக்கொடுக்கும் பண்பாடு
எந்தப் படம் பார்ப்பது? வீட்டில் உள்ள பொருட்களை எப்படிப் பகிர்வது? என்பதில் உடன்பிறப்புகள் எப்போதும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுத்துப் பழகுகிறார்கள்.
முதலில் சண்டையிட்டாலும், எப்போதும் “நான் சொல்வதே நடக்க வேண்டும்” என்ற எண்ணத்தைத் தவிர்த்து, பிறருக்காக இறங்கி வரும் இந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அனைத்து சமூக, குடும்ப உறவுகளுக்கும் அடித்தளமாக அமைகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
செயலில் வெளிப்படும் உண்மையான பாசம்
எல்லாச் சகோதரர்களும் தங்கள் அன்பை “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை.
தங்களுக்குப் பிடித்த உணவை உடன்பிறப்புக்காக விட்டுக்கொடுப்பது, ஆபத்தான சூழலில் பக்கபலமாக நிற்பது, பிறர் முன்பாக விட்டுக்கொடுக்காமல் அவர்களுக்காக பேசுவது போன்ற சின்னஞ்சிறு செயல்களிலேயே அவர்களின் அளப்பரிய பாசம் வெளிப்படுகிறதாம்.
கோபமும் அன்பும் சேர்ந்ததே மனித இயல்பு
ஒரு கணத்தில் கடுப்பேற்றும் உடன்பிறப்பு, அடுத்த கணமே சிரிக்க வைப்பார். இதுவும் இந்த உறவில் பரவலாகக் காணப்படும் ஒர் பாங்கு. ஒருவரை நேசிப்பது என்பது அவர்களின் குறைகளோடும் ஏற்றுக்கொள்வதே என்பதை இந்த பண்பு உணர்த்துவதாக சுட்டிக்காட்டுகின்றனர் .
மனிதர்களிடம் உள்ள சிறிய எரிச்சலூட்டும் குணங்களைவிட, அவர்கள் மீதுள்ள அன்பே பெரியது என்பதையும் புரிந்துகொள்ள இந்தக் குணம் உதவுகிறது என்றும் விளக்குகின்றனர் நிபுணர்கள்.
மன்னிக்கும் மனப்பக்குவம்
அடுத்தபடியாக, மனோவியலாளர்கள் நினைவூட்ட விரும்புவது, சகோதரர்களுக்கு இடையேயான சண்டைகள் பெரும்பாலும் பெரிய மன்னிப்புக் கடிதங்களால் முடிவதில்லை என்பதைத்தான்.
ஒரு சாக்லெட்டை மேசையில் வைப்பதோ அல்லது “வா பேசலாம்” என்று இயல்பாக அழைப்பதோ போதுமானதாகிறது. கர்வத்தைப் பிடித்துக்கொண்டு சண்டையில் வெல்வதைவிட, உறவை மீண்டும் மீட்டெடுப்பதே முக்கியம் என்ற பக்குவத்தையும் இது வழங்குகிறது.
அவ்வகையில், அன்பு என்பது வெறும் காதல் சார்ந்த உணர்வு மட்டுமல்ல; அது உடன்பிறப்புகளிடையே பிறந்து, குடும்பம், உற்றார் சுற்றத்தாரிடம் பரவும் ஒரு உன்னதமான பிணைப்பாகும்.
சகோதரத்துவத்தில் கற்றுக்கொள்ளும் இந்தச் சிறிய பாடங்களே, வாழ்நாளில் மனிதர்கள் பேணும் அனைத்து உறவுகளையும் பண்படுத்தி வலுவாக்குகின்றன என்பது உளவியல் வல்லுநர்களின் உறுதியான கோட்பாடாக உள்ளது.
