வழக்கமான புத்தகக் கடைதான் என்று டக்ஸ்டன் பகுதியில் அமைந்திருக்கும் ‘புக் பார்’ கடையைக் கூறிவிட முடியாது.
மனங்கவர் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடையில் சிறிய கஃபே ஒன்றில் காப்பி, தேநீர், கேக், ரொட்டி வகைகள் விற்கப்படுகின்றன. புத்தகம் படித்துக்கொண்டே உண்பதற்கென மேசைகள், இருக்கைகள் உள்ளன.
புத்தக ஆர்வலர்கள் மாதம் ஒருமுறை கூடி ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு அமைதியாக வாசிப்பது ‘புக் பார்’ புத்தகக் கடையின் சிறப்பம்சங்களில் ஒன்று.
இந்த மௌன வாசிப்பு வழிமுறை தற்போது அமெரிக்காவில் உள்ள புத்தகக் கடைகளில் பிரபலமாகி வருகிறது.
“பெரும்பாலும் காலைவேளையில் பள்ளியில் சக மாணவர்களுடன் மௌனமாக வாசித்த நினைவுதான் நமக்கு இருக்கும். இது பெரியவர்களுக்கான அனுபவந்தான்,” என்றார் ‘புக் பார்’ கடை நிறுவனர் அலெக்ஸ்.
‘புக் பார்’ புத்தகக் கடையை அலெக்ஸ் - சாரா இணையர் ஓராண்டாக நடத்தி வருகின்றனர். இந்த மௌன வாசிப்பு நிகழ்வு, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த மாதாந்தர நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுக்கின்றனர்.
‘எபிகிராம் புக்ஸ்’ எனும் உள்ளூர்ப் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அலெக்ஸ், சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றார்.
“பரபரப்பான சிங்கப்பூர் வாழ்க்கைச் சூழலில் சில நேரம் நமக்கென்று ஒரு சில நிமிடங்கள் ஒதுக்குவது அரிது. அதனால், சிங்கப்பூரர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார் துணை நிறுவனர் சாரா.
வருகைபுரியும் புத்தக ஆர்வலர்கள் மௌனமாக வாசிப்பதோடு, மற்ற ஆர்வலர்களுடனும் கலந்துரையாடலாம்.
‘புக் பார்’ துவங்கிய இந்த மௌன வாசிப்பு நிகழ்ச்சிக்கு, மூன்றாவது முறையாக வருகைதந்தார் புத்தக ஆர்வலரான ஹம்சவள்ளி துரைராஜு, 29. இன்ஸ்டகிராம் மூலம் இந்தத் தற்சார்புப் புத்தகக் கடைக்கு அறிமுகமான ஹம்சவள்ளி, அந்நிகழ்வில் பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“வாரம் ஐந்து நாள்கள் வேலை செய்வதால் எனக்குப் புத்தகம் படிக்க நேரமில்லை. இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் என் கவனத்தை முழுக்க முழுக்க நூல் வாசிப்பதில் செலுத்த முடிகிறது. இது மனநலத்திற்கும் ஏற்ற நடவடிக்கை,” என்றார் அவர்.
காலச்சக்கரத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கைச்சக்கரம் வேகமாக ஓடும் சூழலில், ஒரு மணி நேரம் அமைதியாக ஒரு நூலில் மூழ்குவது மிகுந்த மன நிம்மதி அளிக்கும் என்பதோடு, புது உறவுகளும் துளிர்விட இந்த அனுபவம் தனித்துவமானது என்று கூறலாம்.