சிங்கப்பூரில் பலரிடையே காணப்படும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையை முறையாகக் கையாள உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதயம், ரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்கும் உந்தித் தள்ளிவிடும்போது ரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படும் அழுத்தம், ரத்த அழுத்தம் எனப்படுகிறது. உடலின் உறுப்புகள் சீராக இயங்க ரத்தத்தில் ஓரளவு அழுத்தம் அவசியம். ஆனால், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது அது ‘உயர் ரத்த அழுத்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
“சிங்கப்பூரில் 18 முதல் 74 வயதுடையவர்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அவர்களில் பாதிப் பேருக்கு அத்தகைய பிரச்சினை இருப்பது தெரியாது. 18 முதல் 74 வயதுடையவர்களுக்கு 140/90 mmHg என்ற அளவு உயர் ரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது. தற்போது, 130/85 mmHg என்ற அளவு, உயர் ரத்த அழுத்தத்தின் ‘எல்லைக்கோடு’ அல்லது ‘உயர் இயல்பு’ எனப் புதிதாக வகைப்படுத்தப்படுகிறது,” என்கிறார் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள ஷிஃபா கிளினிக்கின் பொதுநல மருத்துவர் முகமது பைசல், 49.
மரபணு, உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், போதிய தூக்கமின்மை, உடல்பருமன், மன அழுத்தம் போன்ற காரணங்களால் ரத்த அழுத்தம் வரும் சாத்தியம் அதிகரிக்கிறது. அதனைக் கவனிக்காமல் விட்டால் சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
“மன அழுத்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியோடு மன அமைதியும் அவசியம்,”என்கிறார் டாக்டர் பைசல்.
‘ஹெல்தியர் எஸ்ஜி’ (Healthier SG) திட்டத்தின் கீழ், 40 வயதிற்கு மேற்பட்டோர் முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது, உடற்பயிற்சி செய்வது, ஆழ்ந்து உறங்குவதை உறுதிசெய்வது, மன அழுத்தத்தைச் சீரான அளவில் நிர்வகிப்பது, உப்பு, கொழுப்பு, எண்ணெய் முதலியவற்றைக் குறைத்து ஆரோகியாமான உணவை உட்கொள்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் உயர் ரத்த அழுத்ததைத் தடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

