உங்கள் வீட்டில் குளிர்பதனப் பெட்டியைத் திறந்ததும், எந்த உணவுப் பொருளை முதலில் பயன்படுத்துவது அல்லது உட்கொள்வது என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? அதிகளவில் கெட்டுப்போன உணவுப் பொருள்களைக் குப்பையில் வீசும் நிலைமை அடிக்கடி ஏற்படுகிறதா?
பொதுவாக, இது பெரும்பாலான வீடுகளில் அன்றாடம் நிகழும் ஒன்றுதான். பல நேரங்களில், குளிர்பதனப் பெட்டியில் என்ன உணவுப் பொருள் உள்ளது என்பதை நாம் மறந்துவிடுவதும் உணவு வீணாகக் காரணமாகின்றது.
ஜப்பானில் உணவுக் கழிவுகளைக் குறைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அவ்வகையில், தோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர், குளிர்பதனப் பெட்டிகளைச் சரியாக ஒழுங்கமைப்பதன்மூலம் உணவுக் கழிவுகளைக் குறைக்க உதவும் சில நுட்பங்களைத் தங்களின் ஆராய்ச்சியின்வழி கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு
கவனத்துடன் உணவை மறுப்பதை ஊக்குவிக்க ‘என்னை மன்னித்துவிடு, என்னால் உன்னைச் சாப்பிட முடியவில்லை’ என்று எழுதப்பட்டிருந்த ஒட்டுவில்லைகளை ஆய்வாளர்கள் விநியோகம் செய்தனர்.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் தூக்கி எறியும் ஒவ்வோர் உணவுப் பொருளின் மீதும் அந்த வில்லையை ஒட்டி அந்த வாக்கியத்தை நன்கு உணர்ந்து வாய்விட்டுச் சொல்லும்படி ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்திய இரண்டு வாரங்களிலேயே, பங்கேற்பாளர்கள் உணவை வீணாக்குவது 10% குறைந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
வேறு சில வழிமுறைகள்
குளிர்பதனப் பெட்டியில் விரைவாக உட்கொள்ள வேண்டிய உணவுகளை நன்கு தெரியும்படி பிரித்து வைத்து முன்புறமாக வைக்கும்போது அவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்று ஆராய்ச்சி முடிவு காட்டுகிறது.
மேலும், விரைவாகக் காலாவதியாகக்கூடிய உணவுகளை வெவ்வேறு வண்ண நாடா அல்லது ஒட்டுவில்லையின்மூலம் வேறுபடுத்துவது அவற்றை எளிதாக அடையாளம் காண உதவுவதோடு முதலில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
உணவுப் பொருள்களில் அச்சிடப்படும் காலாவதித் தேதிகளின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். ‘யூஸ் பை’ என்று அச்சிடப்பட்டிருந்தால் உற்பத்தியாளர் அந்த உணவுப் பொருள் அதுவரை உட்கொள்ளப் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளிக்கும் தேதிகளைக் குறிக்கிறது. அதற்கு மாறாக ‘பெஸ்ட் பை’ என்று அச்சிடப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட தேதிப்படி உணவைச் சாப்பிட்டால் அது அதிகபட்ச சுவையைக் கொண்டிருக்கும் காலத்தைக் குறிக்கிறது. எனவே, ‘பெஸ்ட் பை’ என்று அச்சிடப்பட்டிருந்தால், அந்தத் தேதிக்குப் பிறகு உணவுப்பொருள் இனி பயன்படுத்த உகந்தது அன்று எனக் கருதி, அதனைத் தூக்கி எறிந்துவிடத் தேவையில்லை.
உணவுகளை முகர்ந்து பார்த்தும், கெட்டுப் போனதற்கான அறிகுறிகளைக் கண்டுணர்ந்தும் உட்கொள்ளலாம். சில ‘சாஸ்’ வகைகள், காய்கறிகள், பழங்கள், புளித்த உணவுகளை உடனடியாகக் குப்பையில் வீசுமுன், சற்று நேரம் சோதித்துப் பார்த்துவிட்டு, அதனை வீச வேண்டுமா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம்.