பொதுமக்களிடம் கலைகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் பல்வேறு கலைப்படைப்புகளுடன் சிங்கப்பூர்க் கலை வாரம் தொடங்கவுள்ளது.
தேசியக் கலை மன்றமும் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிங்கப்பூர்க் கலை வாரம் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31ஆம் தேதிவரை நீளும். இதில் ஏறத்தாழ 200 உள்ளூர், அனைத்துலகக் கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
பொதுமக்கள் வாழும், பணியாற்றும், பொழுதுபோக்கும் இடங்களுக்குக் கலைகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் தீவெங்கிலும் பல்வேறு படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாண்டின் பல நிகழ்ச்சிகள், அனைவரையும் கலை சென்றடைதல், கலைக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான சங்கமம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.
தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க் (Tanjong Pagar Distripark)
அனைத்துலகக் கலை உரையாடல்களுக்கான முக்கிய மையமாக மாற்றம் கண்டுள்ள இவ்வட்டாரத்தில் சுவாரசியமான பல படைப்புகள் இடம்பெறுகின்றன.
சப்பலாங் (chapalang)
குணாளன் நடராஜன், ரூபேஷ் ஸ்ரீதரன் ஆகியோரின் இப்படைப்பு, தென்கிழக்கு ஆசிய பண்பாடுகள் எப்படித் தொழில்நுட்பங்களைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்கின்றன என்பது குறித்துப் பேசுகிறது.
‘கிடைப்பதைக் கொண்டு சமாளித்தல்’ (making do) என்ற மனப்போக்கின்மூலம் மின்னிலக்க உலகத்துடனான உறவை மீட்டுருவாக்குவதில் இது கவனம் செலுத்துகிறது. இது ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 31ஆம் தேதிவரை நடைபெறும்.
கஜா கலைக்கூடத்தின் 30 ஆண்டுகள் (30 Years of Gajah)
தென்கிழக்கு ஆசியாவின் ஆவணக் காப்பகமாகமாகத் திகழும் கஜா கலைக்கூடத்தின் 30 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 21ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதிவரை நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
டிங்கிங் ஸ்டார்ஸ் (Digging Stars)
புகழ்பெற்ற கலைஞர் இப்ராஹிம் மஹாமா சிங்கப்பூரில் படைக்கும் முதலாவது தனிக் கண்காட்சி இது. கரிக்கறை படிந்த சணல் சாக்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இப்படைப்பு காலனித்துவக்காலப் புலம்பெயர் ஊழியர்கள், இடப்பெயர்வின் வலிகளைப் பேசுகிறது.
இது ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதிவரை நீளும்.
நெக்ஸ்ட் ஸ்டாப்: டுகெதர்! (Next Stop: Together!)
பொதுப் போக்குவரத்தை ஒரு கலைத்தளமாக மாற்றி, வண்ணமும் ஒலியும் சார்ந்த கலைப்படைப்புகளின் மூலம் பார்வையாளர்களைக் கலையுடன் ஒன்றிணைக்கிறது இப்படைப்பு.
இதில், எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று, விதவிதமான ஒலிகளை எழுப்பக்கூடிய பொருள்களைக் கொண்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட நாள்களில் தீவைச் சுற்றிவரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது உடற்குறையுள்ளோர்க்கான ஆர்ட்:டிஸ் கலை அமைப்பின் படைப்பாகும்.
இவற்றைப் போன்ற கலைப்படைப்புகளுடன் பல்வேறு விரிவுரைகள், திரையீடுகள், சமூகமாக இணைந்து பூப்பந்து விளையாடுதல் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

