விரல் ரேகைகளாலான ஆகப் பெரிய தேசியக் கொடிக்காக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது நன்யாங் நிர்வாகக் கல்விக்கழகமும் ‘சுஜாதா அகேன்ஸ்ட் ஆல் ஆட்ஸ்’ நிறுவனமும் மேற்கொண்டுள்ள இணைமுயற்சி.
‘எஸ்ஜி60க்காக கைகளை இணைப்போம்’ எனும் அந்நிகழ்ச்சியில், 2.4 மீட்டர் நீளம், 1.6 மீட்டர் அகலத்திலான தேசியக் கொடிக்கு கல்விக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் விரல் ரேகைகளால் சாயம் பூசி அதனை உருவாக்கினர்.
நிகழ்ச்சி ஜூலை 25ஆம் தேதி நன்யாங் நிர்வாகக் கல்விக்கழகத்தில் நடைபெற்றது.
பங்கேற்ற மாணவர்கள் சீனா, இந்தியா, மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். சிங்கப்பூர் அவர்களுக்கு இரண்டாம் இல்லமாகத் திகழ்வதால், இம்முயற்சியில் பங்கேற்க ஆர்வத்துடன் முன்வந்ததாக அவர்கள் கூறினர்.
சென்ற ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு நன்யாங் நிர்வாகக் கல்விக்கழக மாணவர்கள் அவரவர் நாட்டின் உணவுகள், பண்பாட்டு நடனங்கள் போன்றவற்றைப் படைத்தனர். இதுபோன்ற சாதனையைப் படைப்பது இதுவே அவர்களுக்கு முதல்முறை.
இந்தியப் பூர்வீகம் கொண்ட மியன்மார் நாட்டு மாணவர் மோசஸ், ஒன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருந்துள்ளார். சென்ற ஆண்டு தேசிய தின நடவடிக்கைகளில் அவர் அவ்வளவாகப் பங்கெடுக்கவில்லை. “இம்முறை சக மாணவர்களுடன் இணைந்து சிங்கப்பூரின் தேசியக் கொடி தொடர்பான சாதனையைப் படைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் மோசஸ். நன்யாங் நிர்வாகக் கல்விக்கழக மாணவர் மன்றத் தலைவரான அவர், அச்சாதனைக்கான ஏற்பாட்டில் முக்கியப் பங்கும் வகித்தார்.
விருந்தோம்பல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்காக கோல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த நன்யாங் நிர்வாகக் கல்விக்கழக மாணவி பிரியங்கா சாஹா, “சிங்கப்பூரில் நிறைய விடுதிகள் உள்ளதால் இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன,” என்றார்.
இதுவே பிரியங்கா சிங்கப்பூரில் அனுபவிக்கவுள்ள முதல் தேசிய தினம் என்பதால் அவர் ஆவலுடன் காத்திருக்கிறார். தேசிய தின அணிவகுப்பின் ஒத்திகைகளில் மரினா பே சேண்ட்ஸ் பகுதியிலிருந்து வாணவேடிக்கைகள், போர்விமானச் சாகசங்களைக் கண்டு வியந்ததாகவும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பன்னாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு இச்சாதனையைப் படைத்தது, எவ்வாறு சிங்கப்பூர் அனைவரையும் வரவேற்கும் நாடாகத் திகழ்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது,” என்றார் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவாளரும் ‘சுஜாதா அகேன்ஸ்ட் ஆல் ஆட்ஸ்’ நிறுவனருமான டாக்டர் சுஜாதா திவாரி.
“எவ்வாறு இந்த மாணவர்கள் தேசிய கொடிச் சாதனைக்குப் பங்காற்றினார்களோ அவ்வாறே அவர்கள் நாட்டுக்குப் பங்களிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார் நன்யாங் நிர்வாகக் கல்விக்கழகத்தின் வாடிக்கையாளர் சேவை நிலைய இயக்குநரும் பொறியியல் பள்ளி உதவி டீனுமான திருவாட்டி தொங் சுவெ-யென்.