சிங்கப்பூரில் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் பக் சோர் மீ, வான்டோன் மீ, சார் குவே தியோவும் அடங்கும். தற்போது அவை லண்டன் நகரிலும் பலரால் விரும்பி சாப்பிடும் உணவுகளாக மாறியுள்ளது.
‘சிங்கப்பூலா’ என்று அழைக்கப்படும் உணவகத்தில் இவை கிடைப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
மேலும் அந்த உணவகம் ‘மைலோ’ டப்பாக்களாலும் பழைய ஆரஞ்சு தொலைபேசியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவை உணவகத்திற்கு சிங்கப்பூரின் அடையாளங்களைக் கொடுத்துள்ளன.
உணவகத்தின் உணவுப்பட்டியலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. அதில் சிங்கப்பூரின் மற்ற சில உணவுகளும் விற்கப்படுகின்றன.
தற்போது பல நாட்டு உணவுகளை மக்கள் ரசித்து சாப்பிடத் தொடங்கிவிட்டனர். அதனால் சிங்கப்பூரின் உள்ளூர் உணவுகளை உலக அளவில் எடுத்துச்செல்லும் பணியில் ‘சிங்கப்பூலா’ களமிறங்கியுள்ளது.
சாப்பாட்டு பிரியர்கள் உணவின் உண்மையான ருசியை எதிர்பார்க்கின்றனர். அதனால் பாரம்பரிய முறையில் உணவுகள் சமைக்கப்படுகிறதா என்பதை சாப்பாட்டு பிரியர்கள் கவனிப்பதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் உணவுகளை உலக அளவில் பிரபலம் அடையச் செய்வதற்கு இதுவே சரியான நேரம் என்று ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ கூறுகிறது.
கொவிட்-19 காலகட்டத்திற்கு பிறகு பிரிட்டன் போன்ற நாடுகளில் இளையர்கள் பலநாட்டு உணவுகளை ருசிக்க விரும்புகின்றனர். அதனால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
‘சிங்கப்பூலா’ உணவகம் ஷாப்ட்ஸ்பரி அவென்யூவில் உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள், திரைப்படத்திற்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்கள் அதிக அளவில் வரும் பகுதியாகும். அதனால் சிங்கப்பூர் உணவுகள் விரைவில் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
உணவு விலைகளை அவ்வட்டாரத்திற்கு ஏற்றவாறு கட்டுபடியாகும்படி விற்பதாக ‘சிங்கப்பூலா’ தெரிவித்தது.

