சிங்கப்பூர் மரபுடைமைத் திருவிழா நிகழ்ச்சிகள்

2 mins read
40d41d91-f4b6-45ed-b670-b73333750526
‘ஒண்டே ஒண்டே’ பயிலரங்கு, சிலம்பப் பயிலரங்கு, சிங்கப்பூர் நதிச் சுற்றுலா உட்பட இந்திய, சீன, மலாய் கலாசாரங்களின் அனுபவங்களை வழங்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. - படம்: சிங்கப்பூர் மரபுடைமைத் திருவிழா

சிங்கப்பூரின் அறுபதாம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேசத்தின் தொட்டுணர முடியாத பாரம்பரியக் கூறுகளைக் கொண்டாடும் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேசிய மரபுடைமைக் கழகத்தின்கீழ் செயல்படும் ‘ஹெரிட்டேஜ் எஸ்ஜி’ அமைப்பின் ஏற்பாட்டில் மே 25ஆம் தேதிவரை நடைபெறும் சிங்கப்பூர் மரபுடைமைத் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

‘ஹோம்கிரவுண்ட்’ - கரையோரப் பூந்தோட்டங்கள்

கரையோரப் பூந்தோட்டங்களில் இம்மாதம் முழுவதும் வார இறுதி நாள்களில் கலை நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் எனப் பல மாலை நேர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மே 10, 11ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்பில் இந்திய நடன நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு ஏகே தியேட்டர் வழங்கும் ‘இந்திய நாட்டுப்புற மணம்’ எனும் இசை, நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

மே 17, 18 இரு நாள்களும் இரவு 7 மணிக்கு பாஸ்கர் நுண்கலைக்கூடம் வழங்கும் இயற்கைக் கூறுகளை உள்ளடக்கிய ‘ஸ்வரூபகா’ இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

மே 24ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு களரி அகாடமி சார்பில் தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இவை தவிர சமூகக் கோலமிடும் நிகழ்ச்சிகள், ‘பத்திக்’ பயிலரங்குகள், பல்லின கலாசார நிகழ்ச்சிகளும் மாலை முழுவதும் இடம்பெறுகின்றன.

உணவங்காடிக் கதைகள்

சிங்கப்பூரின் தனித்துவம் மிக்க உணவங்காடி நிலையங்களின் வரலாறு, கதைகளைப் பேசும் சிறு சுற்றுலா நிகழ்ச்சி இம்மாதம் முழுவதும் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

‘கம்போங் கிளாம்’ தொடங்கி, கோல்டன் மைல் ஃபுட் சென்டர், நார்த் பிரிட்ஜ் ரோடு உணவங்காடி நிலையம் எனப் பல்வேறு இடங்களின் உணவுகளை இச்சுற்றுலாவில் சுவைக்க முடியும்.

மலாய் நிகழ்த்துக்கலை

‘பங்ஸ்வான்’ எனும் மலாய் இசை நாடகக் கலை நிகழ்ச்சி மே 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும், 18 முதல் 23ஆம் தேதி வரையிலும், 25ஆம் தேதியும் நடைபெறுகிறது.

‘தஞ்சாக்’ எனும் தலைப்பாகை கட்டுதல், உடைகள், கவிதைகள், கதைகள் என மாறுபட்ட கலாசார அனுபவங்களை வழங்கும் இந்நிகழ்ச்சியை ‘ஓபேரா சிங்கப்பூர்’ அமைப்பு வழிநடத்துகிறது.

‘பெரனாக்கன்’ திருமணக் கதைகள்

‘இன்டான்’ எனும் பெரனாக்கன் கலாசார வீட்டு அரும்பொருளகத்தில் ‘கெபாயா’ தேநீர் அனுபவம் இடம்பெறவுள்ளது. கைகளால் வடிவமைக்கப்பட்ட கெபாயா உடைகள், பெரனாக்கன் திருமணச் சடங்குகள், ‘குவே’ உள்ளிட்ட அவர்களது தனித்துவமான உணவுகளைச் சுவைக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி அமையும். இந்த 60 நிமிட அனுபவ நிகழ்ச்சி மே மாதம் முழுவதும் வார இறுதிகளில் நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்