தமிழர் மரபுக் கலைகள் பலவற்றை எஸ்பிளனேட் அரங்கில் ஒரே மேடையில் அரங்கேற்றியது, ‘ஆனந்தக் கொண்டாட்டம் 2024’.
பறை, துடும்பாட்டம், உருட்டு, சக்கைக்குச்சி, பொய்க்கால் குதிரை என தமிழ்க் கலைகள் மட்டுமின்றி, மகாராஷ்டிர, அசாமிய, குஜராத்திய பாரம்பரிய நடனங்களும் சீன, மலாய் மரபு நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெற்றன.
ஆகஸ்ட் 30, 31ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர், இந்தியக் கலைஞர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனந்தா மரபுக் கலைகள் கூடம், இந்திய மரபுடைமை நிலையத்துடனும் பிற சிங்கப்பூர் கலை, சமூக அமைப்புகளுடனும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
இது மரபுக் கலைகளை அரங்கேற்றக் களம் அமைப்பதுடன், அவற்றை இளையர்களுக்குத் தெரியப்படுத்தவும் அவற்றின்மேல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
இரு கட்டியங்காரர்களுடன், கதை பாணியில் உற்சாகம், சோகம், வெற்றி, காதல் எனப் பல உணர்வுகளுடன் பின்னிப் பிணையப்பட்ட இந்த நிகழ்வு அரங்கை அதிரவைத்தது. பின்னல் கோலாட்டம், உருட்டு, சக்கைக்குச்சி என முன்பு பார்த்திராத பல புதிய கலைகள் ஒன்றாக அரங்கேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.
கலைகளும் தமிழர் வாழ்வியலும்
தகவல் தொழில்நுட்பம் செழித்திராத காலத்தில் செய்தியை அறிவித்த ‘பறை’, வேட்டைக்குச் சென்ற மன்னன் திருப்பி வந்ததைக் கொண்டாடவும் போரில் வெற்றியைக் கொண்டாடவும் முழங்கிய துடும்பு, அதற்கு துணைக் கருவியான உருட்டு, தவில் இசைக்கு வலுச்சேர்க்கும் உறுமி, அரசன் அரசியாக வந்து ஆடியபடி கதை சொன்ன பொய்க்கால் குதிரையாட்டம், இறந்தவரின் புகழ்பாடவும் துக்கத்தை வெளிக்காட்டவும் பாடப்பட்ட ஒப்பாரி எனத் தமிழர் வாழ்வில் கலைகளுக்குப் பஞ்சமில்லை.
அவற்றில் பல நலிவடையும் தறுவாயில் உள்ள நிலையில், அவற்றுக்கு உயிர்கொடுக்கப் போராடும் கலைஞர்களுக்கு சிங்கப்பூர் கலை அமைப்புகள் ஆதரவளித்து, களம் அமைத்துக் கொடுக்கும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
“உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு அடையாளத்தைக் கொடுப்பது மொழியும் கலாசாரமும். தமிழ்க் கலாசாரமும் இசையும் பிரிக்க முடியாதவை. குறிப்பாக, தமிழரின் வாழ்வியல் முறைகளை அனைவர்க்கும் புரியும்படி எளிய வரிகளின் மூலம் கொண்டு சேர்ப்பவை நாட்டுப்புறப் பாடல்கள்.
தொடர்புடைய செய்திகள்
“எனவே, பாரம்பரியக் கூறுகளை அடுத்த தலைமுறையினர் அறிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதே சிறந்த வழி. அவ்வாறு இந்நிகழ்ச்சி அமைந்தது சிறப்பு,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத் தலைவரும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகருமான ரா.ராஜாராம்.
பல இந்தியக் கலாசார நடனங்களையும் இசைக் கருவிகளையும் சிங்கப்பூர் இளையர்கள் கற்றுவருவதைக் குறிப்பிட்ட அவர், தமிழர் பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகளும் அவற்றின் தனித்துவமும் இளையர்களிடம் சேர்க்கப்பட்டால் அவற்றின் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு அவற்றைக் கற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதற்கு தளம் அமைத்துக் கொடுப்பது கலை, மரபு சார்ந்து செயல்படும் அமைப்புகளின் கடமை எனவும் அவற்றின் ஒரு பகுதியாக இந்தியக் கலைஞர்களை அழைத்து வந்து விழா ஏற்பாடு செய்தது பெருமையானது என்றும் திரு ராஜாராம் சொன்னார்.
நாட்டுப்புறக் கலைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல இந்திய, தமிழக அரசுகள் முனைப்பு காட்டுவதாகக் கூறினார் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநர் சி. நீலமேகன், 59.
“தமிழ்க் கலைஞர்களின் புகழ் பரப்ப தமிழக அரசாங்கம் ஆதரவளிப்பதும் சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களிடம் கலைகளைக் கொண்டு சேர்க்க முயலும் அமைப்புகளுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் ஒத்துழைப்பதும் மகிழ்ச்சிக்குரியது,” என்று அவர் பகிர்ந்தார்.
சிங்கப்பூர் இளையர்களுக்கு நாட்டுப்புற நடனப் பயிலரங்குகள் நடத்தியதுடன், ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ நிகழ்வுக்கும் நடனம் அமைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கலைமாமணி மு.இளங்கோவன், 57.
பல கலைகளின் தற்போதைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்த அவர், சிங்கப்பூரர்கள் அதன் மீது காட்டும் ஆர்வம் வியப்பளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
“நாட்டுப்புறக் கலைகள் குறித்து பேசிக்கொண்டே போகலாம். எடுத்துக்காட்டாக, பின்னல் கோலாட்டம் ஒரு நுணுக்கமான நடன வடிவம். கூரையில் தொங்கும் நாடாக்களில் கட்டப்பட்ட குச்சிகளைக் கையில் வைத்துக்கொண்டு தாளத்துக்கேற்ப ஆடி, அந்நாடாக்களை அழகுறப் பின்னுவதும், அதே நடனத்தில் அவற்றை அவிழ்ப்பதுமாக அமையும் நடன வடிவம் அது.
“இதனை ஆட இந்தியாவிலேயே 10க்கும் குறைவான குழுக்களே உள்ளன. அந்த வடிவம் சிங்கப்பூர் இளையர்களை ஈர்த்துள்ளதும் அதனைக் கற்க அவர்கள் முன்வந்துள்ளதும் மகிழ்ச்சி தருகிறது,” என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சிக்கு இசையமைத்து இயக்கியவர் இந்தியாவைச் சேர்ந்த பால் ஜேக்கப். ராக் இசைக் கலைஞராகப் பயணத்தைத் தொடங்கிய இவர், நாட்டுப்புற இசையால் ஈர்க்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக நாட்டுப்புறக் கலைஞர்களுடன் பணியாற்றி வருகிறார்.
“நாட்டுப்புறக் கலைகளைப் பலதரப்பட்ட மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு திரைப்படங்கள் முதன்மையான தளமாக விளங்குகின்றன. இது பாராட்டுக்குரியது என்றாலும், அவற்றின் சுயத்தன்மை மாறாமல் கொண்டுசேர்க்க நாட்டுப்புறக் கலைக் குழுக்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
“அந்த மாற்றம் நடக்கும் என நம்புகிறேன். அதற்கு சிங்கப்பூரில் நடக்கும் ஆனந்தக் கொண்டாட்டம் அடித்தளமாக அமைந்துள்ளது,” என்றார்.
உற்சாகத்தில் பார்வையாளர்கள்
“பழமை எனச் சொல்லப்பட்ட அனைத்தும் தற்போது மரபு என உணர்ந்து இளையர்கள் அவற்றைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மரபுக் கலை நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடைபெற வேண்டுமென விரும்புகிறேன்,” என்றார் பார்வையாளர் கனகேஸ்வரி, 51.
“தமிழ்க் கலாசாரம் மெல்ல மறைந்து வருவதை உணர முடிகிறது. அவை மீண்டும் பிறக்க இதுபோன்ற கலைகளை இளையர்கள் அறிவது அவசியம். மரபுக் கலைகள் மீது ஆர்வம் இருந்தாலும் அவற்றைக் காணொளியில் பார்ப்பதற்கும் நேரடியாக கண்டு ரசிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. இதனை நேரடி நிகழ்வாகப் படைத்தது சிறப்பு,” என்றார் தாதி தெய்வானை, 31.
புதிய தகவல்களை அறியும் ஆர்வம் நிறைந்த பிஞ்சு உள்ளங்களில் மரபின் பெருமை குறித்து தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் பாலர் பள்ளி ஆசிரியை சுபா, 28.
“இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் குழந்தைகளுக்குப் புதிய உலகை அறிமுகம் செய்யலாம். இது நல்ல ஏற்பாடு,” என்றார் அவர்.
“நமது மரபுக் கலைகளை ஒரே இடத்தில் பார்ப்பது பரவசமான அனுபவம். தமிழ் மரபு குறித்து பெருமைகொள்ள வேண்டும்,” என்றனர் வைஷ்ணவி - நிவேதன் இணை.