தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறியப்படாத நாயகர்கள்: இந்த ஆண்டு புதிய விருதுகள் அறிமுகம்

4 mins read
e55d2eb6-59e7-4eb4-a738-0da9b1b69b6f
11வது ‘சிங்கப்பூரின் அறியப்படாத நாயகர்கள்’ விருது விழாவில், ஐந்து பிரிவுகளில் 118 நியமனங்களிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற 24 பேருடன் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

பள்ளி அலுவல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சக மாணவர்களின் மனநலனை மேம்படுத்தப் பாடுபடுகிறார் விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவி நியதி உமாமகேஷ்வர், 17.

சமூக ஊடகங்களில் மனநலம் சார்ந்த தகவல்களைப் பதிவேற்றுவதோடு, ஓவியந்தீட்டுவது, ‘பூனை கஃபே’யில் பூனைகளுடன் விளையாடி மகிழ்வது போன்ற அனுபவங்களையும் இளையர்களுக்கு வழங்குகிறது இவர் 2022ல் தொடங்கிய ‘மைன்ட்ஸ் அன்டேங்கில்டு’ (Minds Untangled) எனும் குழு.

தன் குடும்பத்தினர், அமைச்சர் ஓங்குடன் நியதி. தற்போது 53 இளம் தொண்டூழியர்களோடு இயங்கும் ‘மைன்ட்ஸ் அன்டேங்கில்டு’ குழுவிற்குத் தலைமைதாங்கும் நியதி, மனநலத்தை மேம்படுத்த இதயத்துடிப்பைச் சீராக்கும் காதொலிக் கருவியையும் (headphone) உருவாக்கிவருகிறார்.
தன் குடும்பத்தினர், அமைச்சர் ஓங்குடன் நியதி. தற்போது 53 இளம் தொண்டூழியர்களோடு இயங்கும் ‘மைன்ட்ஸ் அன்டேங்கில்டு’ குழுவிற்குத் தலைமைதாங்கும் நியதி, மனநலத்தை மேம்படுத்த இதயத்துடிப்பைச் சீராக்கும் காதொலிக் கருவியையும் (headphone) உருவாக்கிவருகிறார். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கம் (சிஏஎஸ்) ஆண்டுதோறும் ஏற்பாடுசெய்யும் ‘சிங்கப்பூரின் அறியப்படாத நாயகர்கள்’ விருது விழாவில் இவ்வாண்டு அறிமுகமான ஐந்து மாணவ உச்ச (APEX) விருதுகளில் ஒன்று நியதிக்கு வழங்கப்பட்டது.

இவற்றோடு, ‘உறுதியளிக்கும் முன்னோடி’, ‘மனிதநேய நெஞ்சம்’, ‘முன்மாதிரி இளையர்’, ‘தலைசிறந்த பெரியவர்’, ‘அன்பான வெளிநாட்டவர்’ என ஐந்து பிரிவுகளின்கீழ் 24 விருதுகள், செப்டம்பர் 7ஆம் தேதி, ஷங்ரி-லா விடுதியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

மொத்தம் 118 நியமனங்களிலிருந்து 24 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐவர் (ஒரு பிரிவுக்கு ஒருவர்) ‘சிங்கப்பூரின் அறியப்படாத நாயகர்’ விருதுகளை வென்றனர்.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் விருதுகளை வழங்கினார். “நாயகர்களுக்குப் பொறுப்புகள் உள்ளன. அவர்கள் களப்பணி ஆற்ற வேண்டியுள்ளது. நிதி திரட்ட வேண்டியுள்ளது. நன்கொடை வழங்குவோர் சில தரநிலைகளை அவர்கள் பூர்த்திசெய்ய வேண்டும் என்று கூறுவர். விதிகள் தேவைதான், ஆனால், நாயகர்களுக்கு நம்பிக்கை அளித்து வலுவூட்டுவதும் முக்கியம். இரண்டிலும் சமநிலை காணவேண்டும்,” என்றார் அமைச்சர் ஓங்.

“சமுதாயத்தால் கைவிடப்பட்டதாகக் கருதும் இளையர்களுக்கு மறுமலர்ச்சியளிக்க, ‘தடைகளை உடைத்தல்’ எனும் புதிய இளையர் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவிக்கிறோம். நம் அறியப்படாத நாயகர்களில் சிலர், இந்த இளையர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பர்,” என்றார் சிஏஎஸ் தலைவர் எம் பி செல்வம்.

11வது ஆண்டாக இவ்விழாவை ஏற்பாடுசெய்யும் ‘சிஏஎஸ்’ அமைப்பு, அதன் 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

விதிகள் தேவைதான், ஆனால், நாயகர்களுக்கு நம்பிக்கை அளித்து வலுவூட்டுவதும் முக்கியம். இரண்டிலும் சமநிலை காணவேண்டும்
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்

வெளிநாட்டவருக்குக் கைகொடுக்கும் தோழர்

‘அன்பான வெளிநாட்டவர்’ பிரிவில் விருதைப் பெற்ற அப்துல் கரீம், 32, கொவிட்-19 கிருமிப்பரவலின்போது வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் பல முக்கியத் தகவல்களைத் தன் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றினார்.
‘அன்பான வெளிநாட்டவர்’ பிரிவில் விருதைப் பெற்ற அப்துல் கரீம், 32, கொவிட்-19 கிருமிப்பரவலின்போது வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் பல முக்கியத் தகவல்களைத் தன் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘அன்பான வெளிநாட்டவர்’ பிரிவில் விருதைப் பெற்றார் அப்துல் கரீம், 32.

சிங்கப்பூருக்குப் புதிதாக வரும் அல்லது உதவி கேட்கும் பங்ளாதே‌ஷ் ஊழியர்களிடமிருந்து இவருக்கு அன்றாடம் கிட்டத்தட்ட 100 தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும். அவர்களை மோசடிகளிலிருந்து காத்து, சந்தேகங்களை இவர் தீர்த்துவைக்கிறார்.

தற்போது வெள்ளத்தால் பாதிப்படைந்த இந்தியா, பங்ளாதேஷ், நேபாளம் ஆகியவற்றுக்கு ‘ஹுமானிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பு வழியாக இவர் நிதி திரட்டிவருகிறார்.

மக்களின் நாயகர்

இணைய வாக்களிப்புப் போட்டியில் ‘தலைசிறந்த பெரியவர்’ பிரிவில் வென்ற ‘த சோவர்ஸ் நொவீனா’ (The Sowers Novena) தலைவர் ஜோசஃப் வின்சென்ட், 64, ஞாயிற்றுக்கிழமைகளில் வெவ்வேறு தாதிமை இல்லங்களுக்குச் சென்று தொண்டாற்றுகிறார்.
இணைய வாக்களிப்புப் போட்டியில் ‘தலைசிறந்த பெரியவர்’ பிரிவில் வென்ற ‘த சோவர்ஸ் நொவீனா’ (The Sowers Novena) தலைவர் ஜோசஃப் வின்சென்ட், 64, ஞாயிற்றுக்கிழமைகளில் வெவ்வேறு தாதிமை இல்லங்களுக்குச் சென்று தொண்டாற்றுகிறார். - படம்: ரவி சிங்காரம்

ஆகஸ்ட் 21 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற இணைய வாக்களிப்புப் போட்டியில் ‘தலைசிறந்த பெரியவர்’ பிரிவில் வென்றார் ‘த சோவர்ஸ் நொவீனா’ தலைவர் ஜோசஃப் வின்சண்ட், 64.

மூத்தோர் நலனுக்காகக் கடந்த 20 ஆண்டுகளாக உழைக்கும் இவர், ஓரறை வீடுகளில் வசிப்போர், வெளிநாட்டு ஊழியர்கள் போன்றோருக்கு உதவும் திட்டங்களுக்குத் தலைமைதாங்கி வருகிறார்.

இவர் தலைமைதாங்கிய ‘ஷேர்-அ-பாட்@ஹோம்’ஆறு-மாத இயக்கத்தின் மூலம், 100 தொண்டூழியர்கள் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசிகளுக்கு 320 உணவுப் பொட்டலங்கள் வழங்கினர்.

2,500 பேருக்கான கேளிக்கை விழா உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர் நிகழ்ச்சிகள், ‘டாட்ஸ் ஃபார் லைஃப்’ (Dads for Life) தூதராக தந்தை-மகன் உறவை வலுவாக்கப் பல பள்ளி நிகழ்ச்சிகளை அவர் ஏற்பாடுசெய்துள்ளார்.

பல்துறையில் முன்னோடி

17 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவராகச் சேவையாற்றிய திரு எம் கே பாசி, 94, ‘உறுதியளிக்கும் முன்னோடி’ பிரிவில் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்.
17 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவராகச் சேவையாற்றிய திரு எம் கே பாசி, 94, ‘உறுதியளிக்கும் முன்னோடி’ பிரிவில் இறுதிச் சுற்றுக்குச் சென்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘உறுதியளிக்கும் முன்னோடி’ பிரிவில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற திரு எம் கே பாசி, 94, விக்டோரியா பள்ளியில் ஆசிரியராகத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அத்துறையில் சிறந்து, 1985ல் பள்ளித் துணைத் தலைமையாசிரியராகப் பணி ஓய்வுபெற்றார்.

இவர் 17 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவராக இருந்தார். இவரது தொண்டூழியத்துக்கு அப்போதைய சமூக மேம்பாட்டு அமைச்சு நெடுநாள் சேவை விருதும் வழங்கியது.

திரு பாசியின் கவிதைகள் கேரளா, அமெரிக்கா, சிங்கப்பூரில் அங்கீகாரம் பெற்றுள்ளன. அவர் 2001, 2002ல் அனைத்துலகக் கவிதை நூலகத்தின் ‘ஆசிரியரின் தெரிவு’ (Editor’s Choice) விருதையும் பெற்றார்.

இளையரை வலுப்படுத்தும் இளையர்

சிண்டா இளையர் மன்றத்தின் இளையர் ஈடுபாடு, மேம்பாட்டுத் தலைவர் டனுஷா கதிரேசன், 25, சிண்டா இளையர் தலைமைத்துவக் கருத்தரங்கு, ஒருங்கிணைப்பாளர் இணைப்பு (The Facilitators Nexus) போன்றவற்றில் தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்துவருகிறார்.
சிண்டா இளையர் மன்றத்தின் இளையர் ஈடுபாடு, மேம்பாட்டுத் தலைவர் டனுஷா கதிரேசன், 25, சிண்டா இளையர் தலைமைத்துவக் கருத்தரங்கு, ஒருங்கிணைப்பாளர் இணைப்பு (The Facilitators Nexus) போன்றவற்றில் தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்துவருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘முன்மாதிரி இளையர்’ பிரிவில் சிண்டா இளையர் மன்றத்தின் இளையர் ஈடுபாடு, மேம்பாட்டுத் தலைவர் டனுஷா கதிரேசன், 25, இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

உயர்நிலைப் பள்ளியில் வருடாந்தர அரிசி விநியோகம் மூலம் இவருக்குத் தொண்டூழியத்தில் ஏற்பட்ட ஆர்வம், சிண்டா இளையர் மன்ற நடவடிக்கைகளில் 2018ஆம் ஆண்டு முதல் பங்கேற்கத் தூண்டியது.

“உயர்நிலைப் பள்ளியில் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லாதது போன்றிருந்தது. மற்ற இளையர்களுக்கு இப்படி நேரக்கூடாது என சிண்டா இளையர் வலுவூட்டல் முகாமை (SINDA Youth Empowerment Camp) 2021ல் தொடங்கினேன்,” என்றார் டனுஷா.

தொண்டூழியத்துக்கு எல்லை இல்லை

ஆகாஷ் மொஹபத்ரா, 56, வெளிநாட்டு ஊழியர்களின் தோழராக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவாஸ் தீயில் உயிர்பிழைத்த ஐவரைத் தொடர்ந்து ஆதரித்துவருகிறார். 
ஆகாஷ் மொஹபத்ரா, 56, வெளிநாட்டு ஊழியர்களின் தோழராக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவாஸ் தீயில் உயிர்பிழைத்த ஐவரைத் தொடர்ந்து ஆதரித்துவருகிறார்.  - படம்: ரவி சிங்காரம்

‘தலைசிறந்த பெரியவர்’ பிரிவில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற ஆகாஷ் மொகபத்ரா, 56, 2009ல் இந்தோனீசியாவின் பாடாங் நிலநடுக்கத்தின்போது, அங்கு ஒரு பள்ளியை மறுசீரமைக்கும் அணியை வழிநடத்தினார். கொவிட்-19 கிருமிப் பரவலின்போது இந்திய மருத்துவமனைகளுக்கு உயிர்வாயுக் கலன்களைத் தேடித் தந்தார்.

தம்மோடு பணியாற்றியவர் உயிரை மாய்த்துக்கொண்டபோது ஆகாஷின் வாழ்வு தலைகீழானது. அதனால், அவர் தன் சக தொண்டூழியருடன் மனநலத் திரைப்பட விழாவைத் தொடங்கினார். இவ்வாண்டு நவம்பர் 7 முதல் 10ஆம் தேதி வரை இவ்விழா ஐந்தாம் ஆண்டாக நடைபெறவிருக்கிறது.

‘மனத் திண்மையே அடையாளம், உடல் ஊனமன்று’

‘எஸ்ஜி எனேபல் ஐசேம்ப்ஸ்’ (iChamps) திட்டத்தில் தொண்டாற்றும் ஹம்ஃபிரிஸ் வாரன் ஷெல்டன், 54, ‘எனேபிலிங் வில்லேஜ்’ஜின் உடற்குறையுடைய முதல் மூன்று சுற்றுலா வழிகாட்டிகளில் ஒருவர். 
‘எஸ்ஜி எனேபல் ஐசேம்ப்ஸ்’ (iChamps) திட்டத்தில் தொண்டாற்றும் ஹம்ஃபிரிஸ் வாரன் ஷெல்டன், 54, ‘எனேபிலிங் வில்லேஜ்’ஜின் உடற்குறையுடைய முதல் மூன்று சுற்றுலா வழிகாட்டிகளில் ஒருவர்.  - படம்: ரவி சிங்காரம்

‘மனிதநேய நெஞ்சம்’ பிரிவில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற ஹம்ஃபிரிஸ் வாரன் ஷெல்டன், 54, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர். ‘ஷார்கட்-மேரி-டூத்’ நோயினால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த மன உளைச்சலில் அவர் பலமுறை உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தார். குடும்பத்தினரின் அன்புதான் அவரைக் காப்பாற்றியது.

அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் ஊனமுற்றோரின் நிலைமையைப் புரிந்துகொண்டு அவர்கள் வாழ்வில் புதிய கண்ணோட்டம் பெற அவர் உதவிவருகிறார்.

மாபெரும் வெற்றியாளர்கள் காணொளிகள்

குறிப்புச் சொற்கள்