பருவமழை காலத்தில் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஆண்டுதோறும் ஏற்பட்டாலும் இவ்வாண்டு வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், காய்கறிகளின் விளைச்சலைப் பாதித்துள்ளது.
மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், இந்தோனீசியா, இந்தியா, இலங்கை என சிங்கப்பூருக்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பல்வேறு நாடுகளில் விளைச்சலும் விநியோகச் சங்கிலிகளும் பாதிப்படைந்துள்ளன.
மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் காய்கறிகளை அதிகம் நம்பியுள்ள கடைக்காரர்கள், இந்தக் காலகட்டத்தில் உயர்ந்த விலைகளையும் பாதிக்கப்பட்ட விநியோகத்தையும் எதிர்நோக்குகின்றனர்.
வெள்ளத்தால் விளைச்சல் மட்டுமின்றி காய்கறிகளின் தரமும் பாதிக்கப்படுகிறது. காய்கறிகளில் இலை காய்கறிகள், பாகற்காய், சில்லி போன்ற ஒருசில வகைகள், மற்ற காய்கறிகளைக் காட்டிலும் கனமழையால் அதிகம் சேதமுறுகின்றன.
காய்கறிகளைத் தருவிப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், விலையேற்றம் குறித்தும் இந்நிலையைச் சமாளிக்க தாங்கள் கையாண்டுவரும் அணுகுமுறைகளைப் பற்றியும் தமிழ் முரசு பேட்டிகண்ட காய்கறி, உணவுப்பொருள் வர்த்தகர்கள் விளக்கினர்.
தக்காளி, கீரை, தேங்காய் விலை ஏறுமுகம்
மலேசியாவிலிருந்து வரும் தக்காளி, கீரை போன்ற காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாக ராகவேந்திரா டிரேடிங்கின் இயக்குநர் மணிமாறன் தெரிவித்தார்.
வியட்னாமிலும் தாய்லாந்திலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தமிழர்கள் பயன்படுத்தும் வாழையிலைகளின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் அளவைக் காட்டிலும் தேவை அதிகமாக இருப்பதாகக் கூறிய திரு மாறன், ஒரே நேரத்தில் மூன்று நாடுகளிலுமே பெருவெள்ளம் ஏற்பட்டது கடும் சவாலைத் தந்திருப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“கொவிட்-19 நேரத்தில்கூட நாங்கள் இவ்வளவு சிரமப்படவில்லை. இந்தியக் காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தாலும் அங்கிருந்தும் மியன்மாரிலிருந்தும் அதிகமாகத் தருவிக்க முற்பட்டுள்ளோம். இருந்தபோதும். இந்தியாவிலுமே இதே வெள்ளப் பிரச்சினை நிலவுகிறது,” என்று திரு மணிமாறன் கூறினார்.
இதே பாதிப்பைத் தாமும் உணர்வதாகக் கூறிய பஃப்பலோ சாலைக் கடையில் பணியாற்றும் ராஜேஷ், “மலேசியாவிலிருந்து, இந்தியாவிலிருந்து முன்புபோலவே காய்கறிகள் வருகின்றன. தாய்லாந்திலிருந்து சற்று குறைவாக வருகிறது. கீரைவகைகளின் தரம் மட்டும் சற்று குறைகிறது,” என்றார்.
கொத்தமல்லிக்குத் தட்டுப்பாடு
மலேசியாவிலிருந்து வரும் தக்காளியின் விலை ஏறியுள்ளது என்றும் தேங்காய், இடைப்பட்ட சில நாள்களாகத் தருவித்து விற்கத் தங்களால் முடியவில்லை என்றும் கடைக்காரர்கள் கூறினர்.
முன்பு ஒரு கிலோகிராமுக்கு $1.50 முதல் $2 வரை விற்கப்பட்டு வந்த தக்காளியின் விலை உயர்ந்து தற்போது கிலோவுக்கு $2.20 முதல் $3.30 வரையிலான விலையில் விற்பனை காண்கிறது.
தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விற்பனையே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கடைக்காரர்கள் கூறினர்.
இந்தியர்களின் சமையலுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்றான கொத்தமல்லி, தாய்லாந்திலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாகவே தாய்லாந்திலிருந்து கொத்தமல்லி வருவது குறைவாகவே உள்ளது என்றும் சில நேரத்தில் அதுகூட கிடைப்பதில்லை என்றும் ‘குட் லக் ஸ்பைஸ் மார்ட்’ மேலாளர் ராஜகுமார் தெரிவித்தார்.
“கிடைக்கும் கொத்தமல்லியும் விலை உயர்வாக உள்ளது. வழக்கமாக தாய்லாந்து கொத்தமல்லி பத்து கிலோகிராம் $60 என்ற விலையில் வரும். ஆனால், வெள்ளத்தினால், பத்து கிலோகிராம் $140 என விலை, இரு மடங்கிற்கு மேல் உயர்ந்தது.” என்று திரு ராஜகுமார் கூறினார்.
இதனால் கடைக்காரர்கள் இந்தியாவிலிருந்து வரும் கொத்தமல்லியையே தற்சமயம் கூடுதலாக வாங்கி விற்கின்றனர்.
ஆனால் தாய்லாந்து மல்லித்தழை வேர்களோடு வரும்; இந்திய மல்லியில் வேர்கள் வெட்டப்பட்டிருக்கும். பலரும் வேரோடு வரும் மல்லித்தழையையே விரும்புவதாகக் கூறினார் திரு ராஜகுமார்.
இதனை ஒப்புக்கொள்வதாகக் கூறிய ‘பாலவீரா டிரேடிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த ரெ.வசந்த், “இந்தியாவிலிருந்து வரும் மல்லித்தழை ஒரு நாள்தான் தாங்கும். குளிர்ச்சி அதிகமாக இருந்தால் சீக்கிரமாகக் காய்ந்துபோய்விடும். தாய்லாந்திலிருந்து வரும் மல்லித்தழை மூன்று நாள்கள்வரைக்கூட தாங்கும்,” என்றார்.
துளசி இலை விலையும் கூடியுள்ளது. அத்துடன், தாய்லாந்திலிருந்து வரும் சுண்டைக்காயும் இன்னும் வரவில்லை என்றார் ‘கேவிஆர்எஸ் சூப்பர்மார்ட’ மேலாளர் சியாமளன்.
“தாய்லாந்து சிறு வெள்ளரிக்காய், சிறு கத்திரிக்காய், சிறு பாகற்காய். பச்சை மிளகாய் இவை அனைத்தும் விலை ஏறியுள்ளன,” என்றார் யூச்சுவான் டிரேடிங் மேலாளர் சிவா.
இருமடங்காக உயர்ந்த முருங்கை விலை
இந்தியாவிலிருந்து வரும் காய்கறிகளில் முருங்கைக்காய் விலை மட்டும் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு கிலோகிராம் $7 முதல் $7.50 வரை விற்றுவந்த முருங்கைக்காய் இப்போது ஒரு கிலோகிராம் $13 முதல் 17 என்ற விலைக்கு லிட்டில் இந்தியாவில் உயர்ந்துள்ளது.
“இப்போது வட இந்தியாவிலிருந்து முருங்கைக்காய் வருவதால் விலை உயர்ந்துள்ளது,” என்று யூச்சுவான் டிரேடிங் மேலாளர் சிவா தெரிவித்தார்.
வெள்ளத்திற்குப் பின் மீண்டும் பயிரிட்டுப் பயிர்கள் தழைக்க மேலும் ஒரு மாதம் ஆகும் என்றும் அதற்குபின்புதான் விலைகள் வழக்கநிலைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
செம்பனை எண்ணெய்
மலேசிய வெள்ளத்தால் செம்பனை எண்ணெய்யின் விலை ஏறக்கூடும் என மலேசிய செம்பனை எண்ணெய் மன்றம் (MPOC) தனது தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
செம்பனை எண்ணெயையும் மூலப்பொருளாகக் கொண்ட அங்கிள் சபாஸ் பப்படம், தாஜ்மகால் அப்பளம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பவானி டிரேன்ஸ்சின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாஸ், உற்பத்திக்கான செலவின் அதிகரிப்புக்குத் தயாராகி வருகிறார்.
“தயாரிப்புச் செலவுகள் ஏற்கெனவே ஏறுமுகமாகி வருகையில் கூடுமானவரையில் பொருள்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க முற்படுகிறோம்,” என்று திரு ஸ்ரீநிவாஸ் கூறினார்.

