பாகிஸ்தானின் கராச்சி நகரில் நவம்பர் 30ஆம் தேதி நடந்தேறிய நடனக் கலைநிகழ்ச்சியில் பல்திறன் கொண்ட நடனக் கலைஞர்கள், மனநலிவு (Down Syndrome) கொண்ட நடனமணி கேத்தரின் ஜோன் தேவதேசன் எழுதிய கவிதைகளைப் பிணைத்து நடன வடிவில் ஒரு கதைக்களம் படைத்தனர்.
லின் யிசென் ஜூன், 41, வெங் ஜியாயிங், 35, அரசி மரியா ராஜ்குமார், 31, ஆகிய நடனமணிகளுடன் திரு இம்ரான் மாணவ், 51, திருமதி கவிதா கிருஷ்ணன், 54, இருவரும் கராச்சிக்குச் சென்றனர்.
இவர்கள், நடனமணிகளின் பராமரிப்பாளர்கள் கிறிஸ்டின் வான் பர்ம், ஜாய்ஸ் வெங் இருவருடன் ‘ரேண்டம் சாப்டர்ஸ்’ தயாரிப்பின் ஒரு பகுதியான ‘பிளேகிரவுண்ட் சாப்டர்’ நிகழ்வில் திருமதி கவிதாவுடனும் நடனக் கலைஞர்கள் குழுவுடனும் இணைந்து நடனமாடினர்.
கலை இயக்குநர், நடன அமைப்பாளர், பயிலரங்க ஒருங்கிணைப்பாளராக திருமதி கவிதா பொறுப்பேற்றார். படைப்பாற்றல் தயாரிப்பாளர், மேடை மேலாளர், திட்டத் தலைவர் பொறுப்புகள்மூலம் திரு இம்ரான் பங்காற்றினார்.
நடனக் கலைஞர்கள் முகமது ஷாருல், ரூய்மின் இருவரும், இசை மேதை கய்லின் யோங்கின் நேரடி இசை மற்றும் இசைக்கோர்ப்பின் மூலம் பாரம்பரிய மலாய், சீன நடனங்களுக்கு உயிர்கொடுத்தனர்.
ஜூன், ஜியாயிங் இருவரும் சேர்ந்து 10 மணி நேரத்தில் உருவாக்கிய ஐந்து நிமிட இரட்டையர் நடனம் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.
நடனக் கலைஞர்கள் குழுவைச் சேர்ந்த மூன்று நடனக் கலைஞர்கள், பாகிஸ்தான் சென்றவுடன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோதிலும் மிகுந்த மனவுறுதியுடன் செயல்பட்டனர்.
பயிற்சிகளைத் தவிர்க்காமல் அவர்கள் தொடர்ந்து போராடினர். அவர்களின் மனவுறுதியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்,” என்றார் திருமதி கவிதா.
தொடர்புடைய செய்திகள்
“இந்தத் தயாரிப்பின் ஒரு பகுதியில் நடனக் கலைஞர்களின் பராமரிப்பாளர்களையும் கலைஞர்களாகப் பங்கேற்க நான் அழைத்தபோது அவர்கள் தயங்காமல் பங்கேற்றனர்,” என்றார் அவர்.
“எங்களின் மலாய், சீன நடனமணிகள் பரதநாட்டிய நடனங்களின் சங்கமத்தின் மூலம் சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தை வெளிப்படுத்தியதுடன், விழாவின் பன்முகத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கிய உணர்வையும் வெளிப்படுத்தியது,” என்றார் திரு இம்ரான்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி மூலம் இந்தப் பயணம் சாத்தியமானது. பாகிஸ்தானில் இந்தக் குழுவுக்கு உற்சாகமான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
மார்ச்சிங் பேண்ட் மற்றும் நரம்பியல் (neurodivergent) குறைபாடுள்ளோர் கைவினைத் தொழில் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்குச் சென்றனர்.
“கராச்சியில் மேளதாளங்களுடன் எங்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது மிகவும் பிடித்திருந்தது,” என்று அரசி கூறினார்.
அங்கு நடனக் கலைஞர்கள் இணைந்து நடத்திய இரண்டு மணி நேரப் பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது.
“நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகளைத் தெரிவித்தனர். இது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அளித்தது,” என்றார் ஜூன்.
“சிந்து மாகாண முதல்வர், கலைக் கழகத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நடனக் கலைஞர்களை நேரில் பாராட்டினர். சிந்து மாகாண முதல்வர் என்னுடன் கைகுலுக்கி என்னைப் பாராட்டினார்,” என்று ஜியாயிங் கூறினார்.
சிக்கலான மாற்றங்களைத் தடையின்றிக் கையாண்ட கலைஞர்களின் தொழில்முறைத் திறனைப் பார்த்தவர்கள், மாற்றுத்திறனாளிகளின் கலைகள் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

