தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோடை விடுமுறையின் மதிப்பை அதிகரிக்க விரும்பும் சிங்கப்பூரர்கள்

2 mins read
2444be0b-0510-45dd-b891-717799f6a10c
புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கும் மற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் கோடை விடுமுறைக்காலத்தில் சென்றுவர ஆகும் தோராயமான செலவுப் பட்டியலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. - படம்: பிக்சாபே
multi-img1 of 2

இவ்வாண்டு கோடை விடுமுறையைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஏறத்தாழ 90 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் விரும்புவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

‘ஸ்கை ஸ்கேனர்’ பயண முன்பதிவு இணையத்தளம் கடந்த மாதம் 2,000 சிங்கப்பூரர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவில், சிங்கப்பூர்ப் பயணிகள், திட்டமிடல், செலவு எனப் பயணத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் அதிக மதிப்பைப் பெறுவதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு கோடை விடுமுறை இலக்குகளை எட்டியதாகவும் இவ்வாண்டு விடுமுறையை அதனைவிடச் சிறந்த முறையில் செலவழிக்க விரும்புவதாகவும் ஆய்வு கூறியுள்ளது.

பதிலளித்தோரில் 54 விழுக்காட்டினர் தங்கள் கோடை விடுமுறையை நீட்டிக்க விரும்புவதாகவும் 38 விழுக்காட்டினர் சமூக ஊடகத்தில் உலாவரும் பயணம் தொடர்பான உள்ளடக்கங்களாலும், பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோராலும் ஈர்க்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பயணத்திற்கான செலவை அதிகரிக்கத் தயாராக உள்ள சிங்கப்பூரர்களில் பாதிப் பேர் அதற்குரிய மதிப்பைப் பெற பல்வேறு இணையத்தளங்களில் விமான, தங்குவிடுதிக் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதாகத் தெரிகிறது.

விடுமுறைக்கால நெரிசலைத் தவிர்ப்பதற்காக 42 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் தங்கள் கோடை விடுமுறையை நீட்டிக்கத் திட்டமிடுவதாகவும் ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது.

தொடர்ந்து பயணச் செலவுகளைக் குறைப்பதற்காக 78 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் பயணத் தேதியை மாற்றியமைத்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு அதிகமானோர் பயணம் செய்யும் புகழ்பெற்ற இடங்களை விடுத்து, அதிகம் அறியப்படாத இடங்களுக்குச் செல்லவும் 77 விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

36 விழுக்காட்டினர் ஒரே பயணத்தில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க விரும்புவதையும் ஆய்வு சுட்டுகிறது.

மேலும், அந்நிறுவனம், பாலி, லண்டன், பெர்த், பினாங்கு போன்ற பொதுவாகப் பலரும் சென்றுவரும் புகழ்பெற்ற பத்து இடங்களையும் அவற்றுக்கு மாற்றாக இந்தோனீசியாவின் லபுவான் பாஜோ, பிலிப்பீன்சின் இலோயிலோ நகர், தாய்லாந்தின் ஹாட் யாய் உள்ளிட்ட பத்து மாற்றிடங்களையும் பரிந்துரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்