‘கில்லி’யாக விளையாடும் சிங்கப்பூர் கபடி அணிகள், தாய்லாந்து செல்கின்றன

2 mins read
முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் கபடி சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சிங்கப்பூர், 15 பேர் கொண்ட இரு அணிகளை - ஆண்கள் ஒன்று, பெண்கள் ஒன்று - அனுப்பவுள்ளது.
c04b2562-e58c-4843-8d06-52c5b92fde5c
முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள பெண்கள் கபடி அணி. மலாய்ப் பெண்மணி புத்ரி (நடுவில்) அணியில், தமிழர் அல்லாத ஒரே நபர். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

வழக்கமாக அணிக்கு எழுவருடன் விளையாடப்படுவது கபடி. ஆனால் தென்கிழக்காசிய விளையாட்டுகளிலோ மூன்று பிரிவுகளில் (அணிக்கு மூவர், அணிக்கு ஐவர், அணிக்கு எழுவர்) கபடி விளையாடப்படும். சிங்கப்பூரின் இரு அணிகளும் அம்மூன்று பிரிவுகளில் போட்டியிட்டு, மொத்தம் ஆறு பதக்கங்களை வெல்லக் குறிவைக்கின்றன.

முதல் நான்கு நாள்கள் எழுவராக விளையாடி, அடுத்தடுத்து மற்ற இரு பிரிவுகளிலும் அவர்கள் போட்டியிடுவர்.

சென்ற செப்டம்பர் மாதம், பினாங்கில் தென்கிழக்காசிய கபடிச் சங்கம் ஏற்பாடுசெய்த முன்னோட்டப் போட்டிகளில் இரு அணிகளும் ஒவ்வொரு பிரிவிலும் வெண்கலம் வென்றன.

பாலி கபடிப் போட்டிகளுக்குச் சென்ற கடந்த ஆண்டின் தேசிய அணியினர்.
பாலி கபடிப் போட்டிகளுக்குச் சென்ற கடந்த ஆண்டின் தேசிய அணியினர். - படம்: மத்திய சிங்கப்பூர் கபடிச் சங்கம்

“பெண் விளையாட்டாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. ஏனெனில், சிங்கப்பூர் பள்ளிகளில் பொங்கல் அல்லது தமிழ் முகாம்களில் கபடி பாரம்பரிய விளையாட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே விளையாடிய அனுபவத்துடன் பெண்கள் சற்று திரளாகவே வந்தார்கள்,” என்றார் தேசிய விளையாட்டாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் மத்திய சிங்கப்பூர் கபடி சங்கத் தலைவர் சிவநேசன்.

ஆண்கள் அணி 2023 முதல் அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. பெண்கள் அணியோ, டிசம்பர் மாதம் நடந்த தேர்வுச் சுற்றுக்குப் பிறகு அமைக்கப்பட்டது.

தென்கிழக்காசியாவில் தாய்லாந்து முன்னணி அணியாக இருப்பதாகவும் மலேசியா கடும் போட்டி தருவதாகவும் கூறினார் திரு சிவநேசன்.

முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள ஆண்கள் கபடி அணி.
முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள ஆண்கள் கபடி அணி. - படம்: பெரித்தா ஹரியான்

கபடி என்பது தமிழரின் பிரபல விளையாட்டாக இருப்பினும் அணிகளில் பிற இனத்தவரும் உள்ளனர்.

ஆண்கள் அணியில் இரு மலாய்க்காரர்களும் (ஐடில் அ‌ஷ்ராஃப், ரயான்) ஒரு சீனரும் (பிரையன்), பெண்கள் அணியில் ஒரு மலாய் பெண்ணும் (புத்ரி) உள்ளனர்.

ஆண்கள் அணித் துணைத் தலைவரான ஐடில், திறமையாக எதிரணியைத் தாக்குபவர். கபடிக்கு சமூக ஊடகங்கள்வழி அறிமுகமான ஐடில், 2022ல் தேசிய சேவை செல்வதற்கு முன் கபடிப் பயிற்சிகளில் சேர்ந்தார்.

உயர்நிலைப் பள்ளியில், தன் இந்திய நண்பர் கபடியை ரயானுக்கு அறிமுகப்படுத்தியபோது அதன்வழி மற்றோர் இனத்தவரின் கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ரயானிடத்தில் பெருகியது. பிரையனோ காற்பந்தாட்டக்கார். பள்ளிக் கபடி அணியில் போதிய விளையாட்டாளர்கள் இல்லாததால் உதவுவதோடு தொடங்கியது அவரது கபடிப் பயணம்.

ஜுஜித்சு வீராங்கனை புத்ரி இவ்வாண்டு ஆசிய இளையர் விளையாட்டுகளில்கூட ஜுஜித்சுவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தவர்.

குழு விளையாட்டு ஒன்றை விளையாடலாம் என அவருக்குத் தோன்றியது. கபடி அவரை ஈர்த்தது.

நாளடைவில் நால்வருக்கும் கபடி மிகவும் பிடித்த விளையாட்டாக மாறியது.

“கபடி விளையாட்டை ஆக உயர்தரத்தில் காண்பிக்க விரும்புகிறோம். ஆறு பிரிவுகளில் ஐந்து நாடுகளுடன் போட்டியிடுவது எளிதன்று. ஒவ்வொரு பிரிவிலும் பதக்கம் வெல்வதே எங்கள் இலக்கு,” என்றார் ஆண்கள் அணித் தலைவர் விஷ்வ தேவா.

“பெண்கள் அணியை வழிநடத்துவது இதுவே என் முதல் முறை. இவ்வளவு திறன்மிக்க, பற்றுகொண்ட விளையாட்டாளர்களுக்குத் தலைமைதாங்குவதில் பெருமைகொள்கிறேன்,” என்றார் பெண்கள் அணித் தலைவர் மித்ரா.

குறிப்புச் சொற்கள்