தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
எஸ்ஜி60 கொண்டாட்டத்துக்குத் தயாராகிறது சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய லெகோ சுவரோவியம்

2 mins read
06788534-f77b-4c58-83db-353ba16cbec0
தேசிய அரும்பொருளகத்தில் உள்ள லெகோ சுவரோவியம் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாடத் தயாராகிவிட்டது சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம்.

அரும்பொருளகம் நோக்கிச் செல்வோரை வரவேற்கக் காத்திருக்கிறது நாட்டின் ஆகப் பெரிய லெகோ சுவரோவியம்.

ஜூலை 18ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சுவரோவியத்தில் மக்களும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டலாம்.

லெகோ நிறுவனமே அந்தச் சுவரோவியத்தை உருவாக்கி அரும்பொருளகத்திற்கு அனுப்பியது.

ஏழு மீட்டர் நீளத்திலும் 2 மீட்டர் உயரத்திலும் கம்பீரமாக நிற்கும் சுவரோவியம், அரும்பொருளகத்தின் புதிய கண்காட்சிகளில் இடம்பிடித்துள்ள லெகோ அமைப்புகளில் ஒன்று.

‘சிங்கப்பூரின் கதைகள்: செங்கல் செங்கல்லாக நம் மரபுடைமையைக் கட்டியெழுப்புவது’ (Stories of Singapore: Building Our Heritage, Brick by Brick) என்பது கண்காட்சியின் பெயர்.

‘சிங்கப்பூரின் கதைகள்: செங்கல் செங்கல்லாக நம் மரபுடைமையைக் கட்டியெழுப்புவது’ என்பது கண்காட்சியின் பெயர்.
‘சிங்கப்பூரின் கதைகள்: செங்கல் செங்கல்லாக நம் மரபுடைமையைக் கட்டியெழுப்புவது’ என்பது கண்காட்சியின் பெயர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதில் சிங்கப்பூர் வரலாற்றில் இடம்பிடித்த முக்கிய நினைவுச்சின்னங்களின் பெரிய வடிவமைப்புகளும் சில்லி கிராப், நொன்யா குவே போன்ற பிரபல உள்ளூர் உணவுகளும் உள்ளன.

கண்காட்சியில் சீன மேம்பாட்டு உதவிச் சங்கத்தின் மாணவர்கள் கைவண்ணத்தில் உருவான எட்டு லெகோ கலைப்படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 17ஆம் தேதி கண்காட்சி அறிமுகம் செய்யப்பட்டது.

அதில் முக்கிய இடம்பிடித்த லெகோ சுவரோவியம், சிங்கப்பூர்ச் சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்தது.

கண்காட்சிக்கு வருவோர் சுவரோவியத்தின் இறுதிப் பகுதியை முடித்துக்கொடுக்க உதவலாம். சிங்கப்பூரின் தனித்துவமான கடைவீடுகளின் பகுதி இன்னும் முடிக்கப்படவில்லை.

பார்வையாளர்கள் லெகோக்களை அதில் சேர்க்கலாம்.

பிள்ளைகளும் லெகோவில் ஆர்க்கெட் மலரைச் செய்துபார்க்க வாய்ப்புண்டு.

அதைவிட மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், பிள்ளைகள் செய்த லெகோ படைப்பை அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

தேசிய தினக் கொண்டாட்டத்தின் மற்றோர் அங்கமாக தேசிய தின ஒளியூட்டு திரும்புகிறது. அரும்பொருளக முகப்பில் பளிச்சிடும் ஒளிக்காட்சிகள் மக்களை மீண்டும் கவர வருகின்றன.

இரவு 7.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை அரும்பொருளகத்துக்கு முன்னால் இருக்கும் புல்வெளியில் அமர்ந்து வண்ண வண்ண ஒளிக்காட்சிகள் சொல்லும் சிங்கப்பூரின் கதையைப் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்.

இரவு 7.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை அரும்பொருளகத்தில் ஒளிக்காட்சி இடம்பெறும்.
இரவு 7.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை அரும்பொருளகத்தில் ஒளிக்காட்சி இடம்பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்