மெல்லிசை கமழ, ரசிகர்கள் சூழ, சிங்கப்பூரின் நான்கு மொழிக் கவிஞர் வட்டங்கள் பூவின் இதழ்களைப் போல ஒன்றாய் இணைந்தன.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற மூன்று நாள் விழாவில் கவிதை வாசிப்பு ஒட்டிய நிகழ்ச்சிகள் நடந்தேறின.
பதினொன்றாம் முறையாக இந்நிகழ்ச்சியைத் தமிழ்த் துணைக்குழு ஏற்று நடத்தியது. செயற்கை நுண்ணறிவை ஒட்டி உள்ளூர்க் கவிஞர்கள் தாங்கள் புனைந்த கவிதைகளை வாசித்தனர்.
தமிழ்ப் பிரிவில் ‘பெருவெளி தேடாதவர்கள்’ என்ற தலைப்பிலான கவிதையை இராஜேந்திரன் நீதிப்பாண்டி வாசித்தார்.
“பொருளியல் சார்ந்து ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் நிற்கிற ஒருவரின் அமைதியான கண்ணோட்டம் இது. எல்லாரும் எதையோ தேடுகிறார்கள், ஆனால், யாரும் ‘பெருவெளி’யை, அந்த உணர்ச்சி நிரம்பிய அமைதியைத் தேடத் தயாராக இல்லை என்பதே இக்கவிதையின் உட்பொருள்,” என்று வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நிர்வாகியாகப் பணிபுரியும் திரு நீதிப்பாண்டி கூறினார்.
சிங்கப்பூர்க் கவிதை விழாவுக்காக சிங்கப்பூரில் லா சால் கலைப்பள்ளி, த ஆர்ட்ஸ் ஹவுஸ், கல்வியமைச்சு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டுசேர்ந்தன.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் கோ ஹான் யென் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
“கவிதைவழியாக நாம் நம்மைத் தேட முடிகிறது; மனத்திற்கு மிக நெருக்கமானது. அவசரமான வாழ்க்கைமுறைக்கு இடையே நம்மை நிதானமடையச் செய்கிறது. இதனால், தேசிய கலைகள் மன்றமும் சிங் லிட் ஸ்டேஷன் அமைப்பும் எஸ்எம்ஆர்டியுடன் இணைந்து கவிதைகளை வழங்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன்,” என்று திருவாட்டி கோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவு கொண்டாடப்படும் வேளையில், வாசிக்கப்பட்ட கவிதைகளின் பன்முகத்தன்மைமிக்க நடைகளின்வழி சிங்கப்பூரின் சாராம்சம் வெளிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
மறுநாள் தேசிய நூலகத்தின் தரைத்தளத்தில் நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்ச்சியை பிரபல உள்ளூர் எழுத்தாளரும் தமிழ் முரசு நாளிதழின் இணையாசிரியருமான கி.கனகலதா வழிநடத்தினார்.
பழம்பெரும் உள்ளூர்க் கவிஞர்களின் படைப்புகளை ஒட்டி கவிதை எழுதிய சிலர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.
பெரியவர்களுடன் இளையர்கள் இணைந்து கவிதைகளைப் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாகப் பங்கேற்றுள்ள ச புவனேஸ்வரி,33, உள்ளூர்த் தமிழ்ப் படைப்பாளிகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்த பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்திருந்ததாகப் பாராட்டினார்.
“பழம்பெரும் கவிஞர்களின் படைப்பாற்றலும் உலகத்தைக் காணும் அவர்களது முறையும் வியக்கத்தக்கவை. அவை, சிறு வயதில் கவிதைகள் எழுதிய என்னை மீண்டும் எழுதத் தூண்டுகின்றன,” என்றார் அவர்.
கற்றல் பயணம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. அன்றாடச் சிந்தனைகள், உரையாடல்கள், உணர்வுகள் ஆகியவற்றை நயமிகு கவிதைகளாக்க பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வருகை அளித்திருந்த உள்ளூர் எழுத்தாளர்களில் ஒருவரான யூசுப் ராவுத்தர் ரஜித், இந்தக் கவிதைத் திருவிழா கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் பாராட்டத்தக்கது என்றார்.
“நான்கு மொழிகளில் இயங்கும் கவிஞர்கள் ஒன்றுகூடி கவிதைகளைப் பகிர்ந்து வாசிக்கும்போது, அந்தக் கவிதைகள் பிற மொழிகளுக்கே உரிய வகையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். புகழ்பெற்ற பிலிப்பீன்ஸ் ‘மெகொசோனோ’ இசைக்குழுவினரின் இன்னிசை கவிதைத் திருவிழாவின் நிறைவு அங்கமாக அமைந்தது மிகவும் அழகாக இருந்தது என்று உள்ளூர் எழுத்தாளர் நெப்போலியன் பாராட்டினார்.

