இசைத்துறையில் பயணித்து வரும் கார்த்திக் குணசேகரன், ஒருநாள் தாம் இடம்பெற்ற காணொளியில் தலையின் பின்புறம் வழுக்கையாக இருந்ததை உணர்ந்தார்.
கார்த்திக்குக்கு இப்போது 30 வயது. அவருக்கு 23 வயதிலேயே முடி உதிரும் பிரச்சினை தொடங்கியது.
வழுக்கையைக் கண்டு மனமுடைந்துபோன கார்த்திக், அதை உடனடியாக சரிசெய்ய பல தெரிவுகளை நாடினார்.
மாத்திரைகள் சாப்பிடுவது, முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஷாம்பு அல்லது பொருள்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை பலவற்றைப் பரிசீலித்த கார்த்திக் துணிச்சலாக முடிவெடுத்து முடி மாற்று சிகிச்சைக்காக துருக்கிக்குச் சென்றார்.
துருக்கிப் பயணம்
சிங்கப்பூரரான கார்த்திக், முன்னர் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். அங்குள்ள முடி திருத்துபவர், துருக்கிக்குச் சென்று தலைமுடி மாற்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு கார்த்திக்கிற்கு பரிந்துரைத்தார்.
ஆண்கள் பலர் துருக்கிக்குச் சென்று முடி மாற்று சிகிச்சை செய்துகொள்வதைக் காட்டும் காணொளிகளையும் கார்த்திக் டிக்டாக் தளத்தில் பார்த்தார்.
2024 பிப்ரவரியில் துருக்கி சென்றார். சிகிச்சையைச் சேர்த்து கார்த்திக் கிட்டத்தட்ட $6,000 செலவு செய்துள்ளார்.
சிகிச்சை முறை
கார்த்திக்கிற்கு தலைமுடி மாற்று சிகிச்சை கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. முடி அதிகமாக இருந்த தலையின் பின்புறத்திலிருந்து அது அகற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கார்த்திக்குக்கு ‘FUE’, ‘DHI’ சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் 20 நிமிடங்கள் தமக்கு வலி ஏற்பட்டதாகச் சொன்ன கார்த்திக், சிகிச்சை முடிந்த பிறகு தலையில் வீக்கம் ஏற்பட்டதாகவும் அதைத் தணிக்க ஐஸ் கட்டி பயன்படுத்தியதாகவும் பகிர்ந்துகொண்டார்.
“சிகிச்சைக்குப் பிறகு 10 நாள்களுக்கு எனக்குச் சிரமமாக இருந்தது. தூக்கமின்மை, நேராக மட்டுமே படுக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது,” என்று சொன்னார் கார்த்திக்.
முதல் ஆறு மாதங்களுக்குத் தலை வெயிலில் படாமல் இருக்க வேண்டும், நீச்சல் அடிக்கவோ முடி திருத்தவோ முடியாது.
இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கார்த்திக் இப்போது தமது சிகை அழகைக் கண்டு மெய்மறந்து போகிறார்.
சிகிச்சைக்குப் பிறகு முடி வலுவாக இருக்க, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள், தாவர அடிப்படையிலான ஷாம்பு, தலையெண்ணெய் ஆகியவற்றை கார்த்திக் பயன்படுத்தி வருகிறார்.
மேலும், சிகிச்சை முடிந்த முதல் ஆறு மாதங்களுக்கு கார்த்திக் ‘பிஆர்பி’ எனும் பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மா சிகிச்சையையும் செய்துகொண்டார்.
இது, அவரது முடியை வலுவடையச் செய்வதோடு முடி வளர்ச்சிக்கும் ஏதுவாக இருக்கும்.
துருக்கியில் வெற்றிகரமாக முடி மாற்று சிகிச்சை செய்துகொண்ட கார்த்திக், ஆண்கள் இதற்கு அஞ்சத் தேவையில்லை என்கிறார்.
மருத்துவ ரீதியாக
ஆண்களுக்குப் பெரும்பாலும் தலையில் வழுக்கை விழுவதற்கான முக்கியக் காரணம் மரபியல் சார்ந்தது என்கிறார் தோல் மருத்துவ ஆலோசகரான டாக்டர் உமா அழகப்பன்.
அறுவை சிகிச்சையைவிட மருத்துவ சிகிச்சை நீண்டகாலத்திற்கு மிகவும் நிலையானது என்று சொன்ன டாக்டர் உமா, முடி மாற்று சிகிச்சை பயனுள்ளதாக உள்ளதா என்று பல மாதங்கள் கழித்துதான் தெரியும் என்றார்.
“இளம் வயதில் முடி மாற்று சிகிச்சை செய்துகொள்வது சரியானதன்று. வயதாகும்போது அவர்களுக்கு மீண்டும் முடி உதிரும் பிரச்சினை ஏற்படும். மருத்துவ சிகிச்சை பயனுள்ளதாக அமையாமல்போன பிறகே ஒருவர் முடி மாற்று சிகிச்சையைப் பரிசீலிக்கலாம்,” என்று கூறினார் டாக்டர் உமா.
துருக்கியில் முடி மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும் போக்கைப் பற்றி பேசிய அவர், அதை மேற்கொள்பவர்கள் அவர்களின் சொந்த இடரில் செய்துகொள்வதாகச் சொன்னார்.
“விலை மலிவு என்பதால் பலர் துருக்கிக்குச் செல்லலாம். ஆனால், அவர்கள் பாதுகாப்பான மருந்தகத்தை நாட வேண்டும். அங்கு மருத்துவர்கள் உரிய பயிற்சி மேற்கொண்டவர்களா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது,” என்று தெரிவித்தார் டாக்டர் உமா.
முடி உதிரும் போக்கு உடனடியாக தென்படாது என்றும் ஆண்களுக்கு 20, 30 வயதுகளில் மெதுவாக ஆரம்பிக்கும் என்றும் அவர் சொன்னார்.
மனவுளைச்சல், சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தால் வழுக்கை துரிதமாக ஏற்படும் என்ற டாக்டர் உமா, இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படத் தொடங்கினால் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு அதன் மூலக் காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றார்.
ரத்தப் பரிசோதனை முடிவு நன்றாக இருந்தும் வழுக்கை ஏற்படுவதற்கான காரணம் தெரியாவிட்டால், ஒருவரின் தலைமுடியும் சோதிக்கப்படும் என்று தெரிவித்தார் டாக்டர் உமா.
சிகிச்சை முறை எடுத்துக்கொண்டால் மினாக்சிடில், தெளிப்பான், அல்லது மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலான நேரங்களில் இது வழுக்கைக்குத் தீர்வு தரும் என்றார் டாக்டர் உமா.
ஆனால், மினாக்சிடில் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால் புரொபீஷியா மாத்திரைகள் எடுக்க வேண்டும்.
“மாத்திரைகள் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பே. ஆனால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது. முடி அதிகமாக உதிர்ந்து புது முடி வளர்வது, தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி அதிகமாகுவது போன்ற பக்க விளைவுகள் உள்ளன,” என்றார் டாக்டர் உமா.
முடி அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் ஷாம்பு பயன்படுத்துவது எந்த வகையிலும் முடி வளர்ச்சிக்கு ஏதுவானதன்று என்று குறிப்பிட்ட டாக்டர் உமா, என்ன குறைபாடு இருக்கிறது என்று தெரியாமல் ஒருவர் ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுக்கக்கூடாது என்றார்.
பொதுமக்களின் கருத்து
ஆண்களுக்கு வழுக்கை விழுவதை ஆண்களும் பெண்களும் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பது குறித்து தமிழ் முரசு சிலரிடம் கேட்டது.
“சிகை, ஒருவரின் தோற்றத்திற்கு முக்கியப் பங்காற்றுகிறது. எனக்குத் தெரிந்த சில இளம் ஆண்கள் முடி உதிரும் பிரச்சினை ஏற்படும்போது திருமணத்திற்கு மணப்பெண் கிடைப்பது கடினம் என்று நினைத்து வருந்துகிறார்கள்,” என்றார் நீலகண்டன், 33.
“வாழ்க்கைத் துணையை தேடும்போது நான் அவரின் சிகை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டேன். இன்று அவருக்குத் தலை நிறைந்த முடி இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் வழுக்கை விழலாம்,” என்று சொன்னார் ஷமிதா முரளி, 27.
“சிகை ஒருவருக்கு கிரீடம்போல. என் கணவருக்கு முடி உதிரும் பிரச்சினை ஏற்படும்போது அதற்குத் தீர்வுகாண அவருக்கு உதவுவேன். அவரது சிகை அலங்காரத்தில் நான் அதிக அக்கறை செலுத்துகிறேன்,” என்று கூறினார் அக்னிமொழி, 34.
“என் நண்பர்கள் சிலருக்கு முடி உதிர்தல் உள்ளது. அவர்கள் அதைத் தீர்க்க பல வழிகளை தேடினாலும் அது எந்த அளவுக்கு உதவுகிறது என்பது தெரியவில்லை. வாழ்க்கைத் துணையைத் தேட சிகை அலங்காரம் முக்கியப் பங்காற்றுவதில்லை,” என்று கூறினார் பாலமுரளி, 35.
முடி திருத்துவோர் பார்வையில்
முடி திருத்துபவர்கள், தினமும் பல வாடிக்கையாளர்களைச் சந்திக்கின்றனர்.
“ஆண்களிடையே முடி உதிரும் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. வழுக்கை உள்ளவர்கள் வழுக்கையை மறைக்கும் விதமாக முடி திருத்தச் சொல்வார்கள். 25 வயதிலேயே இளம் ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சினை உள்ளது,” என்றார் முத்து சலோனில் பணிபுரியும் அன்புச்செல்வன், 47.