நிச்சயமற்ற பொருளியல் சூழல், சந்தை ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் போட்டித்தன்மையுடன் விளங்கச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் (GenAI) தீர்வுகளை நாடுகின்றன.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ‘டிபிஎஸ்’ வங்கியின் ‘பல்ஸ் செக்’ ஆய்வு முடிவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
ஊழியர்களின் திறன் மேம்பாடு, வெளிநாட்டு விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர்காலத்திற்குத் தயாராகி வருகின்றன என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியது.
ஆய்வு நடத்தப்பட்ட நிறுவனங்களில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கியக் கருப்பொருளாக உள்ளது.
ஆய்வில் பங்கேற்றோரில் 73 விழுக்காட்டினர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தீர்வுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஏறக்குறைய 72 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும், அத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் தயார்நிலையை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், 32 விழுக்காட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுக்காக ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை ஏற்கெனவே சோதனை செய்யத் தொடங்கியிருப்பதாகக் கூறியுள்ளன.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான கட்டாயப் பருவநிலை விதிமுறைகள் இந்த ஆண்டு நடைமுறைக்கு வருவதால் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கான தயார்நிலையையும் ஆய்வு கண்டறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
கரிம உமிழ்வுக் குறைப்பை நோக்கமாகக் கொண்ட இந்த விதிமுறைகள், பெரிய நிறுவனங்களுக்குள் அடங்கும் இத்தகைய நிறுவனங்களைக் கணிசமாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் வணிகம் உறுதிப்படும் வகையில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்று கூறினார் ‘டிபிஎஸ்’ வங்கியின் பெருநிறுவன, சிறிய, நடுத்தர நிறுவனக் குழுத் தலைவர் கோ கார் சியோங்.
“நிச்சயமற்ற சூழலில் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் விளங்குவதற்கான மாற்றத்தை அனைத்து நிறுவனங்களும் அரவணைப்பது மிக அவசியம்,” என்றார் திரு கோ.
“நீடித்த நிலைத்தன்மையை ஏறத்தாழ 36 விழுக்காட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டாலும், இன்னும் பல நிறுவனங்கள் இந்தப் பயணத்தின் தொடக்க நிலையில்தான் உள்ளன. தொடர்ச்சியான ஆதரவின் தேவை முக்கியம் என்பதை இது காட்டுகிறது,” என்றும் திரு கோ தெரிவித்தார்.

