தாம் சிங்கப்பூருக்கு முதன்முறை வந்துள்ளதாகவும் இங்குள்ளோரைப் பார்க்கும்போது பலர் உணவிலும் உடற்கட்டமைப்பிலும் கவனம் செலுத்துவதுபோல தெரிவதாகவும் கூறியுள்ளார் டாக்டர் பால்.
‘மெட் காம்’ (மெடிக்கல் + காமெடி) எனும் உடல்நலன் குறித்த தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து படைக்கும் தமது பாணி மேடை நிகழ்ச்சியைச் சிங்கப்பூரில் படைக்கவுள்ளார் இவர்.
சமூக ஊடகங்கள்மூலம் டாக்டர் பால் என்று பரவலாக அறியப்படுபவர், அமெரிக்காவில் வசிக்கும் இரைப்பை, குடல் நிபுணரான மருத்துவர் பழனிவேல் மாணிக்கம்.
உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், வாழ்வியல் முறைகள் எனப் பல்வேறு அவசியமான கருத்துகளை ரசிக்கும்படியான குறுங்காணொளிகள், பிரபலங்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் படைத்து வரும் இவர், தற்போது தமது உடல் எடைக் குறைப்புப் பயணம், பிற உடல்நலத் தகவல்களைக் கோத்து நேரடித் தனிக்குரல் நகைச்சுவை நிகழ்ச்சியாகப் பல்வேறு இடங்களில் படைத்து வருகிறார்.
மாஸ்க் ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. நிகழ்ச்சி படைக்க முதன்முறையாக சிங்கப்பூருக்கு வந்த இவர், தமது பயணத்தின் தொடக்கம், ஆர்வம், எதிர்காலத் திட்டம் எனப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைத் தமிழ் முரசின் சிறப்பு நேர்காணலில் பகிர்ந்தார்.
“இந்தப் பயணம் தற்செயலாகத் தொடங்கியது. கொவிட்-19 பெருந்தொற்றின்போது நான் பணியாற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வுக் காணொளி படைத்தேன். இது மிகவும் இயல்பாக இருப்பதால் பயன்படுத்த முடியாது எனக் கூறி, வேண்டுமென்றால் யூடியூப்பில் பதிவேற்றலாம் என்றனர். அதுதான் எனது காணொளிகளுக்குத் தொடக்கமாக அமைந்தது,” என்றார்.
“மருத்துவர் தொழில் உன்னதமானது. எங்களிடம் வருவோர் மறுமுறை வரக் கூடாது என நினைக்கிறோம். அதன் நீட்சிதான் என் பயணம்,” என்றார்.
பிறர் தமது பேச்சை ரசித்து சிரிப்பதைப் பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி என்று சொன்ன இவர், “சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என் பெயரைக் கேட்டால், அவர்களுக்கு இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும், பொரித்த, உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அதிகம் உட்கொள்ளக் கூடாது, காய்கறிகள் உண்ண வேண்டும் ஆகிய கருத்துகள் நினைவுக்கு வருகின்றன. இதுதான் என் வெற்றி,” என்று பகிர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் ‘டிம்-சம்’ உணவை விரும்பிச் சுவைத்ததாகக் கூறிய இவர், வேகவைத்த அவ்வுணவு உடலுக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் பலரும் ஒல்லியாக இருப்பதால் அவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது,” என்ற இவர், “எப்போதும் உடல் வாகைப் பொறுத்து உடல்நலன் தீர்மானிக்கப்படுவதில்லை. இதனை மருத்துவ உலகில் ‘டிஓஎஃப்ஐ’ என்போம். வெளியே ஒல்லியாகவும் உள்ளே பருமனாகவும் இருப்பது. அவர்களும் உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்,” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் தாம் பொதுவான உணவுமுறை குறித்து மட்டுமே பேசுவதாகவும் தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் என்பதை வலியுறுத்துவதாகவும் சொன்னார்.
சமூக ஊடகங்களில் வரும் சில காணொளிகள் அறைகுறை தகவல்களைப் பகிர்ந்தால் அவற்றைப் பின்பற்றுவதில் பலன் இருக்காது என்றும் எதைப் பின்பற்றுகிறோம் என்பதன் முழுத் தகவலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமது காணொளிகளைப் பார்த்து உணவு, உறக்கம் உள்ளிட்ட வாழ்க்கைமுறையை மாற்றியதாகக் கூறுவதை கேட்கும்போது மனம் நெகிழ்வதாகக் கூறிய இவர், எதிர்மறை விமர்சனங்களுக்கு தாமும் விதிவிலக்கன்று என்றார்.
சமூக ஊடகங்கள்வழி தாம் அதிகம் பணம் ஈட்டுவதாகப் பலர் பேசுவதைக் குறிப்பிட்ட இவர், காணொளி உட்பட எல்லாவற்றுக்குமான தயாரிப்புக்கும் அதிகம் நேரமெடுக்கும் என்றும் அந்த நேரத்தையும் கூடுதல் உழைப்பையும் தமது தொழிலில் செலுத்தினால் வரும் வருமானம் இதைவிட அதிகமென விளக்கமளித்தார்.
கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் ‘குடல்நலன்தான் உடல்நலனுக்கு அடிப்படையாக விளங்குகிறது’ என்பது குறித்த ஆய்வில் பங்கேற்றுள்ளதாகவும் இந்த அடிப்படை, அதற்கான உணவுமுறை குறித்து சிறுவயதுப் பிள்ளைகளிடம் கொண்டுசேர்ப்பதே தமது இலக்காகவும் இவர் சொன்னார்.
தம் மனைவி, பிள்ளைகள் எனப் பிறருடன் கலந்துரையாடும் பாணியில் அமைந்த காணொளிகளை மக்கள் ரசிப்பதாகச் சொன்ன இவர், பல்வேறு நிகழ்ச்சிகள், வெவ்வேறு பின்னணி கொண்ட பிரபலங்களை நேர்கண்டு, அதன்மூலம் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவது, தமது காணொளிகளில் புதுமை, குழந்தைகளைச் சென்றடைய ‘கட்- மேன்’ எனும் புதிய வரைகலை கதாபத்திரத்தை அறிமுகம் செய்வது எனப் பல திட்டங்களைச் செயலாக்க உழைத்து வருவதாகவும் இவர் தெரிவித்தார்.
தமது நேரடி நிகழ்ச்சி, வெறும் சொற்பொழிவுபோல இல்லாமல், பொழுதுபோக்காகவும் அதே நேரத்தில் அவர்கள் வெளியில் செல்லும்போது உடல்நலன்மீது முழு அக்கறையுடன் செல்வார்கள் என்றும் கூறினார் டாக்டர் பால்.