பிறந்த குழந்தையிலிருந்து பெரியவராகும் வரை பெற்றோர் அரவணைப்பின்றி பல ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்து வந்தவர் ஜென், 45.
மலேசியாவின் பினாங்கில் பிறந்த ஜென், குழந்தையாக இருந்தபோது தன்னை யாரோ ஒருவர் குப்பைத்தொட்டியில் கண்டறிந்ததை நினைவுகூர்ந்தார்.
பின்னர் ஜோகூரில் இருக்கும் ஒரு காப்பகத்தில் வளர்ந்து வந்த ஜென் அங்குப் பல இன்னல்களுக்கு ஆளானார்.
பின்னர் தமது குடும்ப உறுப்பினர்கள் என்று கூறி யாரோ சிலர் தன்னைக் காப்பகத்திலிருந்து அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சொன்ன ஜென், அங்கேயும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்தார்.
காப்பகத்தில் வளர்ந்தபோது ஜென் ஆங்கிலமும் மாண்டரின் மொழியும் கற்றுக்கொண்டார். 10 வயதில்தான் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதாக கூறிய ஜென், 17 வயதிலிருந்தே பல வேலைகளுக்குச் செல்லவும் தொடங்கினார்.
“வேலைக்குச் சென்றபோது எனக்கு கணக்கு பார்க்கத் தெரியாது. எழுத்துக்கூட்டி படிக்கவும் தெரியாது,” என்றார் ஜென்.
இவ்வாறு பல சில்லறை வேலைகளை செய்து வந்த ஜென்னுக்கு அறிமுகமான ஒருவர் மூலம் திருமணம் செய்துகொள்ள வரன் வந்தது.
தம் கணவர் சிங்கப்பூரர் என்று பகிர்ந்துகொண்ட ஜென், திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூருக்கு வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் முதலில் அவருக்கு நீண்டகால வருகை அனுமதி அட்டை இல்லாததால் தகுந்த வேலை கிடைக்க சிரமமாக இருந்தது.
வீட்டின் அருகில் இருந்த கடை உரிமையாளர் மூலம் அவருக்கு துப்புரவு வேலை கிடைத்தது. பின்னர் நீண்டகால வருகை அனுமதி அட்டைக்கு விண்ணப்பித்து அது கிடைத்தவுடன் ஜென்னுக்கு மனவலிமை கூடியது.
ஃபெய் யுவே குடும்பச் சேவை நிலையம் மூலம் ஆதரவு பெற்று வரும் ஜென், அந்நிலையம் அவரை ‘டாட்டர்ஸ் ஃஆப் டுமோரோ’ எனும் லாப நோக்கற்ற அமைப்புக்குப் பரிந்துரைத்ததாக சொன்னார்.
துப்புரவு ஊழியராக இருந்த ஜென் இன்று ‘மெத்தடிஸ்ட் வெல்ஃபேர் சர்வீசஸ்’ அமைப்பில் சுகாதார உதவியாளராகப் பணிபுரிவதற்கு முதன்மை காரணமாக இருப்பது டாட்டர்ஸ் ஃஆப் டுமாரோ அமைப்பாகும்.
டாட்டர்ஸ் ஃஆப் டுமாரோ அமைப்பு குறைந்த வருமானப் பின்னணிகளிலிருந்து வரும் பெண்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அமைப்பின் நிர்வாக இயக்குநர் கேலீ குவா, 38, பெண்களுக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதிலும், வேலைக்கு அப்பெண்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அமைப்பு நோக்கம் வைத்துள்ளதாகக் கூறினார்.
பராமரிப்பாளர் பயிற்சி மேற்கொண்டுள்ள ஜென், டாட்டர்ஸ் ஃஆப் டுமாரோ அமைப்பு மூலம் பயனடைந்தார்.
“வெவ்வேறு நிறுவனங்களுடன் நாங்கள் ஒத்துழைத்து ஜென் போன்ற பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்,” என்றார் கேலீ.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த அமைப்பு, பெண்கள் பலர் அமைப்பை நாடிவரும்போது தன்னம்பிக்கை குன்றி வருவதை கவனித்துள்ளது.
தங்கள் அமைப்பிற்கு என்ன வேண்டும் என்பதில் ஜென் மிகத் தெளிவாக இருந்ததாகக் குறிப்பிட்ட கேலீ, ஜென்னின் கதை பல பெண்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று நம்புகிறார்.
அமைப்பு வழங்கிய வேலைப்பயிற்சி, பணியமர்த்தல் திட்டம் மூலம் வேலையில் திறமையாகச் செயல்பட ஜென்னுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஆறாண்டுகளாக மெத்தடிஸ்ட் வெல்ஃபேர் சர்வீசஸ் அமைப்பில் பணியாற்றி வரும் ஜென், வாழ்க்கையில் தான் கண்ட இன்னல்களை தனது எட்டு வயது மகளிடம் பகிர்ந்து வருகிறார்.
தன் மகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென விரும்பும் ஜென், அவரை பியானோ, நீச்சல், பூப்பந்து, மாண்டரின் வகுப்புகளுக்கு அனுப்புகிறார்.
அண்மையில் சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிபெற்ற ஜென், அதன்மூலம் மகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய முயல்கிறார்.

