உடலின் நச்சுகளை வெளியேற்றும் பானங்கள்

உடலின் நச்சுகளை வெளியேற்றும் பானங்கள்

3 mins read
50d24f40-4b5c-465b-8576-a3a7a52f62a8
வீட்டிலேயே நச்சு வெளியேற்றப் (டீடாக்ஸ்) பயணத்தைத் தொடங்க சில முக்கியமான பானங்களைத் தயாரித்து அருந்தலாம். - படம்: பிக்‌ஸாபே

உடல்நலத்தைப் பாதுகாப்பதும் உடலிலுள்ள நச்சுகளை அவ்வப்போது வெளியேற்றுவதும் அவசியம்.

கல்லீரல், சிறுநீரகம், குடல் போன்ற உறுப்புகள் இயல்பாகவே நச்சுகளை வெளியேற்றும் பணியைச் செய்கின்றன. ஆனால், நவீன வாழ்க்கைமுறை, உடல்நலத்தைப் பாதிக்கும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம் போன்றவை உடலின் இயல்பான செயல்பாடுகளைப் பாதிக்கின்றன.

இதனால் உடல் சோர்வு, தோல் பிரச்சினைகள், செரிமானச் சிக்கல்கள், மனச்சோர்வு, நோய் எதிர்ப்பாற்றல் குறைவு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கிறது ‘டீடாக்ஸ்’ எனப்படும் உடல் சுத்திகரிப்பு முறை. உடல்நலத்தைப் பேணவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்திற்கும் ‘டீடாக்ஸ்’ செயல்முறை மிகப் பயனுள்ளதாக ‌விளங்குகிறது.

அதிக செலவில்லாமல் வீட்டிலேயே இந்தச் செயல்முறையைத் தொடங்க சில பானங்களைத் தயாரித்து அருந்தலாம்.

தண்ணீர்

நிறைய தண்ணீர் அருந்துவது, நீர்ச்சத்துடன் இருத்தல், கழிவுப்பொருள்களை அகற்றுதல் உட்பட கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்துகிறது. இது, யூரியா போன்ற கழிவுப்பொருள்களை சிறுநீராகவும் வியர்வையாகவும் வெளியேற்ற உதவுகிறது.

உணவு உண்பதற்குமுன் தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பைச் சீராக்க உதவும். இவ்வாறு, தண்ணீர் நம் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

பாகற்காய்ச் சாறு

பாகற்காய் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இதில் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருப்பதால், பித்தம், கபம் போன்றவை குறைகின்றன. மேலும், சருமப் பிரச்சனைகளை நீக்கவும் இது உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாகற்காய்ச் சாறு, தேன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் சேர்த்து அன்றாடம் அருந்துவது நன்மை பயக்‌கும்.

வெந்தய நீர்

வெந்தயம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை‌ அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது கொழுப்பைக் கரைக்கவும் உதவுவதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைவிட ஊறவைத்துச் சாப்பிடுவது கூடுதல் நன்மை தரும். வெந்தயத்தை இரவில் நீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரைக்‌ குடிப்பது சிறந்தது.

நெல்லிக்காய்ச் சாறு

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ‘சி’யும் ‘ஆன்டிஆக்ஸிடன்டுகளும் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கின்றன. இது உடலின் செயல்முறைகளை மேம்படுத்தி, நச்சுப் பொருள்களை நீக்குகிறது.

புளிப்புச் சுவை நிறைந்த நெல்லிக்காயின் சாற்றை வெறும் வயிற்றில் அருந்துவது அதிக சிறுநீர் உற்பத்திக்கு உதவும். சிறுநீர் வெளியேற்றம் உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும், சிறுநீரகக் கற்களை அகற்றவும் உதவுகிறது.

கோதுமைப் புல் சாறு

கோதுமைப் புல்லில் குளோரோஃபில் என்னும் பச்சையமும் அமினோ அமிலங்களும் தாதுக்களும் அதிகமாக நிரம்பியுள்ளன. இது செரிமானத்திற்கும் குடலிலுள்ள நச்சுகளை அகற்றுவதற்கும் பேரளவில் உதவுகிறது. மேலும், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளைப் போக்கவும் உதவுகிறது.

ஒருவர் கோதுமைப் புல் சாற்றைப் புதிதாக அருந்தத் தொடங்கும்போது, முதலில் குறைந்த அளவில் அருந்தி, உடலில் ஏற்படும் மாற்றங்களைக்‌ கவனிக்கவேண்டும். படிப்படியாக அதன் அளவை அதிகரிக்கும்போதுதான் உடல் அதை ஏற்றுக்கொள்ளும். இதை அருந்திய பிறகு தண்ணீர் அருந்துவது கோதுமைப் புல்லால் ஏற்படும் பக்க விளைவுகளைக்‌ குறைக்க உதவும்.

குறிப்புச் சொற்கள்