பெற்றோர் வழியைப் பிள்ளைகள் பின்பற்றும் காலம் மாறி, இன்று பெற்றோரின் பாதையைப் பிள்ளைகள் மாற்றியமைக்கின்றனர்.
திருவாட்டி ரேணுகா தேவியும் அவருடைய மகன் ஸ்ரீகாந்த் விஜயகுமாரும் அதற்கு ஒரு நல்ல சான்று.
“என் தந்தையைப் போலவே எனக்கும் நடனத்தில் அதிக ஆர்வம் இருந்தது. சிறு வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். ஆனால், குடும்பச் சூழ்நிலையால் தொடர்ந்து அதைப் பயில முடியாமல் போனது,” என்றார் திருவாட்டி ரேணுகா, 65.
ஆனால், தமது நடனப் பயணத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி தம் மகனால் முப்புள்ளியாக மாறியது.
17 வயதில் லத்தீன் பால்ரூம் நடனத்திற்கு அறிமுகமான ஶ்ரீகாந்த், 31, இன்று சிங்கப்பூரின் சிறந்த லத்தீன் பால்ரூம் நடனக் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும், இக்கலையில் அரிதாகக் காணப்படும் தமிழர்களுள் ஒருவராகவும் லத்தீன் நடன உலகத்தில் வலம் வருகிறார்.
தொலைக்காட்சியில் சல்சா நடனத்தைப் பார்த்த 16 வயது ஸ்ரீகாந்த் அந்நடனத்தை முறைப்படி கற்க சல்சா வகுப்புக்கு சென்றார்.
ஆனால் அதே வகுப்பில் விறுவிறுப்பு நிறைந்த லத்தீன் பால்ரூம் நடனத்திற்கு ஈர்க்கப்பட்டு சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் லத்தீன் பால்ரூம் நடன இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிறுவயதில் நடனத்தின்மீது தமக்கு இருந்த நாட்டமும் சுறுசுறுப்பும் தம் மகனிடம் பார்த்ததாகக் கூறினார் திருவாட்டி ரேணுகா.
இளம் வயதில் முன்கோபத்துடனும் சுட்டித்தனமாகவும் இருந்த ஶ்ரீகாந்த், பால்ரூம் நடனம் மூலம் மிகவும் அமைதியாகவும் புத்திசாலியாகவும் மாறியதை உணர்ந்தார் திருவாட்டி ரேணுகா.
ஆனால், தொடக்கத்தில் இவ்வகை நடனத்தை தம் மகன் கற்றுக்கொள்வது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் எனத் தயக்கமாக இருந்ததாக திருவாட்டி ரேணுகா தெரிவித்தார்.
ஆனால், 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ‘த டான்ஸ் ஃப்லோர்’ போன்ற பல போட்டிகளில் பங்கெடுத்ததைப் பார்த்து அக்கலையின் மதிப்பை அவர் உணரத் தொடங்கினார்.
காலப்போக்கில் தம் மகனின் தெரிவுகளைப் பற்றி சந்தேகித்தவர்களின் முன்னிலையில் அவருக்கு ஆதரவாகவும் பேசத் தொடங்கினார்.
50வது வயதில் சால்சா, ராக் அண்ட் ரோல் நடனங்களைக் கற்றுக்கொள்ள முடிவு செய்த திருவாட்டி ரேணுகா போட்டிகளிலும் பங்கெடுத்தார்.
அதிலும் குறிப்பாக, 2012ஆம் ஆண்டு ‘யுனைடெட் கிங்டம் அலையன்ஸ்’ போட்டியில் ‘டான்ஸ் டிஸ்கோ ராக்’ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முழங்கால் பிரச்சினைகளால் அவதியுற்ற அவர் இந்த நடனத்தை மேற்கொண்டு பயில முடியாமல் போனது.
“இந்த நடனத்தை இளம் வயதிலிருந்தே கற்றிருக்கலாம்,” என அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆனால், ஸ்ரீகாந்த் இந்த நடனத்தை இளம் வயதிலேயே கற்கத் தொடங்கியது சாதகமாக அமைந்தது.
தமது 14 ஆண்டு நடனப் பயணத்தை நினைவுகூர்ந்த அவர், கடின உழைப்பும் ஒழுக்கமுமே அடித்தளம் என்பதைப் பகிர்ந்தார்.
“தொடர்ந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன்கள் சேரும். காலம் ஆகலாம், ஆனால் அந்தக் குறிக்கோளை நிச்சயமாக அடைவீர்கள்,” என்றார் ஶ்ரீகாந்த்.
இந்தப் பரிமாணத்திற்கு நன்கு பரிச்சயமானவர், ஶ்ரீகாந்தின் நெருங்கிய நண்பரும் நடனப் பயிற்றுவிப்பாளருமான கவின் ரத்னா, 30.
“அவர் ஒரு கடும் உழைப்பாளி. முழு நேர வேலை செய்துகொண்டே நடனப் பயிற்சிக்கான நேரத்தை தனியாக ஒதுக்குவார். போதுமான தூக்கமும் அவருக்குக் கிடையாது,” என்றார் கவின். “அவர் அதை எப்படி செய்கிறார் என்பது எனக்கே தெரியவில்லை.”
இன்னும் சிறந்த பயிற்றுவிப்பாளராக மாற ஶ்ரீகாந்தின் அர்ப்பணிப்பு தமக்கு உதவியதாகவும் கூறினார் கவின்.
பால்ரூம் நடனத்தில் புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட ஸ்ரீகாந்த், கட்டடப் பொறியியல் துறையிலும் அதே ஆர்வத்தைக் காட்டினார்.
சொந்த நிறுவனத்தைத் தொடங்கவும் அது அவருக்கு வழிகாட்டியது.
லத்தீன் பால்ரூம் நடனத்தில் உள்ள சாம்பா, பசோடோபில், சா சா, ஜாய்வ், ரும்பா ஆகிய ஐந்து வெவ்வேறு பாணிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வகைசெய்கின்றன.
அதுவே தம்மை இக்கலைக்கு ஈர்த்ததாகக் குறிப்பிட்டார் ஶ்ரீகாந்த்.
இணை நடனமான லத்தீன் பால்ரூம் நடனம் ஒத்துழைப்பில் தழைக்கிறது.
ஆனால், வானிலையைப் போலவே மனித உணர்வுகளும் மாறக்கூடியவை.
ஒவ்வொரு நாளும் அதே உற்சாகத்துடன் இருப்பது சாத்தியமற்றது; ஶ்ரீகாந்த் போன்ற நடனக் கலைஞர்கள் அதற்கு விதிவிலக்கல்ல.
“ஏற்றங்களும் இறக்கங்களும் மனம் தளர்வதும் பொதுவானவை. அதிலிருந்து நாம் எப்படி மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம்,” என்கிறார் ஸ்ரீகாந்த்.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பிளாக்பூல் நடன விழாவில் பங்கேற்பது தமது இலக்காக கொண்டுள்ள ஸ்ரீகாந்த், சிறந்த தரவரிசையுடன் பயிற்றுவிப்பாளராக விரும்புகிறார்.
எதிர்காலத்தில் தாம் கற்ற அனைத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசேர்க்க விரும்பும் ஸ்ரீகாந்த், தொடர்ந்து உலகெங்கும் உள்ள சிறந்த பயிற்றுவிப்பாளர்களுடனும் கலைஞர்களுடனும் பயின்று வருகிறார்.