இந்தியப் பாரம்பரிய இசையுடன் சங்கமிக்கவிருக்கும் ‘நன்யின்’ இசை

2 mins read
8142e648-a42c-453d-8bc8-2c8fc8d687ce
‘சியோங் லேங்’ இசை சங்கம் படைக்கவிருக்கும் ‘Tempest & Tranquility’ இசைநிகழ்ச்சி. - படம்: ‘சியோங் லேங்’ இசை சங்கம்
multi-img1 of 4

‘நன்யின்’ எனும் சீனத் தென்னாட்டுப் பாரம்பரிய இசை சீனாவின் ஆகப் பழமையான இசை கலை வடிவங்களில் ஒன்றாகும்.

சிங்கப்பூரில் முன்னணி வகுக்கும் ‘நன்யின்’ இசைக்குழுக்களில் ஒன்றான ‘சியோங் லேங்’ இசை சங்கம், சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது.  

சிங்கப்பூரின் இனநல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக ‘Tempest & Tranquility’ என்ற இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    

இந்த இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) ‘பிளேக் பாக்ஸ்’ நாடக நிலையத்தில் (Drama Centre Black Box) பிற்பகல் 2.30 முதல் இரவு 7.30 மணிவரை நடைபெறவிருக்கிறது. 

நிகழ்ச்சியில் ‘நன்யின்’ இசை, பாரம்பரிய இந்தியக் கர்நாடக இசை, பரதநாட்டியம், வீணை இசை, தபலா இசை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘சியோங் லேங்’ இசை சங்கத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார் தப்லா இசைக் கலைஞரும் ‘ஸ்வரிதம்’ இசைக் குழுவின் நிறுவனருமான நவாஸ் மிராஜ்கர்.

இம்முறை, வீணா கலைஞர் பிரீதாஷினி நாகராஜா, பாடகி அதிதி கோபிநாதன், பரதநாட்டிய நடனக் கலைஞர் ஸ்வர்ண வர்ஷா குருமூர்த்தி ஆகியோர் அவருடன் இணையவுள்ளனர். 

“இம்முயற்சி இந்திய இசைக்கும் ‘நன்யின்’ இசைக்கும் இடையே ஒரு பாலத்தை அமைத்துத் தருகிறது,” என்றார் திரு நவாஸ். 

பூமாதேவிக்கான சமர்ப்பணமாகத் திரு நவாஸ் இசையமைத்த ‘Rhythm Earth’, இசைநிகழ்ச்சியில் அங்கம் வகிக்கவிருக்கிறது.

‘நன்யின்’ இசையுடன் ஒன்றிணைக்கப்பட்ட அப்பாடல் ஒரு புதுப்பொலிவு பெற்றுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார் திரு நவாஸ்.

“ஒரு பாடலின் அசல்தன்மையை மாற்றாமல் சீன, இந்தியப் பாரம்பரிய இசையை இணைப்பது சவாலாக இருந்தது. சீனப் பாரிம்பரிய இசையை மாற்றியமைப்பது பெரும்பாலும் சற்று சிரமம். ஆனால், இந்தியப் பாரம்பரிய இசையையோ தாளம், ராகம் ஆகியவற்றைக் கொண்டு மாற்றியமைக்கலாம்,” என்றார் இசை இயக்குநர் இங் காங் கீ, 50.

குழப்பம், நிச்சயமற்றதன்மை நிறைந்த இவ்வுலகில், ‘நன்யின்’, இந்தியப் பாரம்பரிய இசை சங்கமிக்கும் இந்த இசைத்தொகுப்பு, மனத்தளவில் ஒருவித அமைதியை ஏற்படுத்தும் என்பது திரு இங்கின் கருத்து.

இவ்விசை நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு https://www.sistic.com.sg/events/tempest0825 என்ற இணையத்தளத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்