கருணையும் அன்பும் அதிகம் தேவைப்படும் இவ்வுலகில், இசையைக் களமாகப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த விழைகிறார் மியூசிக்+வைப்ஸ் அமைப்பின் நிறுவனர் அன்ஷ் பிரித்தம் ஒஸ்வல், 20.
இந்த அமைப்பு இசையால் வாழ்வை மாற்றுவோம் எனும் இலக்குடன் இயங்குகிறது.
அர்ப்பணிப்புடன் அயராது இயங்கும் இளம் தொண்டூழியர்கள் பலர் அன்ஷுடன் கரம்கோத்துச் செயல்பட்டு வருகின்றனர்.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் குறிக்கோளாலும் அதன் செயல்பாட்டாலும் ஈர்க்கப்பட்ட அன்ஷுக்கு, அதுபோன்ற நற்செயல்களில் ஈடுபட்டு சமூகத்தில் ஆக்ககரமான மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
‘‘அதன் அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சமூகத்தை மேலும் வலுவாக்கும் முனைப்புடன், மூத்தோர், அறிவுசார் குறைபாடு உள்ளோர், வசதிகுறைந்த குடும்பங்களைச் சார்ந்த சிறார் என அனைவரின் உள்ளத்திலும் ஆனந்தத்தை விதைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
“அனைவரின் கவலையைப் போக்கும் நல் மருந்தாக இசை விளங்கும் எனும் எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் (Music+Vibes) எனும் அமைப்பு,” என விவரித்தார் அன்ஷ்.
இசையினை முக்கிய வாயிலாகக் கொண்டு ஏறத்தாழ நாற்பதுக்கும் மேலான பங்காளிகளுடன் இணைந்து மூத்தோர் உள்பட பல தரப்பினரின் துயர் நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது இவரது அமைப்பு.
அவ்வகையில், ‘‘சின்ன சின்ன ஆசை’’, ‘‘காதல் கடிதம் தீட்டவே’’ என மனதை வருடும் பல பாடல்களை மற்றவர்களின் விருப்பத்திற்காக இந்தக் குழுவினர் இசைக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“பல இனங்கள் ஒன்றாக வாழும் சிங்கப்பூர் சமூகத்தைக் கட்டியெழுப்பியதில் மூத்தோருக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர்களது மனநலனை சிறப்பாக வைத்திருக்க இசையால் நாங்கள் அவர்களைச் சென்றடைகிறோம்.
‘‘இசைக்கருவிகளுடன் கூடிய சங்கீத மொழியால் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் உட்பட பல்வேறு மொழிகளில் அவர்களை மகிழ்விக்கிறோம்.
“அவர்களுக்காகப் பாடல்களை உருவாக்கத் தன்னார்வமிக்க இளையர்கள் முன்வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார் அன்ஷ்.
மூத்தோரைப் பரவலாகப் பாதிக்கும் மறதி நோயான ‘டிமென்ஷியா‘ போன்ற நினைவாற்றல் தொடர்பான நோய்களின் சிகிச்சையிலும் இசையால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எடுத்துரைத்த ஆய்வுகள் குறித்தும் சுட்டினார் அன்ஷ்.
இத்தகைய அறிவியல் ஆதாரங்களைப் பார்க்கையில் இசையைப் பிணி நீக்கும் சிகிச்சையாக அளிக்கலாம் என்று தம் அமைப்பு ஆழமாக நம்புவதாகவும் அவர் சொன்னார்.
‘‘முதியவர்களுக்குப் பிடித்தமான பாடல்களை இசைக்கையில், அது அவர்களின் நினைவுகளைத் தூண்டவும், பிறருடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் செய்யும். எனவே அர்த்தமிகு பாடல்களை எங்கள் குழுவினர் இசைப்பர்.
“அதனைக் கேட்டபிறகு அவர்கள் அந்த இசையுடன் கலந்து இளையர்களான எங்களுடன் இணைவதை பார்ப்பது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்,’’ என்றும் பகிர்ந்து கொண்டார் அன்ஷ்.
இசையில், ஆர்வம் கொண்ட, ஆனால் அதனைக் கற்க இயலாமல் இருக்கும் வசதி குறைந்த சிறார்களுக்கு மியூசிக் பிளஸ் வைப்ஸ் இசைப் பாடங்களையும் கற்றுத்தருகிறது; அவர்களுக்கான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறது.
‘‘சிறுபிள்ளைகளுக்கு இசையை நாங்கள் கற்றுத்தரும்போது அது அவர்கள் வாழ்வில் உற்சாகத்தையும் தருகின்றது.
குறிப்பாகக் கணிசமானவர்கள் தாங்களும் எதிர்காலத்தில் பெரியவர்களான பிறகு இசைவழி சமுதாயத்தில் கனிவன்பைப் பகிர்வோம், என்று சொல்லும்போது, எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் வலிமை இசைக்கு உள்ளது என்பதை அறியமுடிகிறது என்று அன்ஷ் கூறினார்.
சிறிய அமைப்பாகத் தொடங்கும்போது தொண்டூழியர் பற்றாக்குறை, நேரம், நிதி என பல சவால்கள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை என்பதைச் சுட்டினார் அன்ஷ்.
‘‘சவால்கள் இருக்கின்றன, இருந்தபோதும் எதிர்காலத் திட்டங்களை வடிவமைக்கத் தயங்கியது இல்லை. பல நேரம் ஒத்த சிந்தனையுடன் கூடிய பங்காளித்துவ அமைப்புகள் மூலம் இசையால் அன்பை விதைக்கும் நோக்கம் நிறைவேறி வருகிறது.
‘‘குறிப்பாக வருங்காலங்களில் இசைப் பயிலரங்குகளை நடத்துதல்; சமூக மையங்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் இந்தச் சேவையைக் கொண்டுசேர்த்தல்; அதற்கான நன்கொடை இயக்கம் எனப் பல கனவுகள் உள்ளன. நிச்சயமாக அந்தக் கனவு வசப்படும் தொலைவில்தான் உள்ளது,’’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார் அன்ஷ்.
சகமனிதர் வாழ்வில் இனிமையான மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் பன்முகத்தன்மை, சமூகத்திற்காக நற்பணிகள் செய்திட வேண்டும் என்பதை அடிநாதமாகக்கொண்ட இளையர்களின் விடாமுயற்சியாலும் தங்கள் அமைப்பின் பணி மேலும் சிறப்பாகத் தொடரும் என்றார் அன்ஷ்.
மியூசிக் பிளஸ் வைப்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வமுள்ள இளையர்கள் அவர்களின் சமூக ஊடகப் பக்கம் வாயிலாக அக்குழுவினரைத் தொடர்புகொள்ளலாம்.