தீபாவளிப் பண்டிகை உணர்வால் சாங்கி விமான நிலையமும் களைகட்டிவருகிறது.
கண்கவர் தோட்டக்கலைக் காட்சிகளும் தோட்டங்களும் அதன் நான்கு முனையங்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளன.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளும் பார்வையாளர்களும் தீபாவளிக் குதூகலத்தில் திளைக்கும் வகையில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய விலங்குச் சிற்பங்களையும் பாரம்பரிய வடிவங்களையும் கொண்ட அலங்காரங்களை விமான நிலையத்தின் பொது, பயண இடைமாற்றப் பகுதிகளில் நவம்பர் முதல் வாரம்வரை கண்டு மகிழலாம்.
நான்கு முனையங்கள் முழுவதும் மொத்தம் ஏழு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டிற்கான தீபாவளி அலங்காரங்கள், பாரம்பரிய இந்தியப் படங்களில் பொதுவாகக் காணப்படும் விலங்குகளின் உருவங்களையும், கண்கவர் வண்ண வேலைப்பாடுகளையும் இணைத்து, பிரமிக்க வைக்கும் வடிவங்களின் கலவையாக இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் முனையத்தில் சுற்றியுள்ள தாவரங்களுக்கு நடுவே கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஒரு யானையைத் தொலைவில் இருந்தே பார்க்க முடியும்.
ஒளிவீசும் தங்கக் கண்ணாடி ‘மொசைக்’ ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டு, கையால் வரையப்பட்ட நீல வண்ணக்கோலத்தால் சூழப்பட்டிருக்கும் இந்த யானை பயணிகளுக்கு அவர்களின் பயணங்கள் பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நான்கு முனையங்கள் முழுவதும் இந்துப் புராணங்களில் தூய்மை, செழிப்பு, ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும் தெய்வீக வாகனமாகக் கருதப்படும் மாய அன்னப்பறவையின் வடிவங்களைப் பார்வையாளர்கள் கண்டு இன்புறலாம்.
அன்னப்பறவையின் உடலையும் மயிலின் அழகான இறகுகளையும் பொதுவாகக் கொண்டிருக்கும் இந்தக் கம்பீரச் சின்னம் நம்பிக்கையின் ஒளியையும் பறக்கும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது.