தமிழர் நாட்காட்டியின் நான்காவது மாதம் ஆடி. அந்நாள்காட்டியின்படி, சூரியன் கடக ராசியுள் புகுந்து, அதனைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள்களை இந்த மாதம் குறிக்கிறது.
ஆடி மாதம், இவ்வாண்டு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை நீடிக்கிறது.
சிங்கப்பூரிலுள்ள பல்வேறு கோயில்களில் ஆடிப்பெருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி அமாவாசை, பௌர்ணமி
உயிர் நீத்த குடும்பத்தாருக்கும் மூதாதையருக்கும் தர்ப்பணம் செலுத்தும் சிறப்புமிக்க நாள்களில் ஆடி அமாவாசை ஒன்றாகும். ஆகஸ்ட் நான்காம் தேதியன்று அந்நிகழ்வு இடம்பெறுகிறது.
அமாவாசை நாளில் பக்தர்கள் ஸ்ரீ சிவன் ஆலயம், புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் முதலிய ஆலயங்களில் தர்ப்பணம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
பெளர்ணமியன்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
ஆடிப்பெருக்கு
தொடர்புடைய செய்திகள்
18ஆம் நாளன்று அனுசரிக்கப்படும் ஆடிப்பெருக்கன்று திருமணமான பெண்கள் சிலர் தங்கள் தாலியின் மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வர். இந்தச் சடங்கு ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று நடைபெறும்.
தீமதித் திருவிழாவின் அங்க வழிபாடுகள்
தீமிதித் திருவிழாவை முன்னிட்டுச் செய்யப்படும் சில வழிபாடுகள் ஆடி மாதத்திலேயே இடம்பெறும். ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கான பூசை ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 4) ஸ்ரீ திரெளபதி அம்மனுக்கான கொடியேற்ற வழிபாடு திங்கட்கிழமையும் (ஆகஸ்ட் 5) நடைபெறவுள்ளது.
ஆடிப்பூரம்
ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று இடம்பெறும் ஆடிப்பூர திருநாளில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றப்படும். குழந்தைப்பேறுக்காகவும் திருமணம் நடைபெற வேண்டியும் இவ்வழிபாடு இடம்பெறுகின்றது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் வாட்டர்லூ ஸ்திரீட் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திலும் உள்ள ஆண்டாள் சந்நிதிகளில் ஆடிப்பூர வழிபாடுகள் இடம்பெறும். ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த நாளாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.
ஆடிக் கார்த்திகை
முருகப்பெருமானுக்கான ஆடிக் கார்த்திகை விரத பூசைகள் முருகன் சந்நிதி உள்ள கோயில்களில் இடம்பெறுகின்றன. இவ்வாண்டு ஜூலை 30ஆம் தேதி ஆடிக் கார்த்திகை நாளாக அமைந்தது.
ஆடி செவ்வாய், வெள்ளி வழிபாடுகள்
ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். சிலர் நோன்பிருந்து வழிபடுவர்.
செவ்வாய் வழிபாடு பெண்களுக்கு உகந்ததாகக் கூறப்படுகிறது. ஆடி, தை, மாசி மாதங்களின் செவ்வாய்க்கிழமைகளில் ஒளவையார் விரதமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
வண்ணமயமான மலர், ஆடை அலங்காரங்களுடன் பொலிவுடன் தோற்றமளிக்கும் தெய்வத் திருவுருவங்களை தரிசிக்க பக்தர்கள் இம்மாதம் திரளாய் வந்த வண்ணம் உள்ளனர்.