ஐவண்ணத்தில் மிளிரும் ஶ்ரீ சிவன் கோயில்

3 mins read
efa50fd1-a962-4423-a2d1-35a5c53518b1
கேலாங் ஈஸ்ட்டில் அமைந்துள்ள ஶ்ரீ சிவன் கோயிலின் குடமுழுக்கு விழா ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. - த.கவி

இந்துக் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்துவது காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபு.

கோயிலின் கட்டமைப்பை மேம்படுத்தி, தெய்வீக ஆற்றலை அதிகரிக்கவும், பக்தர்களுக்கு மேம்பட்ட ஆன்மிக அனுபவத்தை வழங்குவதும் குடமுழுக்கு விழாவின் நோக்கம். 

அந்த வகையில் கேலாங் ஈஸ்ட்டில் அமைந்துள்ள ஶ்ரீ சிவன் கோயிலின் மூன்றாவது குடமுழுக்கு விழா ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

170 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில், முன்னதாக, ஆர்ச்சர்ட் ரோட்டிலிருந்து கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2க்கு இடமாறியது.

2008ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, கொவிட்-19 கிருமிப் பரவலால் ஐந்து ஆண்டுகள் தாமதமாக மூன்றாவது குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் கோயில் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. 

“கடந்த ஐந்தாண்டுகளில் பல சவால்களைச் சந்தித்தோம். எடுத்துக்காட்டாக, பக்தர்களுக்குக் கழிவறை வசதிகள் ஏற்புடையதாக இல்லை. மேலும், ஆத்ம லிங்க வழிபாடு செய்ய, பக்தர்கள் பலர் வருவர். ஆனால், இடப்பற்றாக்குறை இருந்தது. எனவே ஆத்ம லிங்க சன்னதியை விரிவுபடுத்திப் புதுப்பித்துள்ளோம்”, என்றார் ஶ்ரீ சிவன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவரான யோகநாதன் அம்மையப்பன், 55.

இந்நிலையில், ஓராண்டாக மேற்கொள்ளப்படும் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளும் மேம்பாட்டுப் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 

குடமுழுக்கு விழாவையொட்டி ஓராண்டாக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளும் மேம்பாட்டுப் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
குடமுழுக்கு விழாவையொட்டி ஓராண்டாக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளும் மேம்பாட்டுப் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. - படம்: த.கவி
திருப்பணி, மேம்பாட்டுப் பணிகளில் 1,000க்கும் மேற்பட்டோர்  பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திருப்பணி, மேம்பாட்டுப் பணிகளில் 1,000க்கும் மேற்பட்டோர்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். - படம்: த.கவி

குடமுழுக்கு விழாவையொட்டி 1,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

நன்கொடையாளர்களின் உதவியுடன் $2.3 மில்லியன் செலவில் செய்யப்பட்ட கட்டுமான, புதுப்பிப்புப் பணிகளில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

“சித்தி விநாயகர், தண்டாயுதபாணி, சண்டிகேசுவரர், முருகன், சனீஸ்வரர், பைரவர் ஆகிய தெய்வங்களுக்குத் தனிச் சன்னதிகளை அமைத்துள்ளோம். அதேபோல், மரபுப்படி அவசியமாகக் கருதப்படும் துவாரபாலகர்களையும் சிவன் சன்னதிக்கு முன்னால் நிறுவியுள்ளோம்”, என்றார் யோகநாதன்.

சிவன் சன்னதிக்குமுன் புதிதாக நிறுவப்பட்டுள்ள துவாரபாலகர்கள்
சிவன் சன்னதிக்குமுன் புதிதாக நிறுவப்பட்டுள்ள துவாரபாலகர்கள் - படம்: த.கவி
சிவன் சன்னதிக்குமுன் புதிதாக நிறுவப்பட்டுள்ள துவாரபாலகர்களில் ஒன்று.
சிவன் சன்னதிக்குமுன் புதிதாக நிறுவப்பட்டுள்ள துவாரபாலகர்களில் ஒன்று. - படம்: த.கவி

குடமுழுக்கு விழா தொடர்பான அனைத்துச் செயல்முறைகளும் இந்து வேத ஆகமத்தைப் பின்பற்றி நடைபெறுவது வழக்கம். 

“ஆகமத்தின்படி, சூரியன், சந்திரன் இரண்டும் கோயிலின் நுழைவாயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவை ஒன்றாக இருந்தால் அமாவாசையை குறிக்கும். ஆகவே, அவற்றை நுழைவாயிலின் இரு பக்கத்திலும் தனித்தனியே வைத்துள்ளோம்”, என்று கூறினார் யோகநாதன். 

இக்கோயிலின் புதுப்பிப்புப் பணிகளில் ஐவண்ணங்கள் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன.

1993ஆம் ஆண்டில் ஶ்ரீ சிவன் கோயிலின் முதல் குடமுழுக்கு விழாவில் சிற்பப் பணியில் ஈடுபட்டார் தமிழ்நாட்டின் 73 வயதான தலைமைச் சிற்பி நாகராஜன்.

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இக்கோயிலில் தன் கைவண்ணம் காட்டியுள்ள 73 வயதான தலைமைச் சிற்பி நாகராஜன்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இக்கோயிலில் தன் கைவண்ணம் காட்டியுள்ள 73 வயதான தலைமைச் சிற்பி நாகராஜன். - படம்: த.கவி

இவர், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இக்கோயிலில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.

“இதற்கு முன்பு, கோயிலின் முழு அமைப்புக்கும் வெள்ளைச் சாயம் பூசப்பட்டிருந்தது. அதன் விளைவாக, நாங்கள் செய்த 108 கரணங்கள் போன்ற பல சிற்ப வேலைகள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இம்முறை, ஐவண்ணங்களைப் பயன்படுத்தி கோயிலைப் புதுப்பித்த பிறகு, எங்களுக்கே பிரமிப்பாகயிருந்தது”, என்றார் சிற்பி நாகராஜன்.

புதுப்பிக்கப்பட்ட மாற்றங்களில் சில.
புதுப்பிக்கப்பட்ட மாற்றங்களில் சில. - படம்: த.கவி
ஐவண்ணங்களைப் பயன்படுத்திப் புதுப்பிக்கப்பட்ட சிற்ப வேலைகளில் ஒன்றான 108 கரணங்கள்.
ஐவண்ணங்களைப் பயன்படுத்திப் புதுப்பிக்கப்பட்ட சிற்ப வேலைகளில் ஒன்றான 108 கரணங்கள். - படம்: த.கவி

அடுத்த 12 ஆண்டுகளுக்கு இவ்வண்ணங்கள் மங்காமல் நீடிக்க தண்ணீர் அடிப்படையிலான சாயம் பயன்படுத்தப்பட்டது.

“முன்னதாக வட இந்தியப் பாணியிலிருந்த இக்கோயில், இம்முறை தென், வட இந்தியக் கலாசாரங்களை இணைத்து இந்தியக் கோயில்களை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கர்நாடகாவின் சிருங்கேரி கோயிலின் பாணியில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தாமரையிலைகள், தூண்கள், வளைவுகள் அனைத்தையும் ராஜஸ்தானின் அபு மலையில் காணலாம்”, என்று தமது சிற்ப வேலைபாடுகள் குறித்துப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் சிற்பி நாகராஜன்.

புதுப்பிக்கப்பட்ட மாற்றங்களில் சில.
புதுப்பிக்கப்பட்ட மாற்றங்களில் சில. - த.கவி
புதுப்பிக்கப்பட்ட மாற்றங்களில் சில.
புதுப்பிக்கப்பட்ட மாற்றங்களில் சில. - படம்: த.கவி

தொழில் ரீதியாகவும், இளஞ்சிற்பிகள் தங்கள் சிற்பக் கலைத்திறனை மேம்படுத்தவும் இங்குள்ள இந்துக் கோயில்கள் சிற்பக் கலைஞர்கள் பலருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார் சிற்பி நாகராஜன். 

“எஸ் நாகராஜன் தலைமையில் சிற்பக் கலைஞர்கள் 20 பேர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். குடமுழுக்கு விழாவிற்குத் தலைமையேற்க பிள்ளையார்பட்டியிலிருந்து சிவ ஶ்ரீ பிச்சை சிவாச்சாரியார் விழாவன்று சர்வ சாதகத்தை நடத்தவிருக்கிறார்”, என்றார் 50 வயதான தலைமை அர்ச்சகர் எம். மணிசேகர் சிவாச்சாரியார்.

குடமுழுக்கு விழா பற்றியும் அதை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள https://heb.org.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்