தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராக்ஹேம்டனில் சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் மேடை நிகழ்ச்சி

3 mins read
2bd11a05-8324-4d2d-80f7-cb8127dcc791
இசை & நாடக நிறுவனம் (Music & Drama Company) நடத்தும் ‘தி சிங்கப்பூரா எக்ஸ்பிரஸ்’. - படம்: எஸ்பிஎச் மீடியா

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள ராக்ஹேம்டன் நகரில் சிங்கப்பூரின் பல இன, பல கலாசார, பல சமயக் கூறுகளைப் பறைசாற்றும் ‘தி சிங்கப்பூரா எக்ஸ்பிரஸ்’ எனும் இயல், இசை, நாடக நிகழ்ச்சி நடந்துவருகிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படை கடந்த 34 ஆண்டுகளாக ராக்ஹேம்டன் அருகிலுள்ள ஷோல்வாட்டர் பே பயிற்சிப் பகுதியில் நடத்திவரும் ராணுவப் பயிற்சிக்கு அந்த நகரில் வாழும் சமூகத்தினரின் ஆதரவிற்கு நன்றி நல்கும் பொருட்டு அந்தக் கலைப் படைப்பு இலவசமாக நடத்தப்படுகிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக 1973ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இசை & நாடக நிறுவனம் (Music & Drama Company) நடத்தும் இந்த மேடை நிகழ்ச்சி, கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 11) காலை தொடங்கியது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சியை மொத்தம் எட்டு முறை அரங்கேற்றுகின்றனர் ஏற்பாட்டாளர்கள். இவ்வாரத்தின் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாள்களிலும் தலா இரண்டு முறை இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து இசை & நாடக நிறுவனத்தைச் சேர்ந்த 60 பேர் ராக்ஹேம்டனுக்கு வந்துள்ளனர். அவர்களில் முழுநேர தேசிய சேவையாளர்கள் 24 பேரும் அடங்குவர்.

சிங்கப்பூரின் மலாய், சீன, இந்திய சமூகத்தின் வெவ்வேறு கூறுகள் நிகழ்ச்சியில் அங்கம் வகித்தன.

‘முன்னேறு வாலிபா’ தமிழ் பாடல் அவற்றில் ஒன்று. அதைத் தொடர்ந்து புதுமையைப் புகுத்தும் விதமாக இந்திப் பாடலும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

“புதுமையாகக் கொண்டாட எண்ணினோம். அதோடு, ராக்ஹேம்டனில் உள்ள சமூகத்தினருக்கு பாலிவுட் மீதான ஆர்வம் கோலிவுட்டைவிட அதிகம் என்பதை அறிந்தோம். அதனால் பார்வையாளர்களின் ரசனையைக் கருத்தில்கொண்டு இந்திப் பாடலை இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினோம்,” என்று கூறினார் ‘தி சிங்கப்பூரா எக்ஸ்பிரஸ்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேவின் பிரன்டன் ராஜ் குமார், 29.

‘தி சிங்கப்பூரா எக்ஸ்பிரஸ்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேவின் பிரன்டன் ராஜ் குமார்.
‘தி சிங்கப்பூரா எக்ஸ்பிரஸ்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேவின் பிரன்டன் ராஜ் குமார். - படம்: எஸ்பிஎச் மீடியா

2018ஆம் ஆண்டுமுதல் இந்நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றும் கேவின், தமது பள்ளிப் பருவம் முதலே மேடை நாடகத்தில் ஆர்வமுடையவர்.

கேவின் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மேடைப் படைப்பு மீதான ஆர்வம் தொடங்கியது. பல இசை நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் பங்கெடுத்துவந்தார். பின்னர் தேசிய சேவையைத் தொடங்கியபோது இசை & நாடக நிறுவனத்தில் இணைந்தார்.

மேடையில் பல பரிணாமங்களில் பணியாற்றியுள்ள கேவினுக்குப் பெரிய அளவிலான நாடகப் படைப்புகளைத் தயாரிப்பதும் இயக்குவதும் இயல்பாகக் கிடைத்த வாய்ப்புகள்.

வசனங்களையும் இந்நாடகத்திற்கு எழுதியுள்ள கேவின், சிங்கப்பூரை அடையாளப்படுத்தும் வெவ்வேறு கூறுகளை கதைக்கருவில் கொண்டுவருவதுடன் ஆஸ்திரேலியாவில், குறிப்பாக ராக்ஹேம்டனில் உள்ள மக்களுக்கு ஏற்றவாறும் அவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் உள்ள அம்சங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.

முதல் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 700 பேர் கலந்துகொண்டனர். அனைவருமே கைதட்டி ரசித்து உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

நாடகக் கலைஞர்கள் சில அங்கங்களில் பார்வையாளர் பகுதிக்கு வந்து கலந்துறவாடும் வகையில் அமைந்திருந்த பாணி மிகவும் பிடித்திருந்ததாகப் பலர் கருத்துரைத்தனர்.

அரங்கத்தின் நுழைவாயில் அருகே வெவ்வேறு இனத்தவரின் பாரம்பரிய உடைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்