உள்ளூர் இசையும் இந்தியக் குரல்களும் இணையும் மேடை

2 mins read
0af8cc11-97c2-48e9-8fd2-29ec7c74583b
இரண்டாவது முறையாக நடைபெறும் ‘கிராண்ட் மியூசிக்கல் ஸ்டார் நைட்’ நிகழ்ச்சியில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுமான பிரியங்கா என்.கே., ராஜகணபதி ஆகியோர் சிறப்புப் பாடகர்களாகப் பங்கேற்கிறார்கள். - படம்: எஸ்ஐஎஸ்ஓ புரொடக்‌ஷன்ஸ்

செவிகளுக்கு விருந்தாக அமையும் வண்ணம் ‘கிராண்ட் மியூசிக்கல் ஸ்டார் நைட்’ நிகழ்ச்சி இரண்டாவது முறையாக சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது.

‘எஸ்ஐஎஸ்ஓ புரொடக்‌ஷன்ஸ்’ (SISO Productions) வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5 மணிக்குக் கார்னிவல் திரையரங்குகளில் இடம்பெறும்.

உள்ளூர் இசைத் திறனாளர்களைக் கொண்டாடுவதும் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களைச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்து இங்குள்ளோருக்கு அறிமுகப்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்கள் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், புகழ்பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ பாடல் போட்டியின் எட்டாவது பருவ வெற்றியாளர் ஸ்ரீதர்சேனா சிறப்புப் பாடகராக மேடையேறினார்.

“உள்ளூர்த் திறமைகளுக்கு வளமான மேடையை உருவாக்குவதும், இசையை விரும்பும் அனைவருக்கும் தரமான அனுபவத்தைக் குறைந்த விலையில் வழங்குவதுமே எங்களின் குறிக்கோள்,” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுமான பிரியங்கா என்கே, ராஜகணபதி ஆகியோர் சிறப்புப் பாடகர்களாகப் பங்கேற்கிறார்கள். அண்மையில், இவர்கள் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகளில் மேடையேறினர்.

“இவர்களின் பாடல்களும் காணொளிகளும் யூடியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இருவரையும் சிங்கப்பூருக்கு அழைத்துவர முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று நிகழ்ச்சியின் மற்றோர் ஒருங்கிணைப்பாளரான வள்ளியப்பன் தெரிவித்தார்.

20 முதல் 25 பேர் கொண்ட நேரடி இசைக்குழு இசையமைக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில், 30 முதல் 35 பாடல்களுடன் மூன்று மணி நேர இசை விருந்தை வருகையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

மேலும், உள்ளூர் இளம் இசைத் திறனாளர்களுக்கும் இந்த மேடையில் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படும்.

“இது ஓர் இசை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் பலருக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும். எங்கள் கலைஞர்கள் தீவிரமாகப் பயிற்சி செய்து, பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கத் தயாராக இருக்கிறார்கள்,” என்றார் வள்ளியப்பன்.

“சிங்கப்பூரில் பல இசை நிகழ்ச்சிகளுக்கு $250 அல்லது அதற்கு மேற்பட்ட தொகை நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாறாக, எங்கள் நிகழ்ச்சிக்கான அதிகபட்ச நுழைவுச்சீட்டு விலையே $65தான். எனவே, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இசையை ரசிக்கலாம்,” என்றார் ராஜேஷ்.

உள்ளூர்த் திறமைகளை வளர்க்கும் இந்த முயற்சிக்கு சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவைக் கேட்டுக்கொண்ட ஏற்பாட்டாளர்கள், இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்த விரும்புவதாகக் கூறினர்.

“திறமைகளை வெளிக்கொணரவும், தரமான இசையை ரசிக்கவும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கருதுகிறோம். பார்வையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தந்தால், அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை இன்னும் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று வள்ளியப்பன் கூறினார்.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க விரும்புவோர் https://www.ticketnow.sg/event/grand-musical-star-night/125 என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்