‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர்’ நெடுந்தொலைவோட்டத்தில் பங்குபெறுவோர் இவ்வாண்டு புதிய இடத்தில் ஓட்டத்தை நிறைவுசெய்வர்.
ஓட்டம் ‘எஃப்1 பிட்’ கட்டடத்தில் தொடங்கி, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான ஆண்டர்சன் பாலத்தில் நிறைவடையும்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், 1910 மார்ச் 12ஆம் தேதி அன்றைய நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஆளுநரால் திறந்துவைக்கப்பட்ட ஆண்டர்சன் பாலம், வரலாற்றுச் சிறப்புமிக்கது.
தேசிய தின அணிவகுப்பு, எஃப்1 கார் பந்தயம் போன்றவை நடைபெறும் இடமாகவும் இருந்துள்ளது.
சிங்கப்பூர் ஆற்றோரமாக, ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், எஸ்பிளனேட் போன்ற முக்கியச் சின்னங்களின் சுற்றத்தில் அழகான காட்சிகளை ஆண்டர்சன் பாலம் வழங்குவதோடு, போக்குவரத்துக்கு வசதியாகவும் உள்ளது.
“ஓடுபவர்களில் பலரும் ஒவ்வோர் ஆண்டும் பங்குபெறுபவர்கள்; இதற்கென சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்பவர்கள். அதனால் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு மறுமலர்ச்சி பெற்ற ஓட்டப்பந்தய அனுபவத்தை வழங்க விரும்புகிறோம்.
“ஓட்டத்தை முடிக்கும்போது கண்ணுக்கினிய விருந்தாக மட்டுமல்லாமல், பல மறக்கமுடியாத நினைவுகளை நல்கும் இடமாகவும் ஆண்டர்சன் பாலம் இருக்கும்,” என்றார் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் ‘அயர்ன்மேன்’ குழும ஆசிய நிர்வாக இயக்குநர் ஜெஃப் எட்வர்ட்ஸ்.
இவ்வாண்டின் ஓட்டத்தில் புதிய அம்சங்கள்
ஐவர் கொண்ட அணிகளாகப் பங்குபெறும் எகிடன் ஓட்டம், இவ்வாண்டு மீண்டும் இடம்பெறுகிறது. 9.3 கி.மீ., 8.3 கி.மீ., 8 கி.மீ., 14 கி.மீ., 2.6 கி.மீ. என ஒவ்வொருவரும் ஓட்டத்தின் வெவ்வேறு பகுதிகளை ஓடி மொத்தத்தில் 42.2 கி.மீ. தூரத்தை ஓடி முடிப்பர்.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு புத்தாக்க அம்சமாக, ஆறு வயது வரையிலான சிறுவர்களுக்கு 600 மீட்டர், ஏழு முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு 900 மீட்டர் ஓட்டங்கள் நடைபெறும்.
பயிற்சி ஓட்டங்கள்
ஆகஸ்ட் 31 முதல், சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்திலும் கரையோரப் பூந்தோட்டங்களிலும் எட்டு சமூக ஓட்டங்களை ஏற்பாட்டுக் குழுவினர் நடத்தவுள்ளனர். போட்டிக்குப் பதிவுசெய்யாத பொதுமக்களும் இவற்றில் பங்குபெறலாம்.
போட்டி நாள்கள்
மூன்று நாள்கள் நடைபெறும் போட்டிகள், வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) சிறுவர் ஓட்டமான ‘கிட்ஸ் டேஷ்’ உடன் தொடங்கும்.
அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (நவம்பர் 30) 5 கி.மீ., 10 கி.மீ. ஓட்டங்கள் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1), அரை நெடுந்தொலைவோட்டமும் முழு நெடுந்தொலைவோட்டமும் நடைபெறும். எகிடன் ஓட்டமும் இவற்றுடன் இணைந்து நடக்கும்.
அதிகரிக்கும் பங்கேற்பு
சென்ற ஆண்டைவிட 40 விழுக்காடு அதிகமாக, 33,000க்கும் மேற்பட்டோர் இவ்வாண்டின் நெடுந்தொலைவோட்டத்திற்கு இதுவரை பதிவுசெய்துள்ளனர். இதில் 73 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் முதன்முறையாக இப்போட்டியில் பங்குபெறுகின்றனர்.
போட்டிகளுக்கான பதிவுகள் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி இன்றும் தொடர்கின்றன. மேல்விவரங்களுக்கு https://www.singaporemarathon.com இணையத்தளத்தை நாடலாம்.