நாம் தமிழில் பேசுவனவற்றை உடனடியாக வேறு 9 மொழிகளில் மொழிபெயர்த்துத் தரக்கூடிய 'உடனடி ஒலி மொழி பெயர்ப் புச் சாதனம்' உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவது பலரும் அறிந்ததே. ஏ-ஸ்டார் ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியில் தமிழ்மொழியையும் சேர்த்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன் அந்த முயற்சியில் முழுமூச்சாக இயங்கி வருகிறார் தமிழ்மொழி ஆர்வலர் திரு மு. மெய்யப்பன். இந்த முயற்சியில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மென் பொருள் நாம் பேசுவதை அப் படியே தமிழ்மொழியில் திரையில் காட்டுகிறது. கல்வி, வர்த்தகம் போன்ற பல துறைகளில் தமிழ் மொழி தங்கு தடையின்றி பல நாடுகளுக்கும் உலா வர வழிவகுக்கவுள்ள இந்தச் செயலியை உருவாக்குவதற்கான பணிகள் நிதிப் பற்றாக் குறையால் தடை பட்டுள்ளன. பணி தொடர ஆவன செய்யும் வகையில் தமிழ்மொழி கற்றல் மேம்பாட்டுக் குழு, ஏ=ஸ்டாரின் மனித மொழி ஆராய்ச்சிக் குழுவை சென்ற ஜனவரி மாதம் ஏழாம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தியது.
இம்மாதம் முழுவதும் கொண்டாடப்பட்ட தமிழ்மொழி விழா நிகழ்வுக்கான பணிகளில் கவனம் செலுத்தியதால் இவ்விரு தரப்புகளுக்கிடையே அடுத்த சந்திப்பு உடனடியாக நிகழவில்லை. மீண்டும் இவ்விரு தரப்புகளும் சந்தித்து உரையாடி, அரசாங்கத் திடமிருந்து நிதி உதவி பெற்றுத் தருவதற்கான பரிந்துரையானது வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரனிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக திரு மெய்யப்பன் கூறினார். இதற்கிடையே, லீ குவான் இயூ இருமொழிக் கொள்கை நிதி உதவித் திட்டத்திலிருந்தும் உதவி பெற முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. என்றேனும் ஒரு நாள் இந்தத் திட்டத்தின் பணிகள் இனிதே நிறைவுற்று உடனடி மொழி பெயர்ப்புச் சாதனம் தமிழர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்புவதாக திரு மெய்யப்பன் சொன் னார். இந்தத் திட்டம் குறித்த மேல் விவரங்களுக்கு திரு மு. மெய்யப்பனை 96166961 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
உடனடி ஒலி தமிழ் மொழிபெயர்ப்புச் சாதன உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க ஆவன செய்யும் வகையில் ஏ-ஸ்டாரின் மனித மொழி நுணுக்க ஆய்வுப் பிரிவும் தமிழ்மொழி கற்றல் மேம்பாட்டுக் குழுவும் இவ்வாண்டு ஜனவரியில் கலந்தாலோசித்தன. இந்தத் திட்டத்தில் தமிழ் மொழியை இணைப்பதற்கான பெரும் முயற்சிகள் மேற்கொண்டு முழுமூச்சாக இயங்கி வரும் மு. மெய்யப்பன் (இடமிருந்து மூன்றாவது), ஏ-ஸ்டாரின் மனித மொழி நுணுக்க ஆய்வுப் பிரிவின் தலைவர் டாக்டர் லீ ஹாய் ச்சோ (வலக்கோடி). படம்: ஏ-ஸ்டார்

