முஹம்மது ஃபைரோஸ்
காலஞ்சென்ற கணவர் எந்தக் கல்லூரியில் பயின்றார் என்பதை நினைவுகூர முடியாதபோது சற்று தடுமாறுகிறார் அனிஸ் ஃபாத்திமா, 39. "நான் அவரை மறக்க முயல்கிறேன்," என்று கண்ணீர் மல்கக் கூறும் இவர், "என் நண்பர்கள், சக ஊழியர்கள் எவ்வளவோ சொல்லியும் கடந்த ஏழு ஆண்டுகளாக என்னால் அவரை மறக்க முடியவில்லை," என்றார். திரு முஹம்மது ஃபாருக், அனிஸ் ஃபாத்திமாவை விட்டு மிகுந்த வேதனை தரும் விதத்தில் பிரிந்ததே இவருடைய தீராத வலிக்குக் காரணம். 2009ல் திரு ஃபாருக் புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஒரு புளோக்கிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவருடன் அவர்களின் ஒரே பிள்ளை ஃபஹிம்மையும் கொண்டு சென்றது அனிஸுக்கு பேரடியைத் தந்தது.
திரு ஃபாருக் விட்டுச் சென்ற குறிப்பில், தமக்கு சுகாதாரப் பிரச்சினை இருந்ததாகவும் 'ஆட்டிசம்' குறை பாடிருந்த ஃபஹிம்மை வளர்க்கும் சுமையிலிருந்து மனைவியை விடுவிக்கவும் இந்த முடிவை எடுத் ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அசம்பாவிதம் அனிஸுடைய வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. அவருடைய இறைப்பற்றும் அவரின் அன்புக்குரியவர்கள் அளித்த பேராதரவும் நீங்கா துன்பத்திலிருந்து அனிஸ் மீண்டுவர உதவியது. அதற்கு ஆறு ஆண்டுகள் பிடித்தன. தம்முடைய ஆழ்ந்த துன்பத்திலிருந்து விடுபடும் உபாய மாக மற்றவர்களுக்கு உதவி வரும் இவர், 'கிளப் ஹீல்' எனும் அறநிறுவனத்தில் மதியாலோசகராகப் பணியாற்று கிறார். மன நோயினால் அவதியுறுபவர்களுக்கு மறுவாழ்வு, ஆலோசனைச் சேவைகளை 'கிளப் ஹீல்' அறநிறுவனம் வழங்குகிறது.
ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற அனிஸ், தமிழ்நாடு தக்கலை நகரில் மூன்று பிள்ளைகளில் இளையவராகப் பிறந்தவர். காலஞ்சென்ற தந்தை பொதுச் சேவை ஊழியராக இருந்தார். தாய் இல்லத்தரசியாக உள்ளார். முதுகலைப் பட்டக் கல்வியை முடித்த வுடன் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடும் முயற்சி பலனளிக்காததால் அனிஸ் பல்கலைக்கழகத் தகுதித் தேர்வில் சிறப்பாகத் தேறி திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலைக் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார்.
ஆனால், ஆறு மாதங்களில் இவர் பணியைக் கைவிட நேர்ந்தது. காரணம், குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்துவிட்டார். அனிஸுடைய அக்காவும் மச்சானும் 400 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஜகதாப்பட்டினத்துக்குச் சென்று திரு ஃபாருக்கை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது அவர் சிங்கப்பூரில் 'சீகேட்' நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணம் ஒரு வாரத்தில் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 2001ல் அன்பர் தினத்தன்று அது நடந்தது. 2002ஆம் ஆண்டு ஏப்ரலில் ஃபஹிம்மை ஈன்றெடுத்தார் அனிஸ்.
ஆரம்பத்தில் ஃபஹிம்முக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாவிடிலும் பின்னர் அவருக்கு 'ஆட்டிசம்' குறைபாடு இருந்ததாகத் தெரிய வந்தது. பள்ளியில் அவருடைய துரு துருத்தல் மிக்க நடத்தையால் ஆசிரியர்கள், மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. ஒரு கட்டத்திற்குப் பிறகு ஃபஹிம்மின் நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாததால் பள்ளியை விட்டு நிறுத்திக் கொள்ளும் படி பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. சில நாட்கள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையன்று, கவலையுடன் இருந்த அனிஸுக்கு ஆறுதல் கூறிவிட்டு ஃபஹிம்மை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறினார் ஃபாரூக். வெகுநேரமாகியும் கணவரும் மகனும் வீடு திரும்பாமலும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியாமலும் போகவே, தேடிச் சென்ற அனிஸுக்கு அவர்களுடைய விபரீத முடிவு தெரியவந்தது.
இதற்கிடையே இந்தியாவுக்குத் திரும்பி குடும்பத்துடன் இரு ஆண்டுகள் செலவிட்ட அனிஸுக்கு குடும்பத்தின் அன்பு, ஆதரவுடன் இறைப்பற்றும் அவரைக் காப்பாற்றின. 2013ல் சிங்கப்பூர் திரும்பிய அவர், சமய வகுப்புகளுக்குச் சென்று தொண்டூழியத்திலும் ஈடுபட்டார். அங்கு கிடைத்த நல்ல நண்பர் ஒருவரிடம் தம் கதையைச் சொல்ல 'கிளப் ஹீல்' அறநிறுவனத்தில் சேரும் வாய்ப்புப் பெற்றார். அங்கு ஆலோசகர் பயிற்சி பெற்று இப்போது முழுநேர மதி ஆலோசகராகப் பணிபுரிகிறார் அனிஸ்.
நோன்புப் பெருநாளைக் கணவர், மகனுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய கால கட்டம் அனிஸுக்கு முன்பு இருந்தது. ஆனால் இப்போது இங்கு தனியாக வாழும் இவருக்கு நோன்புப் பெருநாள் தினத்தன்று இந்தியாவிலுள்ள தம் குடும்பத்துடன் ஒன்றிணைவதே மனநிறைவு தருகிறது. "கடந்த சில ஆண்டுகளாக நோன்புப் பெருநாளை இங்கு கழித்துள்ளேன். அப்போது பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, உணவுப் பதார்த்தங்களை அண்டைவீட்டாருடன் பகிர்ந்துகொண்டேன்," என்ற இவர், இந்தியாவுக்குச் சென்று சொந்த பந்தங்களுடன் நல்ல நாளைக் கழிக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.

