முஹம்மது ஃபைரோஸ்
மொரிஷியஸ் தீவைப் படைத்துவிட்டு, அதன் சாயலில் சொர்க்கத்தை இறைவன் படைத்தான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கின்றனர் அந் நாட்டு மக்கள். இயற்கை எழில் கொஞ்சும் இந்தத் தீவு மிக அழகானது. அழகிய கடல் பார்ப்போரை மெய் மறக்கச் செய்யும் வனப்புடையது. மிகவும் தெளிவான தண்ணீர் கொண்ட கடலின் அற்புதமான கரை மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பேணிக்காக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர் தூரத்தில் இந்தியப் பெருங்கடலில் மடகஸ்கர் என்ற பெரிய தீவுக்கு அருகே அமைந்துள்ள அழகிய சிறிய தீவு மொரிஷியஸ். உலக வரை படத்தை உற்று நோக்கினால்தான் இந்தச் சிறிய புள்ளியை நாம் காண முடியும்.
தீவின் மொத்த நிலப்பரப்பு 2,045 சதுர கிலோமீட்டர். அது சிங்கப்பூரைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது. மொரிஷியஸில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 'பிளேக் ரிவர் கார்ஜஸ் பார்க்' என்ற இயற்கை வனப்பு நிறைந்த இடத்தில் அழகிய அருவியும் நீர்வீழ்ச்சியும் உள்ளன.
மொரிஷியஸ் தீவின் 330 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரமும் எழில் கொஞ்சும் கடற்கரையும் கண்டுகளிப்பதற்கு அருமையான அனுபவத்தைத் தருகின்றன. படம்: மொரிஷியஸ் பயணத்துறைக் கழகம்

